Saturday, December 30, 2017

புத்தாண்டே வருக...

கோடையில் தூரலும் - குளிர்
வாடையில் போர்வையும
வேருக்கு நீரையும்- மக்கள்
வியர்வைக்கு  பலனையும்
இன்பத்தில் நிறைவையும்- வாட்டும்
துன்பத்தில் துணிவையும்
இளமைக்கு அறிவையும்- துவண்ட
முதுமைக்கு துணையையும்
உண்மைக்கு வழியையும்- கெட்ட
பொய்மைக்கு இருளையும்
ஆணுக்கு பெருமையும்- நிகர்
பெண்ணுக்கு உயர்வையும்
தோளுக்கு வலிமையும்- நேர்மை
வாளுக்கு வெற்றியும்
அன்பையும் வழங்க வா  புத்தாண்டே
அமைதியை நிரைத்து வா...

மலர்க புத்தாண்டே...

நல்லதை செய்யும்
நெஞ்சுரம் கூட்டி
அல்லவை எதிர்க்கும்
ஆற்றலும் தந்து
நல்லவர் வாழ
நானிலம் வாழ
இல்லார், கல்லார்
இல்லா ராக
ஏற்றத் தாழ்வுகள்
எதிலும் இல்லா
மாற்றமும் தந்தே
மலர்க புத்தாண்டே...

Wednesday, October 18, 2017

தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

இன்றைக்கும் என்றைக்கும்
இல்லத்திலும் உள்ளத்திலும்
உற்சாகம் கரைபுரள
இன்பங்கள் நிறைந்திருக்க
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
அன்புடன்
உமா

Monday, August 14, 2017

கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்

கண்ணில் கனிவாய்
கருத்தில் தெளிவாய்
நெஞ்சில் நிறைவாய் விளங்கிடுவான் - கண்ணண்
எண்ணம் உயர்ந்தால்
இன்சொல் இணைந்தால்
இல்லில் மகிழ்வாய் மலர்ந்திடுவான்...

Wednesday, July 26, 2017

நதி பின்னால் திரும்பாது

'நேற்று' என்பது
விதையாக...
'நாளை' பூக்கள்
மலர்ந்திடவே...
இன்றையப் பொழுதை
உரமாக்கு...

கண்ணை மூடும்
கண நேரம்
கடந்த காலம்
என்றாகும்...
இன்று இக்கணத்தை..
இனிதாக்கு...
இனிவருங்காலம்
உயர்வாகும்...

சொல்லும் சொல்லை
சீராக்கு
சோர்வை உந்தன்
பகையாக்கு...
துஞ்சியக் காலம்
துயராகும்..
விழித்திடு
இந்நொடி உனதாகும்...

விழுந்தது
முளைக்கும்
விதையானால்....

வெடித்தது
மலரும்
அரும்பானால்...

அடங்கியது
எழுந்திடும்
அலையானால்....

அறிவாய்....

கடந்தது
காலம்
என்றானால்.....

வாழ்க்கை
நதி பின்
திரும்பிடுமோ......

Thursday, March 16, 2017

உலக மகளிர் தினம்

இன்றையப் பெண்களின்
இமாலய வெற்றிகளுக்கு
அடித்தளமாய் அமைந்தது
அன்றையப் போராட்டம்...

பதினெட்டாம் நூற்றாண்டில்
புரட்சி பேசிய
புதுமைப் பெண்களின்
எழுச்சிப் போராட்டம்....

அன்று...
தொழிற் புரட்சி
துவங்கிய நாட்களில்
தோள் கொடுக்கத்
தேவைப்பட்டனர்
பெண்கள்.....

வேலை வாய்ப்பு
முதன் முதலாய்
வெளிச்சம் காட்டியது
அவர்கள் வாழ்வில்...

உழைப்பு ஒன்றானாலும்
ஊதியம் சமமில்லை...
பேச்சுரிமை இல்லை...
வாக்குரிமை இல்லை...
முன்னேறும்
வாய்ப்புகள் இல்லை...
இன்னும்
எத்தனையோ இல்லைகள்
இருந்துக் கொண்டே இருந்தன...

பதினெட்டாம் நூற்றாண்டில்
பற்றிய பொறி
இருபதாம் நூற்றாண்டில் தான்
வெடித்துச் சிதறியது...

உலக பெண்கள்
ஒற்றுமைக் காட்டினர்...

மார்ச் எட்டு
மகளிர் தினமானது....

சமுதாய வளர்ச்சியில்
சமபங்கு வகித்த
உழைக்கும் பெண்களின்
உரிமைப் போராட்டம்
வெடித்த தினம்

மகளிர் தினம்...

இது
கொண்டாட்ட தினமல்ல
உரிமைக்கான
உயர்வுக்கான
போராட்டதினம்...

இன்றோ..

ஊடகங்கள் வழியாக
உள்ளங்கைகளில்
குறுஞ்செய்தியாய்
வாழ்த்துக்கள்....

வியாபார சந்தையில்..
விற்பனைத் தந்திரமாய்
மார்ச் எட்டு...

ஆயிரம் செலவழித்தால்
ஐம்பது தள்ளுபடி...
பெண்கள் பயன் படுத்தும்
மேக்கப் சாதனங்களுக்கு...

பெண்களோடு வந்து
கூல்டிரிங்க்ஸ் குடித்தாலும்
விலைக்குறைப்பு
சலுகைகள்...
வெட்கக் கேடு...

இதுவா இலக்கு...

பெண்கள் வேண்டுவது
சுதந்திரம்..
சமத்துவம்..
பாதுகாப்பு...

நூறாண்டுகள் கழிந்து
இன்றும்
எட்டாக் கனியாய்
இந்த இலக்குகள்....

வாய்ப்புக் கிடைத்தால்
வானையும் வெல்லும்
வலிமைக் கொண்ட
பெண்களுக்கு...

வாழ்த்து மடல் வேண்டாம்...
வெளிச்சம் காட்டும்
விளக்குகளாய் ஒளிருங்கள்...

சுமைத்தாங்கியாய்....
வேண்டாம்
தடைக்கற்களாய் இல்லாமலேனும்
சற்றுத் தள்ளி நில்லுங்கள்...

பெண்களின் பாதுகாப்பு
கேள்விக் குறியாகும் போது..
ஆண் அங்கே
அசிங்கப்பட்டுப் போகிறான்....

ஒவ்வொரு சமுதாயத்தின்
வளர்ச்சியிலும்
ஆணுக்கு நிகராய்ப்
பெண்களும்
அப்பெண்களுக்கு
அரணாய் ஆண்களும்
அமையும்
அற்புத நாட்களை நோக்கியே..

ஊர்ந்துச் செல்லும்
உலக மகளிர் தினம்...
ஒவ்வொரு வருடமும்..

போராட்டங்கள்
உண்மையான
கொண்டாட்டங்களாய்
மாறும் நாட்கள்
நம் ஒவ்வொருவர்
கையிலும் உள்ளது...

ஒன்று படுவோம்..
உழைப்போம்...
உயர்வோம்.....

Monday, February 27, 2017

அருட்சோதி வள்ளலார்

அன்பே கடவுள் 
கருணையே 
அவனை காணும் வழி
என்பதை
உணர்ந்தவர் 
அஃதை தன் 
உள்ளத்தே கொண்டவர்

அருந்தமிழ் தனக்கே
அடிகள் அவர்கள்
ஆற்றிய தொண்டுக்கள்
அளப்பரியவை..

நற்றமிழ் நலனை
நானிலம் அறிய
அறமென உணர்ந்ததை
ஆறாயிரம்
தீந்தமிழ் பாக்களில்
தெவிட்டா தேனாம்
‘திருவருட்பா’ தந்தவர்

பாருள மொழிகள் பல
பைந்தமிழ் பிள்ளைகள்
என்றறிவித்த
மொழியியலாளர்...

ஆதியும் அந்தமுமில்லா
அருட்பெருஞ்சோதியாய்
விளங்கும் உண்மைப் பொருளை
உலகத்தோர் உணர்ந்துய்ய
ஞான வழி காட்டிய
ஞானாசிரியர்.....

நூலாசிரியர்... 

பதிப்பாசிரியர்... 

சித்த மருத்துவர்... 
என பன்முக கலைஞர்

வள்ளுவன் வாக்கை
வாழ்ந்து காட்டிய
வடலூர் வள்ளலார்
வழங்கிய நன்னெறி
'ஜீவ காரூண்ய ஒழுக்கம்'

உயிர்களெல்லாம் உறவெனக் கண்ட
உத்தமர் வழியை
உள்ளத்திலிருத்துவோம்
அன்பை விதைத்து
அறம் வளர்ப்போம்

வாழ்க வள்ளலார் நாமம்
வளர்க அன்பு நெறி...