Wednesday, December 31, 2014

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

நேர்மை நிலத்தினிலே
உழைப்பை விதையாக்கி
உண்மை உரமாக
நல்லெண்ண நீரூற்றி
காத்திருந்தால்
கனிந்துவரும்
பூ மணக்கும்
புத்தாண்டு

அனைவருக்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல்வணக்கங்கள்

         2015

நட்புடன்
உமா

Sunday, December 21, 2014

வாழ்த்து

இல்லறம் தன்னில் இனிதாக

இணைந்தார் நிஷாவும் ஸ்ரீகாந்தும்

நல்லதோர் வீணையும் விரல்போலும்

நற்றமிழ் சொல்லின் சுவைப்போலும்

மல்லிகை மலரின் மணம்போலும்

மனதும் மனதும் இணைந்தென்றும்

நல்லறங் காப்பீர்! நலம்பெறுவீர்!

நட்புடன் என்றும் வாழ்வீரே!

Saturday, December 13, 2014

மகாகவி பாரதியார் பிறந்த தின நிகழ்வு



மகாகவி பாரதியின் பிறந்த நாளில் திருவல்லிக்கேணி இல்லத்தில் துறைமுக தமிழ்ச் சங்கத்தின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது திரு சிவகுமார் அவர்களை சந்திக்க நேர்ந்தது

அழகான அனுபவம், நல்ல மனிதர்.

மகா பாரதம் எழுதி கொண்டிருப்பதாய் சொன்னார்



http://epaper.dinamani.com/394451/Dinamani-Chennai/13122014#page/4/2

Thursday, September 11, 2014

பார தீ


பாரதி
உன்
நினைவுகளுக்கு
எங்கள் நன்றி!

உன்
பார்வையின் பொறியில்
இன்றும்
பற்றிக்கொள்ளும்
எங்கள் இதயங்கள்

உன்
சொற்களின் சூட்டில்
என்றும்
அடைகாக்கப்படும்
எங்கள் தன்மானம்

உன்
வார்த்தை வாளால்
இன்னும்
வெட்டப்பட வேண்டிய
விலங்குகள் ஏராளம்

என்றாலும்

உன்
கவிதையின் கனலை
கருத்தில் இருத்திய
அக்னி குஞ்சுகளும்
அதிகம் தான்

பாரதி
உன் கவிதைகளுக்கு
எங்கள்  நன்றி

உன்
காதல் கவிதைக்கு
எங்கள்
கண்ணம்மாக்களும்
குளிர்ந்துதான் போகிறார்கள்

உன்
சுவாசக் காற்றின்
எச்சம் கொண்டு
சுதந்திரம் சுவாசித்த
எங்கள் இளைஞர்கள்

அந்நிய சந்தையில்
அழிந்திடாதிருக்கவும்
அச்சம் தவிர்த்து
ஆண்மைக் கொள்ளவும்

அவர் நெஞ்சில்
மீண்டும் மீண்டும்
உன்
வார்த்தைகளே
விதையாக்கப்படும்

விழுந்தும் முளைக்கும்
வீரம் கொள்ள
உன்
பாட்டின் வரிகள்
பாதைக்காட்டும்

உன்
பாட்டுக்கு
எங்கள் நன்றி

செத்துக் கிடந்த
எங்கள் செல்களில்
உயிரோட்டம் ஊட்டிய

உன்
சிந்தனைக்கு
எங்கள் நன்றி

பாரதி
உன்
நினைவுகளுக்கு
எங்கள் நன்றி!





Saturday, June 28, 2014

கலி மண்டிலம்

கருநா டகத்தே தலைகா விரியாய்
திரிவே ணியிலே திகழ்கா விரியே
வருமே யகண்டே தமிழ்நா டதிலே
பெருந்'தை' விளைந்தே பெருக்கம் தருமே!

1.நாற்சீரடிகள் கொண்ட நான்கடிப் பாடல்.
2.நான்கடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும்.
3.சீரமைப்பு – மா + புளிமா + புளிமா + புளிமா
4.ஒன்று மூன்றாம் சீர்களில் மோனை அமைதல் சிறப்பு.
5. ஒவ்வொரு சீரும் இறுதி அசை நெடிலாதல் வேண்டும். அல்லது      குறிலொற்றெடுத்தும் வரலாம்.

கலிமண்டிலம்

கதவினை அடைத்துநான் கடைவரை நடக்க
அதற்குளே அறையினுள் அலைந்தன பொருட்கள்
இதையதும் அதையிதும் இழுத்தன திறந்த
கதவினால் சிரிப்பலை கரைந்ததே உடனே!

