Friday, March 05, 2010

அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்

[விளம்+மா+மா]

கருவினில் வளரும் பிள்ளை
கருத்தினில் விளங்கும் வாழ்க்கை
கரும்பினில் இனிப்பைப் போன்று
கசப்பிலும் நன்மை உண்டு
வருவதை விரும்பி ஏற்று
வாழ்க்கையில் உயர்வைக் காட்டு
குருவினைப் பணிந்து போற்று
கோவிலாய் மனதை மாற்று.

[என் ஆசானாகிய திரு தமிழநம்பியின் கருத்தை பணிவோடும்,பெருமகிழ்ச்சியோடும் இங்கே அளிக்கிறேன்.
"பாடலின் ஓசை தடையின்றி அமைந்துள்ளதைப் பாருங்கள்.பாவேந்தரின் பாடலை நினைவூட்டுகிறது.பாராட்டு. நன்றி".]

அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்.

குறிலீற்று மா+கூவிளம்+விளம்+விளம்+விளம்+மாங்காய்
['குறிலீற்று மாக் கூவிள முவ்விளங் காய்' ]

என்று தாய்த்தமிழ் தன்னிலே திறம்பட
எழுதிடச் செய்வோமோ
என்று எந்தமிழ் மக்களின் மொழியிலே
செந்தமிழ் கேட்போமோ
என்று எம்மவர் தமிழினில் படித்திட
எண்ணமேக் கொள்வாரோ
நன்று இன்றென நற்றமிழ் தன்னையே
நயத்தொடு கற்போமே!

அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்.

குறிலீற்று மா+கூவிளம்+விளம்+விளம்+விளம்+மாங்காய்

['குறிலீற்று மாக் கூவிள முவ்விளங் காய்' ]

வீட்டு வேலைகள் திறம்பட செய்திட

வேண்டுமாம் பெண்னென்றும்

பாட்டுப் பாடிட பாத்திரம் தேய்த்திட

பழகிடு நீயென்று

பூட்டி வைத்தனர் பொய்விலங் கொடித்துநான்

புயலென திறந்தன்னை

காட்டி விண்ணையே வென்றிட அவர்தலை

கவிழ்ந்திட நின்றாரே!

அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்.

குறிலீற்று மா+கூவிளம்+விளம்+விளம்+விளம்+மாங்காய்
['குறிலீற்று மாக் கூவிள முவ்விளங் காய்' ]

காலைச் செங்கதிர் கடலினைத் தழலென
காட்டிடும் வகையன்ன
மாலைப் போதினில் வெண்மதி வானிலே
மயக்கிடு மேயென்னை
சோலைப் பூவெலாம் வாசனைத் தூவிடும்
சூடிய உன்மீது
காளை என்மனம் கலந்திட எண்ணிடும்
காரிகை தன்னோடு.

Thursday, March 04, 2010

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்

குறிலீற்று மா+கூவிளம்+விளம்+விளம்+விளம்+மாங்காய்
['குறிலீற்று மாக் கூவிள முவ்விளங் காய்' ]
[திரு.அவனடிமையாரின் இப் பாடலின் தொடர்ச்சியே என் பாடல்கள்
பார திமகா கவிஞனென்* றுரைத்திடும்...........
பாரினர் பாராட்டைப்
பார மேயெனக் கண்டவன் தமிழினில்...........
பண்ணினி தென்றாலும்
பார தம்தரும் பழந்திரு மறைசில...........
பன்மொழிப் பெயர்ப்பாளன்
பார சீகமும் சுந்தரத்* தெலுங்கையும்...........
பாடெனப் புகழ்ந்தானே.]
பாடி பாரதி பாவினில் சொன்னதைப்

பழகிடல் தவறில்லை
கோடி மக்களும் அடிமையாய் இருந்தது
குறையவன் வாழ்நாளில்
ஏடி பாரடி இன்றைய நாளினில்
இந்தமிழ் இயலாதோ?
கூடி நாமதன் குறைகளைக் களைந்திட
கூடுமே எந்நாளும்...

நாடி நம்கவி கட்டுரைப் படித்திடல்
நாவினுக் கெளிதாமோ
பாடி பாரதி பாவினைத் தந்தது
பழகிடும் தமிழ்தானே
தேடிப் போய்ப்பல மொழிகளைக் கற்றிடல்
தீதென ஆகாதே
வாடி நின்றிடும் வகையினில் தமிழினை
வதைத்தலும் கூடாதே...

கோடி யாயினும் கொடுத்திடக் கொள்ளுதல்
குறையுடைச் செயலன்றோ
வாடி நின்றிடும் நம்தமிழ் தன்னிலே
வேர்ச்சொலும் பலவாகும்
தேடி நாமதில் சொற்பலக் கண்டிட
தேறிடுந் தமிழுந்தான்
வாடி நாமினி நம்தமிழ் தழைத்திடும்
வகையினை அறிவோமே!

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்

குறிலீற்று மா+கூவிளம்+விளம்+விளம்+விளம்+மாங்காய்
['குறிலீற்று மாக் கூவிள முவ்விளங் காய்' ]

கண்டு கேட்டிட வேண்டுமே செல்வமே
கண்ணிலும் காதாலும்
விண்டு நீயுமே உணவினை சுவைத்திட
வேண்டுமுன் வாயாலே
மூன்றும் முக்கியம் நம்முடை சுவாசமோ
மூக்கினால் தானன்றோ
நன்று நம்முயிர் வாழுமிவ் உடலினை
நாமுணர் மெய்யென்போம்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்

மா+மா+மா+மா+மா+மாங்காய்

வண்ணத்துப்பூச்சி
வண்ணச் சிறகை விரித்து பறந்து
வானம் அளப்பாயோ!
கன்னஞ் சிவந்த சிறுவர் கண்ணில்
காணும் ஒளிநீயோ
மண்ணில் மலர்ந்த மலர்கள் பெற்ற
வண்ணம் உன்னாலோ
பொன்னில் அல்ல மின்னும் அழகை
உன்னில் கண்டேனே!

2.சிங்கம் சிறுத்தை சீறும் புலியும்
இருந்தால் காடாகும்
எங்கும் ஓடி வேட்டை யாடி
இரையைப் பிடித்துண்ணும்
தங்கும் வீட்டில் ஆடும் மாடும்
தடுப்புத் தொழுவத்தில்
பொங்கும் பாலை பருகத் தந்தே
புல்லைத் தானுண்ணும்

.3.காட்டை அழித்து நாட்டை ஆக்கி
காட்டும் தொழிலாளி
வீட்டில் உணவும் இல்லா திருக்கும்
விளக்கம் சரிதானோ
ஆட்டம் பாட்டம் தன்னில் பணத்தை
அழிக்கும் முதலாளி
கூட்டம் தன்னை சட்டம் போட்டே
குறைத்தல் நலம்தானே.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்

மா+மா+மா+மா+மா+மாங்காய்

பட்டுத் துணிபோல் பரந்து கிடக்கும்
பாரீர் கடலாகும்
கொட்டும் மழையாய் மண்ணில் விழுந்தே
குடிக்கத் தோதாகும்
முட்டி மோதி ஓடும் ஆறும்
மொழியும் ஒருபாடம்
கட்டுக் கடங்கா மனத்தை நீர்போல்
காத்தல் நலனாகும்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்

காய்+காய்+காய்+காய்+மா+தேமா

சிற்றுளியால் செதுக்கியதோர் கற்பாறை கண்கவரும்
சிலையாய் நிற்கும்!
பொற்கொடியே புடம்போட்ட தங்கம்தான் நகையாகிப்
பொன்னாய் மின்னும்!
பெற்றிடலாம் பட்டுவருந் துன்பமதில் பொறுமையெனும்
பெற்றி தன்னை!
கற்றிடுநீ யுன்உழைப்பே வயலிட்ட நீராகி
கனியும் காலம்