Saturday, November 02, 2019

மழையின் பாடல்

Khalil Gibran's poem
'The Song of the Rain'
In Tamil...
எனது இன்னொரு முயற்சி...

மழையின் பாடல்

நான்

வானிலிருந்து வீழும்

வெள்ளி இழை…

 

இயற்கை தன்

வயல்களையும்,

பள்ளத்தாக்குகளையும்

பொலிவாக்க

என்னை

அழைத்துக் கொள்கிறாள்…

 

நான்

விடியலின்

தோட்டத்தை அலங்கரிக்க

இறைவனின்

மகுடத்திலிருந்து

உதிர்க்கப்பட்ட

முத்து...

 

நான் 

மேகத்தின் கண்ணீராய்

கொட்டும் போது

மலைகள் சிரிக்கின்றன…

 

நான்

'தாழ்ந்து' 

தொடும் போது

மலர்கள்

'மலர்ச்சி' கொள்கின்றன…

 

நான் 

வீழும் போது

உலகம் மகிழ்ந்து

எழுகிறது….

 

பூமியும் மேகமும்

காதலர்கள்..

நான்

அவர்கள் அன்பின்

தூதுவன்…

 

நான்

பலர் தாகத்தைத்

தீர்க்கிறேன்..

 

பலர் காயங்களை

ஆற்றுகிறேன்…

 

இடி எனது

வருகையை

உலகுக்குக் கூறும்

 

வானவில்

எனது

நிறைவைச்

சொல்லும்...


அகிலத்தில் 

ஐம்பூதங்களின்

சேர்கையாய்

பிறந்த உயிர்கள் எல்லாம் 

மரணத்தின்

விரிந்த சிறகுகள் கொண்டு 

மேலெழும்பி

பேரான்மாவை அடைவது போல்...

நானும்

கடற்பரப்பில் இருந்து 

தோன்றி

காற்றோடு

மேலெழும்புகிறேன்…


நீரின்றி வறண்டு

எனக்காகக் காத்திருக்கும்

வெளியைக் கண்டால்

காதலோடு கீழிறங்கி

மலர்களையும்

மரங்களையும்

அணைத்துக் கொள்கிறேன்…

 

நான்

தூறலாய் உங்கள்

ஜன்னல் தொடும் போது

எனது மெல்லிசையை

எல்லோரும் கேட்கிறார்கள்

மென்மையான சிலரே

மனத்தில் கொள்கிறார்கள்…

 

காற்றின் சூடு

என்னைப் பிரசவித்தது…

நானோ அதை

தணித்து விட்டேன்…

 

பெண் ஆணிடமிருந்து

பெற்ற பலத்தால்

அவனையே வெல்வது போல்…

 

நான்

கடலின் பெருமூச்சு

சமவெளியின் சிரிப்பு

வானத்தின் கண்ணீர்…

எனவே

 

பாசத்தின்

பெருமூச்சோடு,

ஆன்மவின்

மகிழ்ச்சியோடு

எண்ணற்ற 

நினைவுகளின்

கண்ணீரோடு

 

எனது அன்பைப்

பொழிகிறேன்…

--
S.UMA
9003014271

No comments: