Saturday, April 17, 2010

காப்பு உந்தன் கழலே

காய் + காய் + மா + தேமா
காய் + காய் + மா + தேமா

கடலாடும் செந்தூரின் முருகா உந்தன்
கனிவருளை தினம்வேண்டிக் குவியும் கைகள்
மடங்காநீர் ஊற்றைப்போல் கருணை காட்டி
மயக்கந்தீர்த் தடியாரைக் காக்கும் கண்கள்
உடனாடும் வடிவேலும் மயிலும் காண
ஒருமித்தே உனைநாடும் உள்ளங் கோடி
கடனான இவ்வாழ்வைக் கழித்தே நானும்
கடைந்தேற காப்புந்தன் கழலே யன்றோ!

Thursday, April 15, 2010

இயற்கை வளங்களைக் காப்போம் 1

விளம் மா விளம் மா
விளம் விளம் மா

நாட்டிலே உள்ள நலங்களும் கோடி
நாமதை நன்குணர்ந் திங்கே
காட்டினை வளர்த்தே ஆற்றினை இணைத்து
காற்றினை மாசற காத்தே
வீட்டினில் துவங்கி வீதியில் எங்கும்
விளக்கினில் சூரிய ஆற்றல்
கூட்டிட வெப்பம் குறைந்திடும் புவியும்
குளிர்ந்துயிர் வாழ்ந்திடும் இனிதாய்.

துவளாது உழைப்பீர்.

விளம் மா விளம் மா
விளம் விளம் மா

காற்றினைப் பிடித்துக் கைக்குளே அடைத்து
காத்திடல் கூடுமோ? சிறிய
ஊற்றது பெருகி ஆறென ஓடி
உயிர்களுக் குறுதுணை யாகும்
தோற்றிடத் தோல்வி திடமனத் தோடு
துவண்டிடா துழைப்பவர் தம்மை
போற்றிடும் உலகம் பொருளதும் சேரும்
புகழுடன் வாழ்திடு வாரே!

Monday, April 12, 2010

கோடைக்காலம்

விளம் மா விளம் மா
விளம் விளம் மா

வெள்ளையாய் வீசும் வெய்யிலின் தாக்கம்
வியர்வையில் நனைந்திடும் மக்கள்
சுள்ளெனக் குத்தும் சூரியக் கதிரால்
சோர்வினில் துவண்டிடும் மாக்கள்
முள்ளெனச் சொல்பே ராசையுங் கொண்ட
முயன்றிடார் வாழ்வைப் போல
மெல்லவே நகர்ந்து நோய்ப்பல தந்து
மிரட்டியே விலகிடும் நாட்கள்.

முயன்றிட வெற்றி உண்டாம்

விளம் மா தேமா
விளம் மா தேமா

அழைத்திட வருமோ வெற்றி
அயர்ந்திடா[து] எரும்பைப் போல
உழைத்திடு உயர்வைக் காண்பாய்
உண்மையே வெல்லும் ஏற்பாய்
களைந்திடு சோர்வை என்றும்
காத்திரு பொறுமை யோடு
முளைதிடுஞ் செடியைப் போல
முயன்றிட வெற்றி உண்டாம்