Wednesday, May 08, 2019

வாழும் வரைக் காதலிப்போம்



காதலர் இருவர்
காதலிக்கும்
காலம் தெரியுமா?
தொட்டும் தொடாமலும்..
பட்டும் படாமலும்
எப்போதும் ஒரு சிலிர்ப்புடன்

காதலில் கலந்திருக்கும்
அந்தக் காலம்
கற்பனை வானில் 
கனவுகள் சிறகடிக்கும் காலம்..

வாழ்க்கை விளையாட்டில்
கண்ணாமூச்சி ஆடும்

கண்ணைக் கட்டிக் கொண்டு
தெரிந்தே தேடுவோம்
தேடியது கிடைக்குமா?

குறிஞ்சி நிலம் தெரியுமா?
அந்த
மலை மங்கையின்
மேலாடைப் பட்டு
மலர்ந்த நிலம் தான்
இந்த முல்லை….
குறிஞ்சியின் பிள்ளை
அடர்ந்த காடே
அதன் எல்லை

காதலிக்கும் காலத்திற்கும்
முல்லை நிலத்திற்கும்
என்ன முடிச்சு இங்கே?

காதல் செய்யும் காலம் இருக்கிறதே
அது
காட்டாற்றுக் காலம்

காட்டாறு
தன் எல்லையைத்
தானே அமைத்துக் கொள்ளும்
கரைக் கொண்டு நிற்காது
கரைப் புரண்டு
தன் இலக்கு நோக்கியே ஓடும்

காதலர்களை
கட்டுப்படுத்திப் பாருங்கள்
காட்டாற்றின் வேகம்
அப்போது புரியும்
உங்களுக்கு

முல்லை நில
மான் நோக்கும்
மங்கையிவள்
மட நோக்கும்
நேர் ஒக்கும்
ஒரு நோக்கென்பான் காதலன்
கல்யாணத்திற்குப் பின்
கேட்டுப் பாருங்கள்
மருண்டு விழிப்பான் இவன்

சூரியன் தன்
கதிர் கரம் நீட்டித்
தொடமுடியாத
காட்டு நிலப் பெண்ணை
மழைக் காதலன்
மகிழ்ச்சியில் நனையவைப்பான்

காதலர் மனமும் இப்படித்தான்
பெற்றவர் மற்றவர்
பேச்சை மனத்தில் நுழையவிடாது..
அவளுக்கு
அவன் பேச்சும்
அவனுக்கு அவள்
கண் வீச்சும்
நெஞ்சில்
உயிர்ப் பூக்கள் மலரச்செய்யும்

அங்கே
கார் மேகம்
இங்கே
கருங்கூந்தல்
அங்கே
முல்லைப் பூக்கள்
இங்கே
வெள்ளைப் பற்கள்

ஆதி மனிதன்
மலையில் வாழ்ந்தானாம்
மலையில் மனித நடமாட்டம்
மிகுந்துப் போக
சற்றே இறங்கி
காட்டில் காலடி
எடுத்து வைத்தானாம்
முதல் முல்லை மனிதன்

மனித இனத்தின்
இரண்டாம் நிலை
இப்படித்தான்
எட்டப்பட்டது

சிறுவர்களாய்
சிரித்திருந்தவர்கள்
வெட்கப் பட்டு
வியர்த்து
இளைஞர்களாய்த் தன்
இரண்டாம் பருவம்
தொட்டவுடன் தானே
காதல் கொள்கிறார்கள்

காத்து ‘இருத்தல்’ தானே
காதலிலும் நாம் காண்பது….

காடுகள் அழிந்தால்
நாடுகள் அழியும்
தெரியுமா உங்களுக்கு?

காதல் அழிந்தால்
மனிதம் அழியும்…

நீங்கள் காதலித்திருக்கிறீர்களா?

காதலிக்கத் தெரியவில்லை
என்றால்
கவிபடைக்க முடியாது

நான்
படைப்பாளி
என் நினைவு சிதறும் வரை
எழுதிக் கொண்டிருப்பேன்..
அதுவரைக்
காதலித்துக் கொண்டும் இருப்பேன்

என் மனத்தில்
காதல் அழிந்துப் போகும் போது
என்
எழுத்தும் நின்றுப் போகும்
அதற்கு
ஒரு நொடி முன்பே
என் உயிர்
அற்றுப் போயிருக்கும்

வாழும் வரைக் காதலிப்போம்
மரங்களையும் காடுகளையும் கூட….