Thursday, January 06, 2011

வலையுலகம்

கண்ணில் தெரியும் கற்பனை இந்த - வலையுலகம்

எண்ணிலாச் செய்திகள் இறைந்துக் கிடக்கும் -வலையுலகம்

மண்ணில் மாந்த முயற்சியின் விளைவே -வலையுலகம்

எண்ணம் பகிர எளிதாய் இனிய -வலையுலகம்.



[1. இது நான்கடி கொண்ட வெளிமண்டில வகைப் பா.
2. ஒவ்வொரு அடியிலும் நான்கு சீர்களும் – நான்கு அடிகளின் இறுதியிலும் ஒரே தனிச்சொல்லும் அமைய வேண்டும்.
3. தனிச்சொல் தவிர்த்து, எல்லாச் சீர்களும் இயற்சீர்களாக (ஈரசைச் சீர்களாக) இருக்க வேண்டும்.
4. நான்கடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும்.
5. முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் மோனை அமைவது சிறப்பு]

புத்தகம்

மந்தம் தனிமை வாட்டம் போக்கும் - புத்தகமே

எந்திர உலகின் இயக்கும் ஆற்றல் - புத்தகமே

அந்தம் இல்லா அறிவைத் தருவது - புத்தகமே

சிந்தைத் தெளிய தெரிவோம் நல்ல புத்தகமே!


[1. இது நான்கடி கொண்ட வெளிமண்டில வகைப் பா.
2. ஒவ்வொரு அடியிலும் நான்கு சீர்களும் – நான்கு அடிகளின் இறுதியிலும் ஒரே தனிச்சொல்லும் அமைய வேண்டும்.
3. தனிச்சொல் தவிர்த்து, எல்லாச் சீர்களும் இயற்சீர்களாக (ஈரசைச் சீர்களாக) இருக்க வேண்டும்.
4. நான்கடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும்.
5. முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் மோனை அமைவது சிறப்பு.]

வெண்டாழிசை 4

தங்கத்தைப் புடம்போட தகதகக்கும் அதுபோல

பொங்கிவரும் துயரணைத்தும் புதிதாக்கும் புறந்தள்ளி

சிங்கமென வெளிவருவாய் சிரித்து.

-------------------



மண்ணெல்லாம் நனைந்திடனும் வளம்பெற்றே வயலெல்லாம்

பொன்னாக விளைந்திடனும் புதுவாழ்வு மலர்ந்திடனும்

விண்பிளந்து வருமோநல் விருந்து.



கொட்டும்பார் மழையெங்கும் குளங்களெல்லாம் நிறைந்திடவே

பட்டமரம் துளிர்க்கும்பார் பசுமையெங்கும் தெரியும்பார்

கட்டமெல்லாம் தொலையும்பார் கரைந்து.



கட்டமுற்ற விவசாயி கடன்வாங்கிக் கருத்துடனே

நட்டதெல்லாம் பயிராக நமக்கிங்கே உணவாக

விட்டொழியும் வறுமையது விரைந்து.


1. மூன்றடிப் பாடல்; முதல் இரண்டடிகள் நாற்சீரடிகள்; மூன்றாம் அடி முச்சீரடி.
2. கடைசிச் சீர் தவிர எல்லாச்சீர்களும் காய்ச்சீர்கள் (மூன்றசைச் சீர்கள்).
3. ஒவ்வொரு அடியிலும் முதல் காய்ச் சீரை அடுத்து வரும் காய்ச் சீர் நிரையில் தொடங்க வேண்டும் (காய் முன் நிரை).
4. மூன்றடிகளிலும் ஒரே எதுகையில் அமைய வேண்டும்.
5. கடைசிச் சீர் ஓரசைச் சீர்; மலர் அல்லது பிறப்பு என்ற வாய்பாட்டில் அமைய வேண்டும்.]

வெண்டாழிசை -3

இடரென நினைத்திடின் இயலுமோ எழுச்சியும்
முடியுமென்(று) துணிந்துநீ முயன்றிடுன் உழைப்பினால்
அடைந்திடும் நிலைக்கிலை ஈடு.


பசித்திட புசித்திடு பயமதை விலக்கிடு
விசையுற நடந்திடு விருப்புடன் வினைசெய
நசிந்திடா நலம்பெறும் வாழ்வு.

[முதல் இரண்டு அடிகள் நான்கு சீர்களாகவும் மூன்றாம் அடி முச்சீராகவும் இருக்கும்.
மூன்றாம் அடியின் ஈற்றுச்சீர் (பாடலின் இறுதிச் சீர்) தவிர மற்றவை கருவிள(நிரைநிரை)ச் சீர்கள்.
மூன்றடிகளிலும் ஓரெதுகை அமைய வேண்டும்.
ஈற்றுச் சீர் ஓரசைச் சீராக ‘நாள்’ அல்லது ‘காசு’ என்ற வாய்பாட்டால் முடியவேண்டும்.