Thursday, April 23, 2009

பட்டாம்பூச்சி விருது

பட்டாம்பூச்சியை என் தோட்டத்தின் பக்கம் பறக்கவிட்ட திரு.சொல்லரசன் அவர்களுக்கு மிக்க நன்றி. எனது வலைப்பக்கம் எனது குறிப்பேடு மாதிரி, நான் மட்டுமே எழுதி படித்து வந்தேன். சமீபகாலமாக பல நண்பர்கள் வருகைத்தருவதும் பின்னூட்டமிடுவதும் எனக்கு ஆச்சரியமானதே. மகிழ்ச்சியும் கூட. இன்னும் நிறைய எழுத வேண்டும் என்ற ஆவலும் மேலோங்குகிறது. ஆனாலும் இந்த பட்டாம்பூச்சி கொஞ்சம் பாவம் தான். பல அரிய [வலைப்] பூக்களைஎல்லாம் பார்த்த பின் என் சின்னச் செடிகளில் சற்றே ஏமாறலாம். இருந்தாலும் சிறிதேனும் என் கருத்துத்தேனை பருகுமாயின் மகிழ்ச்சியடைவேன்.

Thursday, April 09, 2009

காலணியும் கதைச் சொல்லும்

நடந்து வரும் காலணியே நீ
பறந்து வர நேர்ந்ததென்ன?

பேசாத வாய்திறந்தே நீ
சொல்லுகின்ற செய்தி என்ன?

வேடிக்கை இல்லையிது
என் வேதனையைச் சொல்லிடுவேன்.

எத்தனையோ கூட்டத்தில்
காலடியில் நான் கிடந்தேன்..
கட்டுண்டு இருந்ததனால்
கருத்துச் சொல்லாமலே
நானிருந்தேன்...

கரடு முரடு பாதையிலே
காலைக்காத்து நிற்கையிலே
அத்தனை சோகத்தையும்
அறிந்துக் கொண்டு
தானிருந்தேன்...

ஒருவன் செய்த
குற்றத்திற்கு
ஓரினமே அழிவதென்றால்
வீழும் சனநாயகம்
விரக்தியினால் சொல்லுகின்றேன்

பாழும் ஊழல்
பறித்ததன்று ஓருயிரை....
எனின்
வீணே ஓரினமே
சாகத்தூண்டிவிட்டார்
என்றாலும்
ஆகாதிவர் மேல் குற்றமில்லை
என்றே அறிவித்தது
அடுத்த ஊழல்

பட்டது பணக்காரரென்றால்
பத்தி பத்தியாய் எழுதுகின்றார்
பாரையே திரும்பி
பார்க்கச் செய்கின்றார்...

பொல்லாத அரசியலில்
ஓரினத்தையே
ஓட ஓட விரட்டி
தலைப்பாகை தனைக்கண்டால்
தலையையே
வெட்டி வீழ்த்தி,
மொட்டையடித்து
வெறியாட்டம் ஆடியவர்
வெகுளியாய் அறிவிக்கப்படுகிறார்.

பதவியிலிருப்போர்
பதிலளிக்காது
பார்வையைத் திருப்புகிறார்..

பதைப்புடன் நானிருந்தேன்
பதிலளிக்க மாட்டாரா?
பட்டதோர் வேதனை
பாரரிய வேண்டாமா?

ஓட்டு கேட்கும் வேளையிது
விட்டுவிட்டால்
நியாயம் கிடைக்க வாய்ப்பில்லை

தன் இனமே அழிந்தாலும்
உணர்வின்றி ஓய்ந்திருக்க
நானென்ன
தமிழன் காலடிச் செருப்பா?

சீரிப்பாய்ந்து விட்டேன்
சீக்கியர் சிரம் காத்து
சினம் சொல்லி
செயலிழந்தேன்..

என் துணை
நானிழந்தாலும்
எத்துணை
இழந்தாலும்
சொற் துணை இன்றி
நான் சொன்ன சொல்
சீக்கிரமே உணர்ந்திடுவர்..

காலணிகள்
பறக்க ஆரம்பித்தால்
பாரதம்
தலைக்கவிழும்
சிந்திப்பீர்...