[toy story மாதிரி நாமில்லா நேரம் நம் வீட்டிலுள்ள பொருட்கள் உணர்வுற்றால்? முகுந்த் நாகராஜன் புதுக்கவிதையில் இது போல் எழுதியிருப்பார். நானும் இப்படி சிந்தித்ததுண்டு என்பதால் மரபுப் பாவில்.]

1. ஓரெதுகை பெற்ற நான்கடிகள் அமைந்த பாடல்.
2. சீர்கள் முறையே = கருவிளம் + கருவிளம் + கருவிளம் + புளிமா
3. ஒன்றாம் மூன்றாம் சீர்களில் மோனை
4. கருவிளத்திற்குப் பதில் கூவிளமும் அருகி வருவதுண்டு. புளிமாவுக்குப் பதில் தேமாவும் அருகி வருவதுண்டும்.

கலிமண்டிலம்

பலப்பல நூல்கள் படித்திடுத் தேடி
உளப்பல கலைகள் ஓதிடு விரும்பி
நலம்பல பெறவே நடந்திடு நாளும்
உளமுயர் வுற்றால் உள்ளதாம் உயர்வே!

1. ஓரெதுகை பெற்ற நான்கடிகளைக் கொண்ட பாடல்.
2. சீறமைப்பு முறையே = விளம் + மா + விளம் + மா – என்றமைதல் வேண்டும்.
3. விளச்சீருக்குப் பதில் மாங்காய்ச்சீர் அருகி வருவதும் உண்டு.
4. பொழிப்பு மோனை சிறப்பு.

மொழியியல் முன்னோடி - கால்டுவெல்

தன் மதம்
பரப்ப வந்து
தமிழ் மணம்
பரப்பி நின்றவன்

மொழியியல் ஆய்ந்து
முதன்மை யானது
முத்தமிழ் என்றே
முடிவாய்ச் சொன்னவன்

தனித்தியங்க இயலும்
தமிழால் என்று
தரணிக்குக்
காட்டியவன்

திருநெல்வேலியின்
சரித்திரம் படைத்தவன்
செந்தமிழ் தன்னிலோ
சரித்திரம் ஆனவன்

செம்மொழி தமிழின்
சிறப்பை உணர்ந்தவர்
சிந்தையில்
செதுக்குவர்

நம்தமிழ் நலனை
நாட்டுக் குரைத்த
நல்லவன்
பெயரை

தமிழ்
உள்ளவரை
தமிழர்
உள்ளவரை

செந்தமிழ்ச் சொல்லின்
சுவைப்போல்
அவன்புகழ்
வாழ்க! வளர்கவே!!!

சென்னைத் துறைமுகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழறிஞர் இராபர்ட் கால்டுவெல் 200 ம் பிறந்த தின நிகழ்வில் முதன் முதலாய் வாசித்தது.



இசைப் பா

நெஞ்சம் இனிக்க
நிறையப் புகழ்வார்
நல்லுளம் கொண்ட அவனடியார் அவர்
கொஞ்சும் தமிழில்
குறைதவிர்த் தெழுத
கொடுப்பார் ஊக்கம் இரண்டடியால்

சிதறியப் பூவை
சேர்த்துக் கட்டும்
செயலாம் சொல்லும் அறிவுரைகள் நம்
சிந்தைத் தெளிய
சிறப்பாய் அமைய
செய்யும் உதவி சிறியவையோ

பண்ணில் அழகை
பார்வையில் தெளிவை
பழகச் செய்யும் நெறியினையே அவர்
பரிவாய்  உரைப்பார்
புரியும் படியாய்
படைப்போம் சிறந்த பாக்களையே

வெண்பா வலையில் நண்பர் அவனடியார். அவரது கருத்துக்கள் என்னை மிகவும் பண்படுத்தியிருக்கின்றன. நன்றியுடன்.

இப்பாடல்,

இயற்சீர் +இயற்சீர்
இயற்சீர் +இயற்சீர்
இயற்சீர் +இயற்சீர் + காய் =ஓரசைச்சொல்,

இயற்சீர் +இயற்சீர்
இயற்சீர் +இயற்சீர்
இயற்சீர் +இயற்சீர் + காய்!

ஈற்றுச்சீர் (7-ஆம் சீர்) இழைபுத்தொடை அமைதல் சிறப்பு. 

வஞ்சி மண்டிலம்

கண்ணை மூடி பூவென
சின்னப் பிள்ளை தூங்கிட
அன்னை நெஞ்சம் தானுறும்
இன்பம் கோடி யாகுமே!

அள்ளி வைத்த பிள்ளையும்
துள்ளி ஓடி மானென
பள்ளிச் சொல்லும் போதிலே
உள்ளம் கொள்ளைப் போகுமே!

வாழ்வில் வெற்றி வந்துறும்
போழ்தில் தாயின் பேரிடர்
சூழ்ந்த காலம் தேய்வுற
ஆழ்ந்த இன்பம் தோன்றுமே!

தன்னை ஈந்து அன்புடன்
அன்னைத் தந்த வாழ்விலே
பின்னை பிள்ளைத் தானுமே
அன்பு காட்டல் வேண்டுமே!

தேமா + தேமா + கூவிளம் என்ற வாய்பாட்டால் இயன்ற வஞ்சி மண்டிலம்

Monday, June 16, 2014

நல்லார் நெஞ்சில்
புல்மேல் பனியாய்
அல்லல் இருளை
கொல்லும் சுடரே

சுடரின் துணையொடு
படர்ந்திடு கொடிபோல்
இடர்தரு தொல்லை
கடந்திட அருள்செய்

செய்வதைத் துணிந்து
பொய்யதை நீக்கி
உய்ந்திட எனக்கே
மெய்யதைக் காட்டு

காட்டில் வழியே
பாட்டின் பொருளே
மீட்டும் இசையில்
கூட்டுக் கலையே

கலையே அழகே
விலையில் மணியே
மலையென புவியில்
நிலைத்தநற் தமிழே

தமிழே அமிழ்தாம்
தமிழர் உணர்வீர்
உமியை தவிர்த்துநற்
தமிழ்பா தருவீர்.

Tuesday, June 10, 2014

சுனாமி - கரையை கடந்த கண்ணீர்

கொலையாளி என்றீர் எம்மை
கூறுவது கேட்பீர் யானோ
அலையாக கைகள் நீட்டி
அன்போடு காத்தேன் மண்ணில்
மழையாகத் தந்தேன் என்னை
மறந்தாரே மாந்தர் தம்மின்
பிழையான வினையால் அன்றோ
பெருந்துயரம் விளைந்த தன்று...

பொங்காமல் பொறுமைக் கொண்டேன்
புரியாமல் தவறி ழைத்தீர்
மங்காத புகழு டையீர்
மாக்கடலின் நன்மை எல்லாம்
தங்காதே கழிவை கூட்டி
தண்ணீரில் மண்மீ தென்றே
எங்கனமும் எறிந்தீர் மெல்ல
இயற்கையினை இழியச் செய்தீர்

மண்ணெல்லாம் குடைந்தீர் நாளும்
மரமெல்லாம் வெட்டி மாசு
விண்ணெல்லாம் நிறைய வெப்பம்
விரைந்திங்கு உயரச் செய்தீர்
உண்மையைனீர் உணரச் சொல்வேன்
உலகன்னை நெஞ்சம் நோக
கண்ணெண்ணும் கரையைத் தாண்டி
கசிந்ததன்றோ கடலின் நீரும்....

Monday, June 02, 2014

மாமி என்று அன்போடு அழைக்கப்பட்ட திருமதி.சூடாமணி அவர்கள் ஓய்வு பெற்றபோது

இனிய சொல்லால் எம்மனத்தில்
   என்றும் நிலையாய் நிறைந்திட்டீர்
பணியில் ஓய்வு பெற்றாலும்
   பாசம் மிக்க எம்தோழி
குறையா செல்வம், அன்போடு
   கூடும் சுற்றம், மனநிறைவு
நிறைவாய் வாழ்வில் நீர்பெறவே
   நெஞ்சில் வணங்கி வாழ்த்துகின்றோம்.


Monday, March 03, 2014

காலை வேளை கடற்கரைச் சாலையில்
காலை வீசிக் கருத்துட னேநட
காளை நீயும்நற் கட்டுடல் தன்னிலே
காளை போல்பலம் கைவரக் காணுவை.

Wednesday, February 19, 2014

அச்சம் தவிர்

முயற்சி தடுக்கும், உணர்ச்சியோ டுந்தன்
சுயத்தை அழிக்கும், வருத்தி-அயலவர்
துச்சமென்றே தூற்றிடச் செய்யும், மனத்தினில்
அச்சம் தவிர்ப்பாய் அறிந்து.

ஆறுவது சினம்

நல்லன யாவும் நலிவுறவே வாய்மொழிச்
சொல்லில் கடுமை, கொடுந்தீயாய் நல்லறிவை
இல்லா தழிக்கும் இணையெதுவோ சேர்ந்தாரைக்
கொல்லும் சினம்போல் கொடிது