Saturday, November 02, 2019

மழையின் பாடல்

Khalil Gibran's poem
'The Song of the Rain'
In Tamil...
எனது இன்னொரு முயற்சி...

மழையின் பாடல்

நான்

வானிலிருந்து வீழும்

வெள்ளி இழை…

 

இயற்கை தன்

வயல்களையும்,

பள்ளத்தாக்குகளையும்

பொலிவாக்க

என்னை

அழைத்துக் கொள்கிறாள்…

 

நான்

விடியலின்

தோட்டத்தை அலங்கரிக்க

இறைவனின்

மகுடத்திலிருந்து

உதிர்க்கப்பட்ட

முத்து...

 

நான் 

மேகத்தின் கண்ணீராய்

கொட்டும் போது

மலைகள் சிரிக்கின்றன…

 

நான்

'தாழ்ந்து' 

தொடும் போது

மலர்கள்

'மலர்ச்சி' கொள்கின்றன…

 

நான் 

வீழும் போது

உலகம் மகிழ்ந்து

எழுகிறது….

 

பூமியும் மேகமும்

காதலர்கள்..

நான்

அவர்கள் அன்பின்

தூதுவன்…

 

நான்

பலர் தாகத்தைத்

தீர்க்கிறேன்..

 

பலர் காயங்களை

ஆற்றுகிறேன்…

 

இடி எனது

வருகையை

உலகுக்குக் கூறும்

 

வானவில்

எனது

நிறைவைச்

சொல்லும்...


அகிலத்தில் 

ஐம்பூதங்களின்

சேர்கையாய்

பிறந்த உயிர்கள் எல்லாம் 

மரணத்தின்

விரிந்த சிறகுகள் கொண்டு 

மேலெழும்பி

பேரான்மாவை அடைவது போல்...

நானும்

கடற்பரப்பில் இருந்து 

தோன்றி

காற்றோடு

மேலெழும்புகிறேன்…


நீரின்றி வறண்டு

எனக்காகக் காத்திருக்கும்

வெளியைக் கண்டால்

காதலோடு கீழிறங்கி

மலர்களையும்

மரங்களையும்

அணைத்துக் கொள்கிறேன்…

 

நான்

தூறலாய் உங்கள்

ஜன்னல் தொடும் போது

எனது மெல்லிசையை

எல்லோரும் கேட்கிறார்கள்

மென்மையான சிலரே

மனத்தில் கொள்கிறார்கள்…

 

காற்றின் சூடு

என்னைப் பிரசவித்தது…

நானோ அதை

தணித்து விட்டேன்…

 

பெண் ஆணிடமிருந்து

பெற்ற பலத்தால்

அவனையே வெல்வது போல்…

 

நான்

கடலின் பெருமூச்சு

சமவெளியின் சிரிப்பு

வானத்தின் கண்ணீர்…

எனவே

 

பாசத்தின்

பெருமூச்சோடு,

ஆன்மவின்

மகிழ்ச்சியோடு

எண்ணற்ற 

நினைவுகளின்

கண்ணீரோடு

 

எனது அன்பைப்

பொழிகிறேன்…

--
S.UMA
9003014271

Friday, November 01, 2019

கண்ணீரும் புன்னகையும்...

My attempt to write Khalil Gibran's poem ' A Tear and a Smile' in Tamil...

கண்ணீரும் புன்னகையும்
______________________________
எனது வாழ்க்கை 
கண்ணீராலும்
புன்னகையாலும்
ஆனதாக இருப்பதையே 
நான் விரும்புகிறேன்...

எனது
துயரங்களை எல்லாம் 
சந்தோஷங்களாக
மாற்றிக் கொள்ள
விழையமாட்டேன்...

எனது  கண்ணீர் 
துக்கத்தால் தோன்றி 
சோகத்தின் வெளிப்பாடாக
நகைப்புக்குள்ளாவதை 
நான் நாட மாட்டேன்...

ஆனால் 
எனது வாழ்க்கை 
கண்ணீராலும்
புன்னகையாலும்
ஆனதாக இருப்பதையே 
நான் விரும்புகிறேன்...

எனது கண்ணீர் 
என்னைத் தூய்மையாக்கும்...
வாழ்வின் இரகசியங்களையும்
அதன் மர்மங்களையும்
எனக்கு அடையாளம் காட்டும்...

எனது புன்னகை 
என் மக்களின் 
மிக அருகில் 
என்னை அழைத்துச் செல்லும்...

படைப்பின் மகத்துவத்தை
எனக்கு உணர்த்தும்...

எனது கண்ணீர் 

துவண்ட நெஞ்சங்களின்
துணையாக 
என்னைச் சேர்க்கும்....

எனது புன்னகை 

வாழ்வின் 
அர்த்தத்தை 
நான் அறியச் செய்யும்...

நான் 
மனக்கசப்போடு
நம்பிக்கையின்றி
வாழ்வதைவிட

ஆசையோடும்
ஏக்கத்தோடும்
இறப்பதையே 
விரும்புகிறேன்...

அன்பிற்கும்
ஆராதனைக்குரிய அழகிற்குமான
எனது தேடல்..
எப்போதும் என் நெஞ்சில்
நிலைத்திருக்க வேண்டும்...

தேடல் இல்லாத போது
வாழ்க்கை 
இழிவானதாகிறது....

அன்பிற்காக ஏங்கும் 
ஆன்மாவின் ஒலி
மெல்லிசையை விட
இனிமையானது....

மலர்கள் 
மாலையில் 
ஏக்கத்தோடு தன்
இதழ்களை மூடிக்கொள்கின்றன...

