Thursday, March 10, 2022

பூவா? புயலா? பெண்!!

அன்று!

அவள் கண்களில்

ஒளி இருந்தது

அவளோ!

இருட்டு அறையில்

சிறைப்பட்டிருந்தாள்…

 

சுதந்திர வெளிச்சம்

சூழ்ந்த போது

அவள் பார்வையோ

பறிக்கப்பட்டது…

 

பறந்த வெளியில்

பாதை தெரியவில்லை…

 

அடிமைச் சிறைவிட்டு

அடியெடுத்து வைத்தாலும்

ஆண்களின்  பார்வை

அச்சமூட்டியது…

 

அடிமைக் கூடு

அழிக்கப்பட்டப் போது

அவளது

அழகிய சிறகுகள்

சிதைந்தே இருந்தன…

 

எதிர்பார்ப்புகளால்

அவள்

இயக்கம்

தடுக்கப்பட்டது…

 

உலகம்

பட்டுப்பூச்சியை

பருந்தாய்

பறக்கச் சொன்னது…

 

பறந்தால் மட்டுமே

பெண் எனச் சொன்னது…

 

இருட்டு அறையிலும்

இயங்கிய கண்கள்

வெளிச்சம் கண்டு

விலகிச் செல்லுமா?

 

சின்னச் சிறகை

மெல்ல விரித்தே

வானம் அளந்தது.

வண்ணத்துப் பூச்சி..

 

பறந்த வெளிதான்

பாதை வகுத்து

பயணம் தொடர்ந்தாள்

பெண்

 

கிழட்டுப்

பார்வைகளை

கிழித்து எறிந்தாள்

 

புதிய உலகம்

புதிய பார்வை

புதிய பாதை

புதிய பயணம்

 

புதிதாய் என்றும்

பொலிவாள் பெண்…

 

பூவும் அல்ல

புயலும் அல்ல

 

அவள் பெண்…


(சென்னைத் துறைமுக தமிழ்ச்சங்க பெண்கள் தின சிறப்பு இதழுக்காக எழுதியது) 

No comments: