Thursday, October 24, 2019

பூவின் பாடல்

நான்
இயற்கை அன்னை 
தினமும் பேசும் 
அன்பு மொழி...

நான்
நீல விதானத்திலிருந்து 
பச்சை விரிப்பில் விழுந்த
நட்சத்திரம் ...

நான்
குளிர்கால 
ஏகாந்தத்தின் விந்து...
கோடையின் மடியில் தவழ்ந்து 
இலையுதிர் காலத்தில் இமைமூடி
வசந்தம் பெற்றெடுத்த
வண்ண மகள்...

காலையில் 
காற்றோடு கலந்து 
கதிரவன் வரவைக்
கட்டியம் கூறுவேன்...
மாலையில் 
பறவைகளின் கீதத்தோடு
பகலுக்கு பிரியாவிடையளிப்பேன்...

இந்த பூமி
எனது வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது...
காற்று
எனது வாசத்தால்
நிரம்பியுள்ளது...

நான்
இரவின்
ஆயிரமாயிரம் கண்களால் 
துயில் கொள்கிறேன்...

பகலின்
ஒற்றைக் கண்ணால்
விழிக்கிறேன்...

நான் 
பனியை அருந்தி 
புட்களின் இசையோடு
புற்களின்  அசைவிற்கேற்ப
நடனமாடுகிறேன்...

நான் 
காதலர்களின் பரிசு...
திருமணங்களில் அலங்காரம்...

நான்
இறந்தவர்களுக்கான
கடைசி பரிசு...

நான் 
மகிழ்ச்சியில் ஒரு பாதி...
துக்கத்திலும் ஒரு பாதி...

ஆனாலும் 
நான் 
வெளிச்சம் நோக்கியே 
என்
விழிகளைத் திறக்கிறேன்...
எனது இருண்ட நிழலை
நான் பார்ப்பதில்லை...

மனிதர்கள் 
கற்க வேண்டிய
பாடம் இது...


கலில் ஜிப்ரானின் ' Song of the flower' கவிதையை தமிழாக்கம் செய்யும் எனது முயற்சி  




Wednesday, October 23, 2019

பயம்


எல்லா 
நதிகளின் பயணமும்
கடலை நோக்கியே...

மலையில் பிறந்து ..
காட்டைக் கடந்து ..
வயலில் விளைத்து..
கடலில் விழுவதுதானே..
நதியின் போக்கு...

கடலில் கலக்க நதி
கலக்கம் கொண்டால்
திரும்ப முடியுமா?

உணர்...

கடலில் கலப்பதால்
காணாமல் போவதில்லை நதி
கடலாகவே மாறிப்போகிறது...

உன் வாழ்க்கை நதியை
உனக்கான கடலில் 
கலக்க விடு...

Wednesday, October 16, 2019

வெண்பா

ஆளும் பொறுப்பு உம்கையிலென்றால் என் செய்வீர் என்பது கேள்வி...
என் பதில் வெண்பாவில்... 


ஆட்சி எனதாட்சி என்றானால் அந்நாளில்
வீட்டுக் கழிவெல்லாம் வீதியிலே வீசுவோரை
நீட்டுன் கரமென்று நீள்கொம்பால் நான்கடி
போட்டுப் புரியவைப்பேன் பார்


அமுதன் அவர்களின் அறிவுறுத்தல்

தடியடியால் தோன்றிவிடும் சச்சரவு; நாட்டில் 
அடிதடியால் முன்னேற்றம் ஆகா(து) - உடனடியாய்த்
திட்டம் சரியாகத் தீட்டிவிட்டு நாம்போடும் 
சட்டம்தான் நன்மை தரும்!       


 என் பதில்


திட்டங்கள் தந்தாலும் சட்டங்கள் போட்டாலும்
எட்டா மனத்தினில் எள்ளளவும் மாற்றமில்லை
கொட்டிக் கெடுத்திடுவார் குப்பையை நாற்சந்தில்
தட்டிச் சரிசெய்தா லென்? 

Tuesday, September 03, 2019

சொல்லடா உன்தன் காதல்!!!

