Tuesday, June 10, 2014

சுனாமி - கரையை கடந்த கண்ணீர்

கொலையாளி என்றீர் எம்மை
கூறுவது கேட்பீர் யானோ
அலையாக கைகள் நீட்டி
அன்போடு காத்தேன் மண்ணில்
மழையாகத் தந்தேன் என்னை
மறந்தாரே மாந்தர் தம்மின்
பிழையான வினையால் அன்றோ
பெருந்துயரம் விளைந்த தன்று...

பொங்காமல் பொறுமைக் கொண்டேன்
புரியாமல் தவறி ழைத்தீர்
மங்காத புகழு டையீர்
மாக்கடலின் நன்மை எல்லாம்
தங்காதே கழிவை கூட்டி
தண்ணீரில் மண்மீ தென்றே
எங்கனமும் எறிந்தீர் மெல்ல
இயற்கையினை இழியச் செய்தீர்

மண்ணெல்லாம் குடைந்தீர் நாளும்
மரமெல்லாம் வெட்டி மாசு
விண்ணெல்லாம் நிறைய வெப்பம்
விரைந்திங்கு உயரச் செய்தீர்
உண்மையைனீர் உணரச் சொல்வேன்
உலகன்னை நெஞ்சம் நோக
கண்ணெண்ணும் கரையைத் தாண்டி
கசிந்ததன்றோ கடலின் நீரும்....

Monday, June 02, 2014

மாமி என்று அன்போடு அழைக்கப்பட்ட திருமதி.சூடாமணி அவர்கள் ஓய்வு பெற்றபோது

இனிய சொல்லால் எம்மனத்தில்
   என்றும் நிலையாய் நிறைந்திட்டீர்
பணியில் ஓய்வு பெற்றாலும்
   பாசம் மிக்க எம்தோழி
குறையா செல்வம், அன்போடு
   கூடும் சுற்றம், மனநிறைவு
நிறைவாய் வாழ்வில் நீர்பெறவே
   நெஞ்சில் வணங்கி வாழ்த்துகின்றோம்.


Monday, March 03, 2014

காலை வேளை கடற்கரைச் சாலையில்
காலை வீசிக் கருத்துட னேநட
காளை நீயும்நற் கட்டுடல் தன்னிலே
காளை போல்பலம் கைவரக் காணுவை.

Wednesday, February 19, 2014

அச்சம் தவிர்

முயற்சி தடுக்கும், உணர்ச்சியோ டுந்தன்
சுயத்தை அழிக்கும், வருத்தி-அயலவர்
துச்சமென்றே தூற்றிடச் செய்யும், மனத்தினில்
அச்சம் தவிர்ப்பாய் அறிந்து.

ஆறுவது சினம்

நல்லன யாவும் நலிவுறவே வாய்மொழிச்
சொல்லில் கடுமை, கொடுந்தீயாய் நல்லறிவை
இல்லா தழிக்கும் இணையெதுவோ சேர்ந்தாரைக்
கொல்லும் சினம்போல் கொடிது


Friday, March 29, 2013

அறம் செய விரும்பு

என்றுயிர்ப்  போகுமோ என்றறியா வாழ்விலே
நின்று நிலைப்பது நல்லறம் என்றுணர்வோம்
அன்றி அளவிலாச் செல்வமோ நில்லாது
குன்றிக் கொடுக்கும் குனிவு.

Saturday, February 16, 2013

தமிழ்க் கனவு

தமிழ்நா டெங்கும் தடபுடல் அமளி
அமிழ்தாம் தமிழை அழுத்தம் திருத்தமாய்
அனைவரும் பேசி அளாவிடக் கண்டேன்
பணியில், பெயரில், பயன்படு பொருளில்,
தெருவில், கடையில் செந்தமிழ்ப் பெயரே
எங்கும் நிறைந்ததை இன்புறக் கண்டேன்.
எத்திசை நோக்கினும் எத்துறை யாயினும்
சிறந்தவர் சிலரில் சிறப்பிடம் பெற்றவர்
சிந்தை செழித்த செந்தமிழ் நாட்டார்
என்பதைக் கேட்டேன் இன்னும் கேட்டேன்
எந்தமிழ்ப் பெண்கள் ஏற்றம் கொண்டனர்
அண்டிப் பிழைத்திடல் இன்றி அவரும்
ஆக்கத் தொழிலில் ஆனபற் துறையில்
ஊக்கம் கொண்டே உயர்ந்திடக் கண்டேன்
கட்டுடற் காளைகள் கலைப்பல கற்றனர்
கற்றவர் நாட்டில் களைகளைக் களைந்தனர்
ஒற்றுமை நேர்மை ஒழுக்கம் சுத்தம்
பெற்றனர் தமிழர் பெருமைக் கொண்டனர்
ஏக்கம் தீர்ந்திட எழுந்து நின்றேன்
ஐயோ வீழ்ந்தேன் விழித்தேன் எல்லாம்
பொய்யோ! இஃது கனவோ! இல்லை
மெய்யே எல்லம் மெய்யாம் காலம்
உய்யும் என்றே உணர்வாய் மனமே
குடியை, கோழை பயத்தை, பொய்யை
அடிமை தனத்தை ஒழித்தால்
மடியார் தமிழர் மேன்மை யுறுவரே!

Friday, February 01, 2013

என் இரண்டாம் பக்கம்

தாயின்
அரவணைப்பில்
தந்தையின்
கரம் பிடித்து
கவலையின்றி...

திறந்து கிடந்த
என் முதற்பக்கம்
மூடிய போது...

"நான்'
அறிமுகமானேன்..

நான்

விழித்தேன்
வெளிச்சம்
என்னுள் பரவியது.

நான்

சிரித்தேன்
நட்சத்திரங்கள்
கண்சிமிட்டின

நான்

அழுதேன்
அனுபவ பூக்கள்
மலர்ந்து
மணம் பரப்பின

நான்

உருவாக்கினேன்
என் சிறிய உலகை

நான்

அழித்தேன்
என் அறியாமையை

நான்

வீழ்ந்தேன்
அதனால்
எழுந்தேன்

நான்

பெற்றேன்
அதனால்
இழந்தேன்

இழப்பில்
இருப்பின் அருமையை
உணர்ந்தேன்

நான்

திறந்தேன்
வேதனை
வெளியில் போனது.

இதோ
என் இரண்டாவது பக்கம்
சற்றே
படபடக்கிறது

மூடிக்கொள்ளப்
பார்க்கிறது...
முடிவுரை
ஆரம்பம்!

முடிவில்லா கதையில்
சுவாரஸ்யமேது?

முதற்பக்கத்தின்
முன்னுரை
மனதில் இனிக்க

மூன்றாம் பக்க
முடிவுரை படிக்கும்
ஆவலில்

நான்
என் இரண்டாம் பக்கத்தில்...

Sunday, October 21, 2012

மின்னல், இடி, மழை

வான பக்கத்தில்
மின்னல் கோடுகள்
கிறுக்கப்பட்டதால்
மேகக் குழந்தைகள்
முட்டிக் கொண்டு
அழுது தீர்த்தன...

விடியல்

இருட் கள்வன்
ஒளித்ததையெல்லாம்
பகற் போலிஸ்
பட்டியலிட்டது...

நாள்

இருட் கடலில்
ஒற்றை வெண்தோணியில்
மேக வலைவிரித்து
பிடித்த
நட்சத்திர மீன்களை
பகற் கைகள்
பறித்துக் கொண்டன...

நட்சத்திரங்கள்

*வெளிச்ச
உண்டியல் உடைந்து
இருட்டுத் தரையில்
சிதறிய
சில்லரை காசுகள்...

*சூரிய
மாலையிலிருந்து
உதிர்ந்த
மல்லிகைப் பூக்கள்...

Tuesday, October 09, 2012

வெற்றி நிச்சயம்



வாழ்க்கை
ஓட்டப் பந்தயம்!
ஜனனம்
துவக்கம்
மரணம்
இலக்கு!

மன நிறைவே
வெற்றி...

ஆசை
தோல்வியின் முதற்படி

சிலரது  வாழ்க்கை
100மீ பந்தயம்
துரிதமாய் துவங்கி
சிகரம் எட்டி
சட்டென முடியும்..
பாரதி போல்

சிலருக்கு
தொடர் ஓட்டம்
உடல் தளர்ந்து
இலக்கடையும்
நீண்ட ஓட்டம்

தலைமுறைத் தாண்டி
அனுபவம் சுமந்து
அடுத்தவர் ஓடும்
அயராத ஓட்டம்..

இலக்கடைவது  
நிச்சயம்...

வெற்றிக்கனி
சிலருக்குத்தான்....

தடைகள் இடற
தள்ளாடும் ஓட்டம்..

வெற்றி வேண்டுமா?

மீண்டும் எழுக!
ஆசை
கோபம்
பொறாமை
தடைகள் கடந்து
தாண்டிச் செல்க!

இலக்கடைகையில்
வெற்றி நிச்சயம்...





Monday, March 19, 2012

வாழ்த்து


மங்களம் பொங்கும் மாசறு திங்கள்
'பங்குனி' 'கர'வாண்(டு) ஐந்தாம் நாளில்
எங்கள் செல்வி 'நித்யா', எழிலாள்,
பத்தரை மாற்று பசும்பொன் அணையாள்
இத்தரை மீதில் இல்லறம் இனிக்க
இணைந்தார் 'சந்திர சேகரன்' இனிய
மனத்தார், சிரித்த முகத்தார் வாழ்வில்
அணைத்தும் பெற்றே அன்புடன் சிறக்க
இணைவோம் வாழ்த்த வாழ்க வாழ்கவே!
சூழ்க நல்லவர் சுற்றமும் நட்பும்
வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே!

 

Saturday, September 24, 2011

சமச்சீர் கல்வி 2

சீராய் கல்வி தந்திடனும்
   சிறுவர்க் கெல்லாம் இலவசமாய்
சாரா செய்தி, சரித்திரத்தை
   சலிக்கா வண்ணம் கொடுத்திடனும்
கூராய் அறிவுத் தெளிவுறவே
  குறைகள் களைந்து தாய்மொழியில்
பாராய் பாடம் படித்திட்டால்
  படியும் நெஞ்சில் நிலையாக...

விளையாட் டோடு விஞ்ஞானம்
  விளைச்சல் கணிதம் வாணிபமும்
களைப்பை போக்கும் கவிதைகளும்
  கதையும் நடனம் நாடகமும்
இளைஞர் அறிந்து உழைத்திட்டால்
   ஏற்றம் எளிதாம் மனத்தினிலே
விலையில் நேர்மை விதையாக
  விளையும் நாளை வல்லரசு.

மா மா காய்
மா மா காய்

என்ற வாய்ப்பாட்டில் அமைந்த அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்.

Monday, September 19, 2011

சமச்சீர் கல்வி

சங்கப் பலகையின் சத்தியம் சாய்ந்திட
இங்கே சிலரின் இயக்க சரித்திரம்
தங்க, தரமிலா தற்புகழ்ச்சிப் பொய்யுரை
அங்கமாய் கொண்டு அமைந்ததே நல்லறிவை
பங்கமாய் செய்துநற் பாதை மறைத்திடுங்
கங்குலாம் இச்'சமச்சீர்' கல்வி!

Thursday, September 08, 2011

இசைப் பா

இயற்சீர் + இயற்சீர் +இயற்சீர் + இயற்சீர்
இயற்சீர் + காய்ச்சீர் -தனிச்சொல்
இயற்சீர் + இயற்சீர் + இயற்சீர் + இயற்சீர்
இயற்சீர் + காய்ச்சீர்!

ஒன்றாம், ஐந்தாம் சீர்களில் மோனை அமைதல் வேண்டும்.

ஒன்றாம், எட்டாம் சீர்களில் எதுகை அமைதல் வேண்டும்.

ஆறாம், பதின்மூன்றாம் சீர்களில் இழைபுத்தொடை அமைதல் நலம். பதினான்கு சீர்களில் குறிப்பிடவந்த பொருள் முற்றுப்பெற வில்லையெனில் மீண்டுமொரு தனிச்சொல் எடுத்து அடுத்த பாடலிலும் அப்பொருளைத் தொடரச் செய்யலாம்.
-----------------------------------------------------------------------------------------------------------

பெண்மை அழித்துபின் பதவியைக் காட்டி
பிழைத்திடும் பேடிகளைப் - பணம்
ஒன்றேக் குறியென ஊழல் செய்து
உழைப்பவர் வாடிடவேப் - பொது

பணத்தைச் சுருட்டி பொய்யால் மறைத்து
பிச்சைக் காரரென - மக்களை
மனத்தால் சுருக்கும் பயத்தால் ஒடுக்கும்
வன்முறைக் காரர்களை - தன்

பொறுப்பை மறந்து , படிக்கும் பெண்களை
புழுவாய் துடித்திடச்செய் - மனங்
கறுப்பாய்ப் போன கயவரைக் காலன்
காலால் மிதித்திடச்செய்-அவர்

நெஞ்சைப் பிளந்து நெருப்பால் சுட்டு
நேர்மைப் புகுத்திடச்செய் - கொல்
வஞ்சம் அறுத்து வேடம் கலைத்து
வாய்மை விதைதிடச்செய் - ஓம்

சக்தி சக்தி சக்தி என்றும்
சத்தியம் வாழ்ந்திடச்செய் - ஒன்றாய்
மக்கள் விழித்து வல்லமை யோடு
மாற்றம் கண்டிடச்செய்.

Thursday, January 06, 2011

வலையுலகம்

கண்ணில் தெரியும் கற்பனை இந்த - வலையுலகம்

எண்ணிலாச் செய்திகள் இறைந்துக் கிடக்கும் -வலையுலகம்

மண்ணில் மாந்த முயற்சியின் விளைவே -வலையுலகம்

எண்ணம் பகிர எளிதாய் இனிய -வலையுலகம்.



[1. இது நான்கடி கொண்ட வெளிமண்டில வகைப் பா.
2. ஒவ்வொரு அடியிலும் நான்கு சீர்களும் – நான்கு அடிகளின் இறுதியிலும் ஒரே தனிச்சொல்லும் அமைய வேண்டும்.
3. தனிச்சொல் தவிர்த்து, எல்லாச் சீர்களும் இயற்சீர்களாக (ஈரசைச் சீர்களாக) இருக்க வேண்டும்.
4. நான்கடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும்.
5. முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் மோனை அமைவது சிறப்பு]

புத்தகம்

மந்தம் தனிமை வாட்டம் போக்கும் - புத்தகமே

எந்திர உலகின் இயக்கும் ஆற்றல் - புத்தகமே

அந்தம் இல்லா அறிவைத் தருவது - புத்தகமே

சிந்தைத் தெளிய தெரிவோம் நல்ல புத்தகமே!


[1. இது நான்கடி கொண்ட வெளிமண்டில வகைப் பா.
2. ஒவ்வொரு அடியிலும் நான்கு சீர்களும் – நான்கு அடிகளின் இறுதியிலும் ஒரே தனிச்சொல்லும் அமைய வேண்டும்.
3. தனிச்சொல் தவிர்த்து, எல்லாச் சீர்களும் இயற்சீர்களாக (ஈரசைச் சீர்களாக) இருக்க வேண்டும்.
4. நான்கடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும்.
5. முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் மோனை அமைவது சிறப்பு.]

வெண்டாழிசை 4

தங்கத்தைப் புடம்போட தகதகக்கும் அதுபோல

பொங்கிவரும் துயரணைத்தும் புதிதாக்கும் புறந்தள்ளி

சிங்கமென வெளிவருவாய் சிரித்து.

-------------------



மண்ணெல்லாம் நனைந்திடனும் வளம்பெற்றே வயலெல்லாம்

பொன்னாக விளைந்திடனும் புதுவாழ்வு மலர்ந்திடனும்

விண்பிளந்து வருமோநல் விருந்து.



கொட்டும்பார் மழையெங்கும் குளங்களெல்லாம் நிறைந்திடவே

பட்டமரம் துளிர்க்கும்பார் பசுமையெங்கும் தெரியும்பார்

கட்டமெல்லாம் தொலையும்பார் கரைந்து.



கட்டமுற்ற விவசாயி கடன்வாங்கிக் கருத்துடனே

நட்டதெல்லாம் பயிராக நமக்கிங்கே உணவாக

விட்டொழியும் வறுமையது விரைந்து.


1. மூன்றடிப் பாடல்; முதல் இரண்டடிகள் நாற்சீரடிகள்; மூன்றாம் அடி முச்சீரடி.
2. கடைசிச் சீர் தவிர எல்லாச்சீர்களும் காய்ச்சீர்கள் (மூன்றசைச் சீர்கள்).
3. ஒவ்வொரு அடியிலும் முதல் காய்ச் சீரை அடுத்து வரும் காய்ச் சீர் நிரையில் தொடங்க வேண்டும் (காய் முன் நிரை).
4. மூன்றடிகளிலும் ஒரே எதுகையில் அமைய வேண்டும்.
5. கடைசிச் சீர் ஓரசைச் சீர்; மலர் அல்லது பிறப்பு என்ற வாய்பாட்டில் அமைய வேண்டும்.]