Friday, September 25, 2009

விழி திறந்து காட்டுவழி - இணைக்குறள் ஆசிரியப்பா


இப்படம் திரு.தீபச்செல்வன் அவர்களின் http://deebam.blogspot.com/ வலையிலிருந்து எடுத்தாளப்பட்டது. இப் பா அவரது முகத்தை மூடிக் கொள்கிற குழந்தை என்ற கவிதைக்கு பின்னூட்டமாக எழுதபட்டது. இப் படம் எடுக்கப்பட்டச் சூழல் அவர் வரிகளிலேயே!!! (விடுதலைப் புலிகளது கட்டாய ஆட்சேட்பிலிருந்து தப்பித்துக் கொள்ளுவதற்காகத் திருமணம் செய்து கொண்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு/தம்பதிகளுக்குப் பிறந்த இந்தக் குழந்தை 20.09.2009 அன்று கைதடி தடுப்பு முகாமிலிருந்து விடுவிப்பதற்கு சற்று முன்னதாகக் காத்துக்கொண்டிருந்தப் பொழுது இந்தப் புகைப்படம் பிடிக்கப்பட்டது.)

கண்ணை மூடிக் கொண்டது ஏனோ?
கண்ணேயுன் கண்ணின் வெளிச்சமிம்
மண்ணின் இருளில்
மறைந்திடா திருக்கவோ?
சொந்த மண்விட்டுன்
செல்லப் பெயர்மறந்(து)
அடையாளங் காட்டி
அழைக்கப் படுதலின் அவலமோ? நீயுன்
அல்லிவிழி மூடிக் கொண்டது?
பதுங்குக் குழியின் இருட்டை சற்றே
மறந்துவிடு கண்ணே!
திறந்துவிடு உன்கண்ணை
பரவவிடு வெளிச்சம்
விழிகளைத் திறந்தே
வழிதனைக் காண்! ஈழத் தமிழர்
இழிநிலை மாற
விலக்குன் கைகளை இலக்கினை எட்டவே!

Sunday, September 20, 2009

பாரதி தாசன் - [ இணைக்குறள் ஆசிரியப்பா ]



புரட்சி புலவன் பாரதி தாசன்

பரந்த உலகினில்

பொருட்களை எல்லாம்

பொதுவாய் வைத்திடும்

புதுமைச் சொன்னான்..

உழைப்பின் பலனெலாம்

உழைப்பவர் தமக்கே உரிமையாம் என்பதை

உரக்கச் சொன்னான்...

நன்றாம் அவன்நமை நாடச் சொல்லும்

ஒன்றாய் உளஞ்சேர்

காதல் திருமணம்,

கைம்பெண் மறுமணம்,

மண்ணில் மாந்த ரெல்லாம்

ஒன்றெனும் சமத்துவம், சகோத ரத்துவம்..

இன்னும் நம்மிடை இருக்கும்

மூடப் பழக்கம்

மிதிக்கச் சொன்னான்,

பகுத்தறி வாலதைப் போக்கச் சொன்னான்..

பெண்ணைச் சமமாய் மதித்திட

கண்ணாய்த் தமிழைக் காத்திட

கருத்தில் நேர்மை

கருணை கண்ணியம் கலந்தே தந்தான்

விருந்தாய் அருந்தமிழ்..

அறிந்தே நாமதைச்

சுவைப்போம், மகிழ்வோம், நற்றமிழ்

சுவைப்போல் அவன்புகழ் வாழ்க! வளர்கவே!

செல்வம் நிலையாமை - [ இணைக்குறள் ஆசிரியப்பா]

இன்றுளது நாளை இல்லா தாகும்
வண்டிச் சக்கரமாய்
வாழ்க்கைச் சுழலும்
வீழ்ச்சியும் எழுச்சியும் என்றும் தொடரும்
மாறும் யாவும்
மனிதர் வாழ்வினில்
வறியர் செல்வர், செல்வர்
வறியர் ஆவர்
அறிவாய் செல்வம் நிற்காது நிலைத்தே!