காலையில் 
கதிரவனின் காதல்
முத்தத்தால் தங்கள் 
இதழ் விரிகின்றன....

பூக்களின் வாழ்க்கை 
ஏங்கியும், நிறைவேறியும்
நகர்கிறது...

கண்ணீரும் புன்னகையுமாய்...

மேகம்
கடலிலிருந்து
எழுந்து
நிலம் கடந்து
மலை அடைந்து
சில்லென்று தென்றல் தீண்ட
மழையாய் பொழிகிறது...

மழைநீர் 
மலையில் விழுந்து.,
வயலில் விளைத்து 
ஓடையாய் ஓடி மீண்டும் 
கடலிலே கலக்கின்றது....

மேகங்களின் பயணம் 
பிரிந்தும் சேர்ந்தும் 
தொடர்கிறது...

கண்ணீரும் புன்னகையுமாய்...

ஆன்மாவின் பயணமும்
அப்படியே...

பேரான்மாவிலிருந்து
பிறந்து
துயரத்தின் மலைக்கடந்து,
சந்தோஷ சமவெளி தாண்டி,
மரணத்தின் 
மென் தீண்டலால்
மீண்டும் 
தனது இருப்பிடமான
பேரான்மாவையே அடைகிறது...

இறைவனை நோக்கிய
ஆன்மாவின் பயணம்...

கண்ணீரும் புன்னகையுமாய்

எனவே

எனது வாழ்க்கை 
கண்ணீராலும்
புன்னகையாலும்
நிறைந்து இருப்பதையே 
நான் விரும்புகிறேன்...

Tuesday, October 29, 2019

விடுதலை

Rabindranath Tagore's poem
'FREEDOM' in Tamil. 

விடுதலை 
_____________

என் தாய்த்திரு நாடே!!!

உனக்கு 
உன் பயங்களில் இருந்து
விடுதலை வேண்டுகிறேன்....

நீ
பழமையின் சுமையால் 
தலைக்கவிழ்ந்து
முதுகு வளைந்து 
கிடக்கிறாய்...
வருங்காலத்தின் சைகைகளை
அறிய முடியாமல்....
குருடாகி நிற்கும் உனது
இந்நிலையிலிருந்து...
உனக்கு 
விடுதலை வேண்டுகிறேன்....

உன் 
சோம்பலில் இருந்து
உனக்கு 
விடுதலை வேண்டுகிறேன் 

நீ
இரவின் நிசப்தத்தில் 
உண்மையின் 
பாதைக் காட்டும் 
நட்சத்திர வெளிச்சத்தில் 
நம்பிக்கை கொள்ளாமல் 
ஒளிந்துக் கொள்கிறாய்....

என் தாய்த்திரு நாடே!!!
விதியின் பிடியில் இருந்தும்
உனக்கு
விடுதலை வேண்டுகிறேன்....

நீ
கடலில் மிதக்கும் 
கட்டுமரமாய் இருக்கிறாய்...
உனது பாய்மரம்
காற்றின் வீச்சால்
திக்குத் தெரியாமல் 
அலைகழிக்கப்படுகிறது...
உன் துடுப்புகளோ
மரணத்தின் 
கொடிய  பிடியில்
அழுத்தப்படுகிறது...

நீ
கயிற்றால் ஆடும்
பொம்மலாட்டப் பதுமையாய் 
இருக்கிறாய்...

குறிக்கோளற்று 
பழக்கத்தால் ஆட்டுவிக்கும் 
உன் எஐமானனுக்காக
பயத்தோடு காத்திருக்கிறாய்....
என்ற  பழியிலிருந்தும்
உனக்கு 
விடுதலை வேண்டுகிறேன்....

உனக்காக காத்திருப்பேன்...

நீ பேசாத பொழுதுகளில்
என் நெஞ்சில் 
உன் மௌனம் நிறைத்து 
காத்திருப்பேன்...

ஆயிரமாயிரம் 
கண் கொண்டு
விடியலுக்காக
காத்திருக்கும்
ஆழ்ந்த இரவு போல்
அமைதியாய் காத்திருப்பேன்...

இரவு விடியும்..
இருள் விலகும்...
வானம் உடைத்து
வரும் பெருமழையாய்.. 
உன் குரல் 
என் செவி நுழையும்....

கூட்டை விட்டு
சிறகு விரித்து
இராகம் பாடும்
உன் வார்த்தைகள்...
தன் மெல்லிசையால்
என் 
இதயப் பூக்களின் 
இதழ்விரித்து
மனம் நிறைக்கும்....

அந்த நிமிடத்திற்காக
அமைதியாய் காத்திருப்பேன்...



வங்காள கவி இரவீந்திரநாத் தாகூரின் Patience என்ற கவிதையை தமிழாக்கும் எனது முயற்சி...


PATIENCE 

 If thou speakest not I will fill my heart with thy silence and endure it.
I will keep still and wait like the night with starry vigil
and its head bent low with patience.

The morning will surely come, the darkness will vanish,
and thy voice pour down in golden streams breaking through the sky.

Then thy words will take wing in songs from every one of my birds' nests,
and thy melodies will break forth in flowers in all my forest groves.








Monday, October 28, 2019

தனிமை


எனது 
ஆரவார பேச்சுகள் 
புகழப்பட்ட போதும்...
அமைதியான பண்புகள்
இகழப்பட்ட போதும்...
என் தனிமைப் பிறந்தது ...


“My loneliness was born when men praised my talkative faults and blamed my silent virtues.” - Kahlil Gibran ன் வரிகளை தமிழாக்கும் எனது சிறிய முயற்சி...