Friday, March 27, 2009

அணுவாற்றல் வேண்டும் அறி

அகரம் அமுதா அவர்களின் 'அணுவாற்றல் வேண்டாம் அகற்று' என்ற வெண்பாவிற்கு பின்னூட்டமாக எழுதியது.

*மேற்கின் அடிவீழ்தல் இல்லையிது காண்பாயே

ஏற்கின் கிழக்கும் உயர்ந்திடுமே -மேற்கு

கிழக்கிரண்டும் கைக்கோர்த்தே வையம் சிறக்க

அணுவாற்றல் வேண்டும் அறி.


*நம்பி விழுவதிங்கு நாமல்ல நம்திறமை

கண்டவரே வந்திட்டார், மாறும் உலகிலிவர்

வல்லார் இவரல்லார் என்பதெல்லாம் நன்காம்

அணுவாற்றல் வேண்டும் அறி


*வல்லார் அவரென்று வீணர் நினைத்திருக்க

பொக்ரான் வெடியிட்டே காட்டிட்டோம் நம்திறமை

ஒன்றாய் இணைந்தே உலகம் விளங்க

அணுவாற்றல் வேண்டும் அறி

Sunday, March 22, 2009

கண்ணாடி என்செய்யும் காலணிதான் என் செய்யும்....

கண்ணாடி
என் செய்யும்
காலணிதான்
என்செய்யும்
முன்னாடியவர்
சொன்ன சொல்
மதியிழந்தோர்
மறந்தனரே
காந்தியோடு
போயிற்றே
நேர்மையும் :-உண்மை
அஹிம்சையும்...


கண்ணாடி
என் செய்யும்
காலணிதான்
என்செய்யும்
பைநிறைய
பொருள்வேண்டி
பெரும் புகையை
கிளப்பிவிட்டார்..
போதைப் பொருள் விற்ற
பெரும் பணம்தான்
கையிருக்க
புகழ் போதை
தனை வேண்டி
போயதையும்
வாங்கிவிட்டார்...


கண்ணாடி என்
செய்யும்
காலணிதான்
என்செய்யும்
ஏழை ஒருவன்
புல் தின்று பசியாற
வானம்பார்த்த விவசாயி
கடனேறி தலைவீழ
வரி ஏய்ப்பு செய்தவரோ
ஊழல் பல செய்தவரோ
வெட்கமின்றி
உலாவர
கொலை கொள்ளை
அத்தனைக்கும் வழிவிட்டே
சட்டம் போட்டு
காத்திருக்கும்
சமதர்ம சுயாட்சிச்
சமுதாயம் தன்னில்


கண்ணாடி
என் செய்யும்
காலணிதான்
என்செய்யும்
முன்னாடியவர்
சொன்ன சொல்
மதியிழந்தோர்
மறந்தனரே
காந்தியோடு
போயிற்றே
நேர்மையும் :-உண்மை
அஹிம்சையும்

Friday, March 20, 2009

காதல்

அவளிருப்பு
அவனிதயத்திலும்
அவனிருப்பு
அவளிதயத்திலும்
பட்டாம்பூச்சி
பறக்கச்செய்யும்


தாழ்ந்த விழி
தரை நோக்க
தனித்தியங்கும் நெஞ்சம்
வானவில் பார்க்கும்


பூ விதழ்
புன்னகை வீச
பூகம்பம் வெடிக்கும்
இதயத்தில்


இளமைக்காதல்
இனிமையாயிருக்கும்
உண்மையாயிருந்தால்


மெய்யாயிருந்தால்
மெய்தாண்டி
உயிர்த்தொடும்


கட்டில் தாண்டியும்
கரம் சேரும்


காலம் கடந்து
காலன் வென்றாலும்
கவிதையாய்
உயிர்த்திருக்கும்

Tuesday, March 17, 2009

கோடை விடுமுறை

மாமா வீட்டில்
மாம்பழத்திற்கும் சண்டை
மஞ்சள் பலூனுக்கும் சண்டை..
பொம்மையோ புத்தகமோ
பொழுதுக்கும் ஆரவாரம்..
ஒரு மாதமாய்
கவலையில் அம்மாக்கள்....
கழிந்ததும்
ஒன்பது மாதமாய்
கவலையில் குழந்தைகள்..
அடுத்த கோடைக்காக ஏங்கி....

அக்கரைப் பச்சை

கூலித் தொழில் செய்யக்
கூப்பிட்டார் அதை
நாடி நம்சனங்கள் சென்றனரே!

ஏர் ஓட்டிச்செல்லும்
தொழில் மறந்து
கார் ஓட்டிச் செல்ல
மனம் விழைந்து
காலநேரம் தனை இழந்து
கணிணி முன்னே
கண் இழந்தனரே...

வீட்டை விற்றே
படித்த பிள்ளைகள்
நாட்டை விட்டே
பறந்தனரே...
சோற்றை உண்ட
கையாலே விஷக்
'கோக்'கை குடித்து
களித்தனரே...

கதை கவிதை
கற்பனை களிப்பினை
காசு பணத்தில்
மறந்தனரே...
குடும்பம் கோயில்
கலாச்சாரம்
குதூகலத்தை
இழந்தனரே...

கண்டோம் அவர்நிலை
பரிதாபம் அவர்க்கு
காதல் கூட கட்டாயம்
கண்ணித்திரையில்
'சாட்' செய்தே
காதல் கூட
கைக்கூடலாம்
குடும்பம் நடத்தல்
கூடுமோ?...

பாவம் அவர்தொழில்
படுத்தாச்சு
பாதிபேர் வேலை
போயாச்சு..
ஏறும் ஏற்றம்
பெரிதானால்
வீழும் வீழ்ச்சியும்
பெரிதாமே....

உழைப்பை மறந்து
போனதனால்
உடல் நலங்குன்றிப்
போயினரே...
உணர்வோம் இதனை
இப்போதே
உழைப்பை எள்ளி
நகையாதே

படித்த படிப்பை
நாட்டிற்கே
பயன்படச் செய்வோம்
இந்நாளே..
திறமையுடன் நற்
தொழில் செய்தே
உற்பத்தி திறனைப்
பெருக்கிடுவோம்...

உலகில் தொழில்கள்
எல்லாமே
உழவை நம்பி
உள்ளதனால்
உடலின் உழைப்பை
தள்ளாமல்
ஊக்கம் கொள்வோம்
உறுதியுடன்...

நாட்டின் நிலமை
சீராக
நாடி தொழில் பல
செய்திடுவோம்.
வரப்புயர
நீர் உயரும்
நீ உயர
நாடுயரும்
நாடுயர
நாம் உயர்வோம்...
நன்றாய் இதை
நாம் உணர்வோமே....


தீயிற் கொடியதோ தீ

நெஞ்சை இருளாக்கி நேர்மை யழித்துநல்லோர்
அஞ்சும் பகைவளர்த்து நம்மையேகொல் வஞ்சகத்தின்
வாயிற்சேர் பேரா சைபொறாமை கோபமெனுந்
தீயிற் கொடியதோ தீ

Tuesday, March 10, 2009

வாக்களிப்போம் வாரீர்

மக்களை மக்களால் மக்களுக்காக
நல்லாட்சி நாடகங்கள்
நிறைவேறும் காலமிது...

உழுது பயிராக்கி
உலையிட்டு சோறாக்கி

ஆலையிட்டு நூலாக்கி
ஆடைதன்னை வெளுப்பாக்கி

கல்சுமந்து வீடாக்கி
காலமெல்லாம்
மண்தரையில் படுத்திருப்போர்...

மேடு பள்ளம் சீராக்கி
பாதை வகுத்தே
பயணம் செய்யாதிருப்போர்...

படித்து பட்டம் பெற்று
வேலையின்றி விழித்திருப்போர்...

வேலைக்கிடைத்தாலும்
காலைச்சுற்றுமே
கடன் தொல்லை
விலைவாசி ஏற்றத்தால்
உண்டானதோர் சுமையை
தோளில் சுமந்தே
சுற்றித் திரிந்திருப்போர்...

அனைவரும் வாரீர்!ஆதரவு தாரீர்!

என்றே
உங்களுக்காக ஓர் விழா!...
ஐந்தாண்டுக்கொருமுறை
அஞ்சாமல்
பிச்சை கேட்கும் பெருவிழா...


'பட்டை'காசுக்காக
காத்திருப்போர்க்கு
கட்டுக் கட்டாய்க் கிடைத்திடும் காசு

எட்டி உதைக்கப்பட்ட
ஏழை சனங்களுக்கெல்லாம்
'கட்டி' பிடித்தே
'துட்டு' கொடுகும் தெருவிழா...
எட்டி இருப்போருக்கு
பெட்டி' கொடுக்கும் பெருவிழா...


போனால் வாராது
பொழுது போனால் கிடைக்காது..
திரும்பி வரமாட்டாரிவர்...

தெருவில் குப்பை என்றாலோ
'பஸ்' இல்லை,பாதையில்லை
பள்ளிக்கு போக ஒரு வழியில்லை
மின்சாரமில்லை
அவசரத்திற்கோர் அஸுபத்திரியில்லை
தண்ணியில்லை எண்ணெயில்லை என்றாலோ...

இலவசமாய் தந்திடுவார்
ஓர் வண்ணத் தொலைக்காட்சி
வக்கணையாய் ஓரடுப்பு...

"சமையலோ சமையல்,
ருசியோ ருசி"

எத்தனையோ சொல்லித்தருவார்

போட்டு சமைக்க பொருளில்லை என்றால்
போய்விடுவார் தள்ளி...

எண்ணிப் பார்த்திடுவீர் இதை
எனதன்பு பெரியோரே...

உமது ஒரு ஓட்டுக்கு
ஊர் விதியை மாற்றும்
வலிமையுண்டு....

படித்து உழைத்து பிழைக்க
வழி செய்தாரா?

உண்டு உடுத்தி வாழ
வழி செய்தாரா?

இதை
எண்ணிப் பார்த்து
அளித்திடுவாய் ஓட்டு...
காசை
எண்ணிப் பார்த்து
கலங்காதே மனசு...

எரிகிற கொள்ளியில் எக்கொள்ளி நல்லது
என்பவரா நீர்?

ஓட்டளிக்கவேண்டாம்
மறுத்தளிக்க வாய்ப்புண்டு
மறக்காமல் இதை செய்வீர்...

போடாத ஓட்டெல்லாம்
போடப்படும் கள்ளஓட்டாய்...
போகாதீர் ஓர்நாளும்
தீமைக்குத்தான் துணையாய்...

வாக்களிப்பீர்
அல்லது
மறுத்தளிப்பீர்
ஓர் மடல்...

கண்ணுற்றே நன்நெறியைக் காண்

தழலின்றி இல்லைப் புகையே வெறுப்பின்
விழலின்றி இல்லைப் பகையே-சுழல்கின்ற
மண்ணுலகில் அன்பின்றி விண்ணுலகம் தோன்றாதே
கண்ணுற்றே நன்நெறியைக் காண்.

Thursday, February 26, 2009

2. ஈழத் தமிழர் இடர்

பொய்விரித் தாடுபுகழ் ஓங்கு சதுரங்கக்
காய்நகர் நாடகத்தி லோரங்கம் ஆனதால்
காவிரி தன்னொடு என்றுமே தீராதோ
ஈழத் தமிழர் இடர்.

வெண்பா வரைந்தேன் விரைந்து

தொன்மைச் சிறப்பால் அமுதின் இனிப்பால்
எனைத்தன்பால் ஈர்த்தது நற்றமிழ் ஆதலால்
என்பால் எழுந்த விருப்பால் முயன்றொரு
வெண்பா வரைந்தேன் விரைந்து.

Friday, February 20, 2009

நேர்மையாய் வாழ்வதே....

நூறு கோடி மக்கள் வாழும்
அகில இந்திய அளவில்
தலைப்புச் செய்திகளாய்.....
ஆறாயிரம் கோடிக்கு ஊழல்..
அறுநூறு கோடியில் ஒப்பந்தம் அதில்
அறுபது கோடி கமிஷன்..
ஆறு கோடி பொதுப்பணம்
ஐந்து வருடத்தில் வீண் செலவு..
அறுபது லட்சம் வரி ஏய்ப்பு
ஆறு லட்சம் லஞ்சம்
அறுபதாயிரம் கொள்ளை
ஆறாயிரம் திருட்டு
அறுநூறு ரூபாய் பொருளில் போலிகள்
அறுபது ரூபாய் பொருளிலும் எடை ஏய்ப்பு
ஆறு ரூபாய் கடுகிலும் கலப்படம்
ஐம்பது பைசா பிச்சையும்
செல்லா காசு.......

யார் சொன்னது?

'நேர்மையாய் வாழ்வதே வெற்றி மேல் வெற்றிதான்' என்று

நேர்மை......
மரபுக் கவிதை
ஆஹா! ஓஹோ! போடலாம்

வெற்றி....
தன் இலக்கணத்தை இழந்து
பல நாட்களாயிற்று....

பார்த்து எழுதுங்கள் உங்கள்
புதுக்கவிதைகளை........

Friday, January 30, 2009

"மெனோபாஸ்"

"பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா"

பாரதியார்.

உள்ளம் சோர்து போகும் நெஞ்சில்
உற்சாக மின்றி ஆகும்
கோபம் வரக் கூடும் கடுஞ்
சொல்லும் வீச லாகும்..

உடலின் உறுதி போகும் நாளும்
தேயும் எலும்பும் வாட்டும்
கூடும் எண்ணம் ஓடும் எதிலும்
நாட்ட மின்றி வாடும்..

குற்ற மவள்மேல் இல்லை இயற்கை
மாற்ற மிந்த தொல்லை
நாற்ப தொத்த வயதில் பெண்மை
நலன் கெடுவ துண்டு..

உண்மை நிலை புரிந்து நீயும்
ஒத்து ழைத்து வந்தால்
நீரில் பட்ட நெருப்பாய் இன்னல்
தானும் பட்டுப் போகும்..

கைப் பிடித்த கணவன் சற்றே
கால் பிடிக்க வேண்டும்
பெற்றப் பிள்ளைக் கூட கொஞ்சம்
பொறுமைக் காட்ட வேண்டும்..

காதல் சொன்ன கண்கள்
கவலை காட்டும் போது
கரும்புக் கதைகள் பேசி அவள்
கருத்தை நீயும் மாற்று..

ஓய்ந்து போன நெஞ்சில்
உற்சாகம் கொஞ்சம் ஊற்று
தாரம் அவள் துயரில்
தாயாக நீயும் மாறு..

தேனான சொல் ஊற்று
தீர்க்கும் அவள் தாகம்
பாடான இப் பாடு
பார்த்தால் சிறிது காலம்...

சத்தான பழமும் பாலும்
காயும் உணவில் கூட்டு
சீரகும் வாழ்வு அதனை
சிந்தை யில்நீ ஏற்று...

நேராக அவளும் நெஞ்சம்
தெளிவு பெறும் போது
தாயாக மாறி அவளே
தாங்கி டுவாள் உன்னை...

வயதான காலம் வாழ்வில்
வந்து விட்டப் போதும்
தோழி யாக நின்று
தோள் கொடுப்பாள் என்றும்...

கலக்காதே அம்மா!

கலக்காதே அம்மா
கள்ளிப்பாலை..

வயிறு சுமக்காத
பாரத்தை
நெஞ்சு சுமக்க
'தாயாக' தவித்திருப்போர்
தவமிருக்க
தானாக வந்ததனால்
எனதருமை
தெரியாது போய்விட்டதோ
என் தாயே?

கலக்காதே அம்மா
கள்ளிப்பாலை..

ஆணாகப் பிறந்திருந்தால்
அழித்திருக்க மாட்டாய் தான்
என்றாலும்
சேயாக எனையிங்கீன்ற நீ
பெண்தானே? ஆணல்லவே?

நாளை உன் மகனுக்கோர் இணை
பெண்தானே? ஆணல்லவே?

கலக்காதே அம்மா
கள்ளிப்பாலை

தினம்
குடித்து குடித்து
உனை
அடித்து அடித்து
எனைத் தந்த
என் தந்தை
ஆணல்ல அம்மா
அறிந்து கொள்...

உனை பொருளாக்கி
உதைத்து
உணர்வழித்து
என் உயிரழிக்க முற்பட்ட
வஞ்சகன்
ஆணல்ல
அவனுக்கு மகளாக
எனக்கும் ஆசையில்லை

ஆனாலும்
கலக்காதே அம்மா
கள்ளிப்பாலை

எனையோர்
அரசு தொட்டிலில்
விட்டு விடு...
எனைபோல்
அக்னி குஞ்சுகள்
ஓர் நாள் நெருப்பாகும்
வெந்து வீழுமம்மா
வீணர் ஆணாதிக்கம்..
வீட்டில் பெண்ணை
அடிமைப் படுத்தும்
மூடர் பரம்பரை
மண்ணில் சாய
வேர் பொசுக்கி
வெற்றிக் கொள்வோமம்மா...

அதுவரை
கலக்காதே அம்மா
கள்ளிப்பலை

எனையோர்
குப்பைத்தொட்டியிலாவது
எறிந்து விடு

கலக்காதே
அம்
ஆ.........

Sunday, December 28, 2008

விலைமகள் வேதனை

[இப் பாடல் வெண்பா கற்பதற்கு முன் எழுதியது. இது வெண்பா இல்லை . நாலடிகளாய் வந்தாலும் தளைகள் சரியாக இருக்காது.]
இருவர் செய்யும் தவறில் ஆணுக்கு அறிவுரையும் பெண்ணுக்கு பழியையும் மேலும் தண்டணையையும் தருவது இவ்வாணாதிக்க உலகு.பெண்ணொருத்தி தவற ஆண்கள் பலபேர் காரணம்மென்பதை வசதியாக மறந்துவிடும் உலகம்.ஒருபுறம் விண்ணையும் சாடும் பெண்கள் மறுபுறம் விலையாகும் பெண்கள்.இன்னும் பலத்தடைகளைத் தாண்ட வேண்டும் இவர்கள்.

பெண்ணை பொருளாக்கி போதைக் கடிமையாகி
பின்னை அவளைப்பழித் துரைத்து பொல்லாத
கொலைமகள் விலைமகள் வேசியென் றுபேசி
கொல்லும் நெஞ்சையிவ் வாணுலகு.

கட்டிய கணவன் கள்ளைக் குடித்து
எட்டி உதைத்தால் ஏழைப்பெண் ணொருத்தி
இடறி விழுமிடம் வெறிநாய்க் கூட்டம்
கடித்துதறும் கட்டில் காண்.

தவறி பிறந்தாலும் தன்பிள்ளை என்பதனால்
தன்னை விருந்தாக்கி பசியாற்றும் பெண்மைக்காண்
கட்டில்சுக மல்லஅவள் காண்பதுவே பிள்ளை
தட்டில் ஒருபிடிச் சோறு.

படிப்பில்லை பொருளில்லை பசியாற வழியில்லை
வீதியிலுறங் கிடும்வேதனை தாங்காத போது
வெறிநாய்க் கூட்டம் விருந்துக் கழைக்க
வேசி ஆனாள் இவள்.

பிள்ளை பாசியாற பெற்றவர் தனைக்காக்க
கணவன் நோய்தீர கடமை தனதாக்கி
விலையாகும் பெண்ணை விலைபேசும் கயவன்
காண்பது காமம் மட்டுமே...


இப் பாடல்களை வெண்பாவின் இலக்கணத்துள் அடைக்கும் முயற்சி.
பெண்ணைப் பொருளாக்கி போதைக் கடிமையாகி
பின்னை அவளைப் பழித்துரைத்தே அன்னவள்
பொல்லா கொலைமகள் வேசியென்று பேசியேக்
கொல்லுந்நெஞ் சையிவ் உலகு.