சில்லென வீசும் காற்றில்
சிலிர்த்திட மழையின் தூறல்
மெல்லென என்னைத் தீண்ட
மனத்தினில் உன்தன் நேசம்
புல்லிலே பனியைப் போல
பூத்திடும் மாயம் என்ன!!! 
சொல்லிலே தேனைக் கூட்டிச்
சொல்லடா உன்தன் காதல் ...
என்னுளே செய்யும் மாற்றம்
எழுத்திலே வருவ தில்லை
கண்ணிலே உன்தன் காட்சி
கனவிலும் உன்தன் ஆட்சி
எண்ணமோ உன்னை அன்றி
எதிலுமே செல்வ தில்லை
தண்ணெனும் நீரும் என்னைத்
தனலெனக் காய்ப்ப தென்ன!!!

Friday, August 23, 2019

கண்ணனைக் கொண்டாடுவோம்


கண்ணனைக் கொண்டாடு வோமே – மாயக்
கண்ணனைக் கொண்டாடு வோமே…

விண்ணை யளந்திட்ட  தாலே – குழல்
ஊதிக் களைத்திட்ட  தாலே

கண்ணனைக் கொண்டாடு வோமே – மணி
வண்ணனைக் கொண்டாடு வோமே…
                                           
மண்ணை  யுண்டத்தன் வாயால் –உயர்
ஞான உரைச் சொன்னதாலே

கண்ணனைக் கொண்டாடு வோமே – மணி
வண்ணனைக் கொண்டாடு வோமே…

குன்றைப் பிடித்த தனாலே –ஆயக்
குலத்தினைக் காத்ததனாலே

கண்ணனைக் கொண்டாடு வோமே – மணி
வண்ணனைக் கொண்டாடு வோமே…

கோபியர் துகில் கொண்டதனை -தேவி
திரௌபதிக்கு தந்ததனாலே

கண்ணனைக் கொண்டாடு வோமே – மணி
வண்ணனைக் கொண்டாடு வோமே…

தர்மத்தின் பால் நின்றதனாலே – கெட்ட
தீமைகள் அழித்திட்டதாலே

கண்ணனைக் கொண்டாடு வோமே – மணி
வண்ணனைக் கொண்டாடு வோமே…

கண்ணனைச் சரணடைந்தாலே  – ஞான
கண்ணினைத் திறந்திடுவானே…

கண்ணனைக் கொண்டாடு வோமே – மணி
வண்ணனைக் கொண்டாடு வோமே…

கடமைகள் செய்திடுவோமே – அவன்
சொன்னச் சொல்காத்திடுவோமே…

கண்ணனைக் கொண்டாடு வோமே – மணி
வண்ணனைக் கொண்டாடு வோமே…

அன்பை விதைத்திடுவோமே – நல்
அறங்கள் வளரக் காண்போமே…

கண்ணனைக் கொண்டாடு வோமே – மணி
வண்ணனைக் கொண்டாடு வோமே…

Wednesday, August 21, 2019

சென்னை தினம்


சென்னை எங்கள் மாநகரம்
சிறப்பாய் வங்கக் கடலோரம்
கண்ணைக் கவரும் கடற்கரையும்
கப்பல் வணிகத் துறைமுகமும்
எண்ணம் சிறக்க நூலகமும்
இனிய பாடச் சாலைகளும்
விண்ணை முட்டும் மேம்பாலம்
விரைந்துச் செல்லும் வாகனமும்

கலைகள் நிறைந்த கூடங்களும்
காலம் கடந்த கோவில்களும்
இலையில் சோறும், தனித்தமிழும்
எங்கள் பெருமை எடுத்துரைக்க
தலையில் மகுடம் அமைவதுப்போல்
தமிழர்  நாட்டின் தலைநகராய்
நிலையாய் தமிழ்போல் பல்லாண்டு
நிலைத்தே இருக்கும் வாழ்த்திடுவோம்....

