Saturday, September 12, 2009

பாட்டில் பாடம் - [நேரிசை ஆசிரியப்பா]

திரு.பாத்தென்றல் முருகடியார் அவர்களின் [http://pathenralmurugadiyan.blogspot.com/2009/09/blog-post.html 'எண்ணம்மா எண்ணு' என்றப் பாடலுக்கு பின்னூட்டமாக எழுதியது. [முதலில் அப்பாடலைப் படிக்கவும்]

அய்யா வணக்கம்! அன்னைத் தமிழில்
கொய்யா கனிதாம் குழந்தைகட் கெல்லாம்
பாடி பாடிப் பாடம் சொன்னீர்,
பாடி யாடிப் படித்திட் டாலே
பாடம் யாவும் பதியும் மனதில்.
பள்ளிக் குழந்தைகள் போடும் கணக்கு
பாசத் தோடு பண்பைக் கொடுக்கும்
பொல்லாக் கணக்கும் புரிந்திடும் அவர்க்கு
எல்லா கலையும் எளிதாய்க் கைவரும்
பிள்ளைகள் எல்லாம் பேரன் போடு
ஊட்டிடுஞ் சோறுணல் ஒப்ப
பாட்டிலே கணக்கைப் படித்திடு வாரே!

இலங்கையில் இனி - [நேரிசை ஆசிரியப்பா]

திரு. தமிழநம்பி அவர்களின் [http://thamizhanambi.blogspot.com/2007/12/blog-post.html] ஒர் தமிழ்ச்செல்வன் உயிர் ப்றித்தாலென்? ' என்ற அவரது பாவினுக்கு பின்னூட்டமாக எழுதியது.[முதலில் அப்பாடலைப் படிக்கவும்.]


அருந்தமிழ் உணர்வுடை அன்புநெஞ் சத்தீர்!
பெரும்படை கொண்டேப் பீழைச் செய்தனர்
கடுங்கல் நெஞ்சினர், கற்றும் அறியார்,
கொடுஞ்செயல் புரிந்ததும் கும்மாள மிட்டனர்.
பகைவனுக் கருளும் பண்புடைக் கருத்தினைப்
பகைவளர் பண்பினர் பாவம் அறியார்
இருளும் ஒளியும் இயற்கையின் நிகழ்ச்சி
மருளாவே வேண்டா மனிதம் விழித்திடும்
முன்புநம் மண்ணில் முன்னவர் அழிந்தனர்
இன்றுநாம் விடுதலை இன்றியா வாழ்கிறோம்?
கொன்றுநாம் அழித்போம் களைதனை என்றால்
நன்றுதாம் சுதந்திரம் நம்முடை நாட்டில்
சிந்தியச் செந்நீர் சிங்கள மண்ணிலும்
வந்திடும் ஓர்நாள் வெற்றியைச் சூடியே,
அந்தியும் சாய்ந்திடும் ஆங்கே
வந்திடும் தமிழர் வாழ்வினில் விடியலே!

Sunday, September 06, 2009

கற்றவர் வாரீர். - [ ஆசிரியப்பா ]

எடுமின் வாளை இடுமின் முழக்கம்
கடுங்கதிர் வெய்யோன் காரிருள் தன்னைக்
கெடுத்திடல் கண்டோம், பொறுத்திடல் வேண்டா
சிற்றெரும்பும் யானையைச் சினத்தொடு கொல்லும்.
கற்றவர் வாரீர் கல்லாமை இருளை
இல்லாது அழிப்போம், கல்வி
கல்லாதார் இல்லாத காலம் கனியவே.

ஆசிரியப்பா - மழலையர் சிரிப்பு.

நிலவும் வானில் தேயும் மற்றந்த
மலரும் தினமும் வாடும் தீஞ்சுவை
அமிழ்தும் சிறிதே ஈடாம்
தமிழ்தாம் மழலையர் சிந்தும் சிரிப்பே.