கள்ளைக் குடித்து கணவன் தினமுமே
தொல்லைக் கொடுக்க ,படித்திடும் பிள்ளையும்
கல்லை உடைக்க, சில்லாய் சிதறியே
எல்லைக் கடந்தாள் இடிந்து.

படிப்பும் பொருளும் பசிதீர் வழியுமில்லை
வீதியிலு றங்கிடும் வேதனைத் தாங்காத
வேளை வெறிநாய்க் கூட்டம் விருந்தாக்க
வேசியென ஆனாள் இவள்.

தவறிப் பிறந்தாலும் தன்பிள்ளை என்றே
அவன்பசி போக்கும் அல்லல் அவளேற்க
கட்டில் சுகமல்ல காண்பதவள் பிள்ளையின்
தட்டில் ஒருபிடி சோறு.

Wednesday, December 24, 2008

தொட்டில் குழந்தைகள்

சின்ன சின்ன மத்தாப்பூக்கள்
சிரிக்கத்தெரிந்த ரோஜாக்கள்
தத்தி நடக்கும் மான் குட்டிகள்
கத்தி பேசும் கருங்குயில்கள்
கண்கள் இரண்டும் வண்டினங்கள்
காலைநேர பனித் துளிகள்
ஒலிஎழுப்பும் ஓவியங்கள்
ஒவ்வொன்றும் இரத்தினங்கள்
சக்கரக்கட்டி மனசுக்குள்
வெல்லக்கட்டி பேச்சுகள்
அத்தனையும் புறந்தள்ளி
அடிமனசை கல்லாக்கி
எங்கே சென்றனர் இவர் தாய்மார்கள்
குப்பை தொட்டியில் போட்டுவிட்டு
தொட்டில் குழந்தையாக்கிவிட்டு
எட்டிநின்று பார்ப்பாரோ
ஏக்கம் கொண்டு துடிப்பாரோ
தொல்லை ஒன்று விட்டதென்று
தன்சுகமே காண்பாரோ...
பிள்ளை ஒன்று பெறாததனால்
தள்ளி வைத்த என்கணவன்
தான் அறிவானோ...
எத்தனை சூரியன்கள் எனைச்சுற்றி
எத்தனை மின்மினிகள் அவர்கண்ணில்
முள்குத்தும் ஓர் நினைவை தள்ளிவைப்போம்
நாளை நமதென்று
நமதடியை எடுத்துவைப்போம்

Saturday, December 13, 2008

புத்தண்டே வருக

அன்றொருநாள்
வெள்ளைப்பரங்கியர்
வந்திறங்கிய
வெற்றுவாயில்
வழியாக
இன்றிறங்கிய - வீணர்தம்
வெடிச்சத்தம் விண்ணைப்பிளக்க
கதறியழும் குழந்தை சத்தம்
பெற்றவர் கல்லறையில் புதைந்துவிட
பெட்டி பெட்டியாய்
வெடிமருந்து
பரிசாகக் கொண்டு
புறப்படவேண்டாம்

புத்தாண்டே...........

பூக் கொண்டு வா
மணம் வீசி
பிணவாசம் போக்கு...
நீர்க் கொண்டு வா
வறண்ட இதயத்தில்
ஈரம் கசிய...
தேன் கொண்டு வா
கசந்த உறவுகள்
இனிமை காண...
அமைதி அள்ளி வா
எம்மிதயத்தில் அது
நிலவியிருக்க.....
காதல் கொண்டு வா
கவலை மறக்க....
கண்ணியம் கொண்டு வா
திறமை வளர்க்க....
நேர்மை கொண்டு வா
நெஞ்சில் நிலைக்க...
உண்மை கொண்டு வா
ஊழல் மறைய....
தீரம் கொண்டு வா
தீவிரவாத தலையறுக்க....

அன்பை கொண்டு வா
புத்தாண்டே...
அனைவரும்
மகிழ்ந்திருக்க....
புன்னகை கொண்டுவா
புத்தாண்டே.....
பூக்கள் கொண்டு வா..........