Wednesday, May 08, 2019

வாழும் வரைக் காதலிப்போம்



காதலர் இருவர்
காதலிக்கும்
காலம் தெரியுமா?
தொட்டும் தொடாமலும்..
பட்டும் படாமலும்
எப்போதும் ஒரு சிலிர்ப்புடன்

காதலில் கலந்திருக்கும்
அந்தக் காலம்
கற்பனை வானில் 
கனவுகள் சிறகடிக்கும் காலம்..

வாழ்க்கை விளையாட்டில்
கண்ணாமூச்சி ஆடும்

கண்ணைக் கட்டிக் கொண்டு
தெரிந்தே தேடுவோம்
தேடியது கிடைக்குமா?

குறிஞ்சி நிலம் தெரியுமா?
அந்த
மலை மங்கையின்
மேலாடைப் பட்டு
மலர்ந்த நிலம் தான்
இந்த முல்லை….
குறிஞ்சியின் பிள்ளை
அடர்ந்த காடே
அதன் எல்லை

காதலிக்கும் காலத்திற்கும்
முல்லை நிலத்திற்கும்
என்ன முடிச்சு இங்கே?

காதல் செய்யும் காலம் இருக்கிறதே
அது
காட்டாற்றுக் காலம்

காட்டாறு
தன் எல்லையைத்
தானே அமைத்துக் கொள்ளும்
கரைக் கொண்டு நிற்காது
கரைப் புரண்டு
தன் இலக்கு நோக்கியே ஓடும்

காதலர்களை
கட்டுப்படுத்திப் பாருங்கள்
காட்டாற்றின் வேகம்
அப்போது புரியும்
உங்களுக்கு

முல்லை நில
மான் நோக்கும்
மங்கையிவள்
மட நோக்கும்
நேர் ஒக்கும்
ஒரு நோக்கென்பான் காதலன்
கல்யாணத்திற்குப் பின்
கேட்டுப் பாருங்கள்
மருண்டு விழிப்பான் இவன்

சூரியன் தன்
கதிர் கரம் நீட்டித்
தொடமுடியாத
காட்டு நிலப் பெண்ணை
மழைக் காதலன்
மகிழ்ச்சியில் நனையவைப்பான்

காதலர் மனமும் இப்படித்தான்
பெற்றவர் மற்றவர்
பேச்சை மனத்தில் நுழையவிடாது..
அவளுக்கு
அவன் பேச்சும்
அவனுக்கு அவள்
கண் வீச்சும்
நெஞ்சில்
உயிர்ப் பூக்கள் மலரச்செய்யும்

அங்கே
கார் மேகம்
இங்கே
கருங்கூந்தல்
அங்கே
முல்லைப் பூக்கள்
இங்கே
வெள்ளைப் பற்கள்

ஆதி மனிதன்
மலையில் வாழ்ந்தானாம்
மலையில் மனித நடமாட்டம்
மிகுந்துப் போக
சற்றே இறங்கி
காட்டில் காலடி
எடுத்து வைத்தானாம்
முதல் முல்லை மனிதன்

மனித இனத்தின்
இரண்டாம் நிலை
இப்படித்தான்
எட்டப்பட்டது

சிறுவர்களாய்
சிரித்திருந்தவர்கள்
வெட்கப் பட்டு
வியர்த்து
இளைஞர்களாய்த் தன்
இரண்டாம் பருவம்
தொட்டவுடன் தானே
காதல் கொள்கிறார்கள்

காத்து ‘இருத்தல்’ தானே
காதலிலும் நாம் காண்பது….

காடுகள் அழிந்தால்
நாடுகள் அழியும்
தெரியுமா உங்களுக்கு?

காதல் அழிந்தால்
மனிதம் அழியும்…

நீங்கள் காதலித்திருக்கிறீர்களா?

காதலிக்கத் தெரியவில்லை
என்றால்
கவிபடைக்க முடியாது

நான்
படைப்பாளி
என் நினைவு சிதறும் வரை
எழுதிக் கொண்டிருப்பேன்..
அதுவரைக்
காதலித்துக் கொண்டும் இருப்பேன்

என் மனத்தில்
காதல் அழிந்துப் போகும் போது
என்
எழுத்தும் நின்றுப் போகும்
அதற்கு
ஒரு நொடி முன்பே
என் உயிர்
அற்றுப் போயிருக்கும்

வாழும் வரைக் காதலிப்போம்
மரங்களையும் காடுகளையும் கூட….

Tuesday, April 09, 2019

திருவல்லிக்கேணி

பள்ளி கொண்ட பெருமானாய்
பார்த்தன் தனக்கே சாரதியாய்
உள்நின் றொளிரும் ஓர்சுடராய்
உரைத்த உரையில் உட்பொருளாய்
வல்லித் தாயார் அருள்செய்யும்
மங்கை ஆழ்வார் தொழுதேத்தும்
அல்லிக் கேணி நின்றானை
அருளை வேண்டி பணிந்தேனே!

Monday, January 21, 2019

காதலித்துப் பார்

என் மனத்திரையில்
பின்னனி இசையாய்
எப்பொழுதும் உன் நினைவுகள்...

வார்த்தைகள் அற்று
மௌனம் பூசி நிற்கும்
உதடுகள்...

கண்களோ!
கதை பேச
காதல் சொல்லக் காத்திருக்கும்...

அவசரமாய் துடிக்கும் என் இதயத்தோடு
போட்டிப் போட்டு
தோற்றுப் போகும் அறிவு...

நடக்காமல்
மிதக்கும்
கால்கள்...

உனக்கான என் கவிதையை மட்டும்
எழுதிக் காட்டும்
கைகள்...

உன் பார்வைத் தூண்டிலில்
சிக்கிக் கொள்ள தவம் கிடக்கும்
என் விழி மீன்கள்...

நீயும் என்னைக்
கொஞ்சம்
காதலித்துப் பார்...

என் சின்ன அசைவுகளுக்கும்
சரியான அர்த்தம்
உனக்குப் புரியும்..

கொஞ்சம்
காதலித்துப்
பார்......

Saturday, December 22, 2018

பாரதியின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னைத் துறைமுக தமிழ் சங்கத்தில் நான் பகிர்ந்து கொண்ட கருத்துகள்..

பாரதியின் பார்வையில் பாரதம்


தமிழைப் பற்றியும் பாரதியைப் பற்றியும் பேசுவதற்கும் கேட்பதற்கும் தமிழருக்கு சலிப்பதே இல்லை. பாரதி இருபதாம் நூற்றாண்டின் தமிழ் இலக்கியத்திலும் தமிழ் மக்களின் சிந்தனையிலும் பெரும் மாற்றத்தை உண்டாக்கியவர். கவிதையில் புதுப் பாதையை அமைத்தவர். இன்றைய புதுக் கவிதைகளுக்கு வழிகாட்டியாய் அமைந்தது அவரது வசனக் கவிதைகள்.

எந்த பொருளாக இருந்தாலும் ஒரு தெளிவான சிந்தனை கொண்டவர் பாரதி.

பாரதியை ஒரு கவிஞராக நம் எல்லோருக்கும் தெரியும். கவிதை, உள்ளத்தின் மலர்ச்சியாக அமைவது. மனத்தோடு மனம் பேசும் கலை கவிதை.

உரைநடை அல்லது கட்டுரைகள் சிந்திக்கத் தூண்டுவதாய், செயல் படத் தூண்டுவதாய் மட்டுமல்லாமல், ஆலோசனைகளும், விவாதங்களும் கொண்டு அமைவது.

பாரதியாரின் கட்டுரைகள் அவரது கவிதைகள் போல் எளிய நடையில் அமைந்தவையல்ல. என்றாலும் எளிமையாக எழுதப்பட வேண்டும் என்பதை, தமிழ் உரைநடையின் துவக்க காலத்திலேயே மிகத் தெளிவாக அறிந்து தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார் பாரதி.

‘கூடியவரை பேசுவது போலவே எழுதுவதுதான் உத்தமம் என்பது என் கட்சி’

என்பது பாரதியாரின் உரைநடை பற்றிய கருத்து.

