Friday, June 30, 2006

நானும் நீயும்

* புத்தகச் சாலை
சொர்கத்தின் வாசல் எனக்கு
உனக்கோ
திக்கு தெரியாத காடு

* கதை கவிதை
கரும்பெனக்கு
கானல் நீருனக்கு

* எழுத்தெனக்கு
இதயத்தின் பக்கத்தில்
எழுதும் முறைமறந்து
`தட்டித் தட்டியே`
பழகிவிட்ட உன்
கைகளுக்கு
`ஃபைல்` களின் பக்கங்களை
`க்ளிக்` கத்தான் தெரியும்,
பக்கங்களின் புரட்டல்களில்
பித்தானவள் நான்.
* இரவில் நிலவில்
இருளின் ஒளியில்
நெருப்பு பந்தங்களில்
விழி தீண்டி
நானிருக்க
இதமான குளிரில்
இமை மூடி தூங்கிவிட்டாய்
நீ...
* கதம்ப மாலைப் போல்
எதிர்மறையாகவே
பிணைந்திருக்கின்றோம்
இருப்போம்
மாறுபட்ட வண்ணங்கள்
குழைந்தால்
புதுப்புது எண்ணங்கள்
சாத்தியமே!...

தாய்மை

நீராடி நோன்பிருந்து
நித்தம் தவமிருந்து-தான்
கருவுற்ற நேரத்தில்
கவலை மறந்து
சிரித்திருந்து சீராய்
உணவு அருந்தி-பிள்ளை
பெற்றுவிட்ட போதினிலும்
தன்னுயிரை அமுதாக்கி
ஊட்டுவித்து மகிழ்ந்திருந்து
உள்ளம் நிறைந்திருந்து-தான்
உற்ற பசி மறந்திருநது
விழித்திருக்கும் வேளையிலும்
உடனிருந்து விளையாடி
இமைமூடி இருக்கையிலும்-சேய்தன்
பக்கத்தில் துணையிருந்து
பார்த்திருப்பாள் காத்திருப்பாள்
பிள்ளையவன் பெரிதாகி-அயல்நாடு
பறந்த பின்னும்
அவனுக்காக காத்திருப்பாள்
கூட்டிப்போகவில்லை என்றாலும்
கொள்ளிப்போட வந்திடுவான்-மகன்...

Thursday, June 29, 2006

இளமை பருவம்

அனுபவம் இல்லாதது
அனுபவம் பெறுவது
நிரந்தரம் இல்லாதது
நிச்சயம் வருவது
கனவுகள் நிறைந்தது
கனவாகிப்போவது
ஆக்கமுமானது, அழிவுமானது,
இனியது அது
இன்னாததும் அதுவே
இளைஞனே
கனியிருக்க காய் எதற்கு!

Monday, June 26, 2006

கான்கீரிட் காடு

வெட்டப்பட்டது...
மரங்கள்
கட்டப்பட்டது...
கூண்டுகள்
விரட்டப்பட்டது...
குயிலினங்கள்
அடைக்கப்பட்டது...
காற்று
இழக்கப்பட்டது...
மனிதத்தன்மை
வெட்கப்பட்டது...
விடியல்.
கையில் கொழுக்கட்டை
கண்ணிரண்டில்
கருனை வெள்ளம்
கழலனிந்த
காலிரண்டில்
கருத்தைப் பதித்தோர்க்கு
துந்திக்கைக் கொண்டு
நம்பிக்கையூட்டும்
நாயகனே!

பருத்த தொந்தியும்
பால் கொழுக்கட்டையும்
பிடித்த பிள்ளைக்க்கு
இனித்த மனத்தோடு
இலையாக காயாக
பூவாக கனியாக
இன்னும்
யாராக காணிடினும்
யாவர்க்குமானவனே
ஞானமே வடிவான
நாயகனே!
வினாயகனே!

நானும் உனை போற்றுகின்றேன்
நலம் தருவாய்
எழில் மிகு
தமிழன்னை
கரம் பற்றி
நான் போகும் பாதையிலே
ஞான ஒளி காட்டிடுவாய்
ஏற்றிடுவாய் எம்மை
இதயத்தே நீயிருந்து...