Thursday, November 25, 2010

வெண்தாழிசை

[1. இது மூன்றடிப் பாடல்

2. கடைசி அடியின் கடைசிச் சீர் தவிர மற்றவை தேமாச் (நேர்நேர்) சீர்களே.
3. மூன்று அடிகளும் ஓர் எதுகை பெற்று வரவேண்டும்.
4. கடைசிச் சீர், ஓரசைச் சீராக நாள் அல்லது காசு என்ற வாய்பாட்டில் வரவேண்டும். ]

காற்றும் நீரும் காணும் யாவும்
தோற்றம் நீயே போற்றி நின்றேன்
ஏற்றம் தாராய் என்று.

என்றும் நின்றாள் ஏத்து கின்றேன்
குன்றில் கோவில் கொண்டாய்க் கந்தா
மண்ணில் அன்பே மாற்று.

மாறும் நெஞ்சில் மையல் உன்மேல்
சேரும் மாறென் சிந்தை மாற்று
காரென் றெம்மைக் காத்து.

விண்ணோர் வாழ்வை வேண்டின் மண்ணில்
பொன்னை ஈதல் போலே பின்னும்
கண்ணைத் தானம் செய்.

நல்லார் அல்லார் எல்லாம் சொல்லும்
சொல்லால் ஆகும் தீச்சொல் தீயாய்க்
கொல்லச் சேரும் தாழ்வு.

6 comments:

VELU.G said...

அருமையான கவிதை

தமிழ்த்தோட்டம் said...

அருமை பாராட்டுக்கள்

Kannan said...

மிகவும் அருமை

agaramamuthan said...

நும்மின் பாக்கள் நூலாய் ஆதல்
எம்மின் எண்ணம் ஈத றிந்தே
அம்மா!செய்வாய் ஆங்கு!

உமா said...

சிட்டுக் குருவி
சிறகை விரிக்க
பருந்தெனக் கொள்ளல் ஆகிடுமோ யான்
எட்டிய உயரம்
எத்துணைச் சிறியது
எண்ணத் துணிவும் வந்திடுமோ

தாயின் கண்ணில்
சேயின் பிழைகள்
தெரிதல் இல்லை அதுபோலே தமிழ்
வாயில் திறந்த
ஆசான் உமக்கே
எந்தன் பாக்கள் அதனாலே

நூலாய் ஆக்கும்
நெறியைச் சொன்னீர்
நன்றே உமது நல்லுரையை யான்
மேலாய் ஏற்பேன்
முழுதாய் நற்பா
முயன்று வடித்தப் பின்னாலே

bala said...

engirunthalum tamil tamile