Friday, November 21, 2008

கண்ணாடி



கண்ணாடியில் தெரியும்

என் பிம்பம்

அது நானல்ல..

ஏமாற்றுகிறது கண்ணாடி

என்னை எங்கோ ஒளித்து

எதையோ காட்டுகிறது

என் வீட்டுக் கண்ணாடி...

சின்னச் சின்ன சிறகுகள் எனக்குண்டு..

அதைக் கொண்டு

வானம் தொட்டு வரும்

வழக்கம் எனக்குண்டு

இறக்கை கொண்டு இமயம் மீதும்

சிறிது

இளைப்பாறி வருவதுண்டு

சிக்கவில்லை அது என் சின்ன

கண்ணாடிக்குள்..

வண்ணம் எனக்குண்டு

இன்பம் இழைத்து ஆசையில் ஊறி

அன்பில் தோய்ந்து அழுகையில் நனைந்து

துன்பம் துடைத்த

வானவில் வண்ணம் எனக்குண்டு..

கறுப்பு வெள்ளையாய் காட்டுகிறது

கண்ணாடி...

காதல் எனக்குண்டு

கண்ணம் குழிந்து கண்ணில் வழியும்

காட்டவில்லை அதை

என் வீட்டு கண்ணாடி...

வடுக்களும் எனக்குண்டு

தீச்சொல் பட்டு வஞ்சம் எரிந்து

நெஞ்சம் துளைத்த

வடுக்களும் எனக்குண்டு

நல்ல வேளை

அதையும் காட்டாது

எதையோ காட்டி

நிற்கின்றன..

எல்லார் வீட்டுக் கண்ணாடிகளும்.....


Wednesday, October 15, 2008

அம்மா

10.10.2008

எனது பிறந்த நாள் உனக்கானது..

வலி பொறுத்து

எனைமடி தாங்கி

மாதங்கள் வருடங்கள் ஓடிவிட்டன....

எத்தனையோ தூரங்கள்

நாங்கள் கடந்தலும்

எங்களின் முதலடியை

எடுத்து வைத்தவள் நீ

எங்களுக்கு முகவரி தந்தவளும் நீ...

உன் உயிர்குடித்தே

எங்களின்

வாழ்நாள் கணக்குத் துவங்கியது..

உன்ஆசைகளை

கனவுகளை

கொண்டே

எங்கள் பயணத்திற்கு

பாதை வகுத்தாய்...

முட்களையும்

மலராக்கும்

வித்தை தெரிந்திருந்தாய்...

உன் காயங்களை

எங்களின் பாதையில்

எச்சரிக்கை பலகையாக்கினாய்...

உன்

உழைப்பை

விடா முயற்சியை

தன்னம்பிக்கையை

எங்கள் பாதையில்

வெளிச்சம் தரும் 

விளக்குகளாக்கினாய்...

எங்கள் சிறகுகள் விரிய

நீ வானம் ஆனாய்...

ஒருபுறம் வெப்பம் தாங்கி

மறுபுறம் நிழல் தந்து

நிற்கும் விரூட்சம்...

ஏற்றிவிட்டு அமைதியாய்

நின்றிருக்கும் ஏணி...

வாசம் தந்து

வாடும் மலர்...

சுவாசம் தந்து

வீசும் காற்று....

இப்படி

எத்தனையோ

விஷயங்கள்

நினைவூட்டும்

உனக்கான என்கடமையை....

இனி

மாற வேண்டும் அம்மா..

நீ என் மகளாக...

என் மடித்தூங்கி

உன்கவலை மற..

என் கைப்பிடித்து

உன் காலடி

எடுத்துவை..

நீ கொடுத்த அமுதம்

என் கண்ணில் நீராய்...

நீ கற்றுத் தந்த தமிழ் கொண்டு

ஒரு கவிதை மலர்

உன் காலடியில்...

ஆசிர்வதி அம்மா..

இன்றெனது

பிறந்தநாள்

இனிமை கொள் அம்மா

என் பிறந்த நாள்

உனக்கானது

வலி பொறுத்து

எனை மடிதாங்கி

மாதங்கள் வருடங்கள் 

ஓடிவிட்டன.........