Tuesday, September 01, 2009

தூங்கிசைச் செப்பலோசை வெண்பா

கண்ணில் தெரியும் கறுப்பு, சடுதியில்
விண்ணிலே பட்டாய் விரிப்பு,இருளிலே
வெண்ணிலா வானின் வனப்பு; மலர்களே
மண்ணின் வசந்த வெடிப்பு.
[இயைபு தொடையில்]

[நம்முன் மெதுவாக தோன்றும் கருமை, கரியப் பட்டு விரித்ததைப் போல் சட்டென்று பரவ அவ்விருளில் வெண்ணிலா தோன்றுவது வானின் அழகு. அதுபோல் பசுமை போர்த்திய வசந்த காலத்தில் பலவண்ண மலர்கள் மலர்வது மண்ணின் அழகு.

ஆசிரியப்பா

நாளை செய்வோம் நல்லது என்றே
நாளைக் கடத்திடல் நன்றோ! காலம்
வருமுன் காலன் வரலாம்
தருவீர் அனைத்தும் தயங்காது இன்றே.

[நாளைக்குச் செய்துக்கொள்ளலாம் என எந்த ஒரு நற்செயலையும் தள்ளிப்போடக்கூடாது. நம் வாழ்க்கை நிலையானதில்லை. எனவே நற்காரியங்களை உடனே செய்துவிடவேண்டும். இல்லையென்றால் செய்யமுடியாமலே போய்விடலாம்.]