Thursday, April 22, 2010

சென்னை மாம்பல மகிமை

வீதியில் ஓடும் வாகனம் தீய
விடமெனக் கக்கிடும் புகையை
ஆதியும் இன்றி அந்தமும் இல்லா
ஆண்டவன் போல்பெருங் கூட்டம்
காதினை அடைக்கும் கத்திடும் ஓசை
கரைந்திடும் கையிரு காசும்
ஈதெலாம் சென்னை மாம்பலந் தன்னில்
இருப்பினும் போய்வரல் இனிதே!

துயராய் போனத் தொலைக்காட்சி

தொழில்நுட்பம் வளர்ந்தாலும் தொடர்பற்றுப் போச்சு
தொலைக்காட்சிப் பெட்டியின்முன் தொலைந்திடுதே வாழ்க்கை
வழியில்லை என்பதனால் வயதானோர் பார்க்க
வஞ்சகமும் வசைச்சொல்லும் வேதனையும் மிஞ்சும்
விழியெல்லாம் பூத்திடவே விடியும்வரைப் பார்த்து
விடிந்தவுடன் தூங்கிவிழ வேலையெலாங் கெட்டு
அழித்திடுமே அன்றாடம் அழுதிடுமோர் பேச்சு
அருந்தமிழின் அழகெல்லாம் அமைதியோடு போச்சு.

Tuesday, April 20, 2010

பிளாஸ்டிக்

காய் காய் காய் மா
காய் காய் காய் மா


தெருவெல்லாம் பறந்தாலோ தீராத தொல்லை
தீயிட்டுக் கொளுத்திடவோ தீதாகும் காற்று
விரும்பாத துர்நாற்றம் வீணாகும் மண்ணும்
விலங்கினங்கள் உண்டாலோ உண்டாகும் மரணம்
குறுப்பான குழந்தைக்கும் கேடாச்சே இதனைக்
கொண்டேத்தன் தலைமூட நின்றததன் மூச்சே
பெருந்தீங்கை மனங்கொண்டே பெரியோர்கள் நாமே
பிழையாமல் பயன்பாட்டை நிறுத்திடுவோம் இன்றே!

சேமிப்பு

காய் காய் காய் மா
காய் காய் காய் மா

சிறுத்துளிதான் பெருவெள்ளம் சேமிப்பீர் இன்றே
சீராகும் உம்வாழ்வு சிந்திப்பீர் நன்றே
பொறுப்புடனே பொருள்சேர்க்கும் வேளையிலே காணும்
பொய்யான விளம்பரத்தில் போய்மாட்டிக் கொண்டே
தருகின்றேன் பெரும்வட்டி என்போர்த்தம் கையில்
தந்தால்உம் பொருளொன்றும் திரும்பாதே அறிவீர்
மருந்தால்ஓர் மாயத்தால் வளர்ந்திடுமோ பணமும்
மறக்காதீர் ஆராய்ந்தே முறையாகச் சேர்ப்பீர்.