அதுமட்டுமல்லாமல் சிந்தனைத் தெளிவு எவ்வளவு முக்கியம் என்பதை

‘ தைரியம் இல்லாவிட்டால் வசனம் தள்ளாடும். சண்டி மாடு போல ஓரிடத்தில் படுத்துக் கொள்ளும்’

என்று நையாண்டி கலந்து மிக அழகாக சொல்லியிருப்பார்.

பாரதியின் கருத்துகளை கவிதையில் வரைந்து கவிச்சரத்தை நம்முடன் பகிர்ந்துக் கொள்ள நமது துறைமுக பணியாளர்கள் இங்கு வந்திருக்கிறார்கள்.

எனவே பாரதியின் கட்டுரைகளின் மூலம் நாம் அறிய கிடைக்கும் அவரது சமுதாய கருத்துகள் பற்றி நாம் இப்போது பார்ப்போம்

சமுதாயம் பற்றிய கருத்துகள் என்றால் அதில் பெண்களின் நிலைப் பற்றிய கருத்துகள் மிக முக்கியமானது. பாரதி பெண்களைப் பற்றிய மிகச் சிறந்த தெளிவான கருத்துகள் கொண்டிருந்தார். அதை சொல்ல பயப்பட்டதுமில்லை.

“ஸ்திரீகளுக்கு ஜீவன் உண்டு,மனம் உண்டு, புத்தியுண்டு, ஐந்து புலங்கள் உண்டு. அவர்கள் செத்த யந்திரங்களல்லர்……. சகோதரிகளே! ஆறிலும் சாவு, நூறிலும் சாவு தர்மத்துக்காக இறப்போரும் இறக்கத்தான் செய்கிறார்கள். ஆதலால் சகோதரிகளே! பெண் விடுதலையின் பொருட்டாகத் தர்மயுத்தம் தொடங்குங்கள். நாம் வெற்றிப் பெறுவோம்….”

நாம் வெற்றி பெறுவோம் என தன்னையும் இப்போராட்டத்தில் கலந்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல் பெண்களின் விடுதலைக்கு பெண்கள் முன்வந்து போராடவேண்டும் என்பதை மிகத் தெளிவாக கூறுகிறார். 

‘பதிவிரதை’ என்ற கட்டுரையில்
“அட பரம மூடர்களா! ஆண் பிள்ளைகள் தவறினால் ஸ்திரீகள் எப்படிப் பதிவிரதையாக இருக்க முடியும்?”
என்று சாடியிருக்கிறார். இது கற்பு என்பது இருபாலருக்கும் பொது என்ற அவரது கருத்தை காட்டுகிறது.

பாரதியார் பெண் விடுதலைக்காக 9 விடயங்களைத் சொல்கிறார்.

1.பெண்கள் வயதுக்கு வரும் முன் திருமணம் செய்யலாகாது
2.விருப்பமில்லாத கணவரை மணக்கும் படி வற்புறுத்தல் கூடாது
3.மணவிலக்கு உரிமை வேண்டும்
4.சொத்தில் சம உரிமை தர வேண்டும்
5.திருமணமின்றி வாழும் உரிமை வேண்டும்
6.பிற ஆடவருடன் பழகும் சுதந்திரம் வேண்டும்
7.உயர்கல்வி அனைத்துத் துறையிலும் தரப்படவேண்டும்
8.எவ்வித பணியிலும் சேரச் சட்டம் துணைவர வேண்டும்
9.அரசியல் உரிமை வேண்டும்.

பாரதியார் கோரிய இந்த உரிமைகளில் பல இன்று நடைமுறைக்கு வந்துவிட்டன. என்றாலும் நாட்டிற்கே சுதந்திரமில்லா அந்நாளில் இப்படி சொத்தில் சம உரிமை, பிற ஆடவருடன் பழக உரிமை, மணவிலக்கு உரிமை, எந்த பணியிலும் சேர உரிமை என தனது காலம் தாண்டி சிந்தித்த பாரதியின் தொலைநோக்குப் பார்வை வியப்பளிக்கக்கூடியது.

பெண்கள் இன்று கண்டிருக்கும் முன்னேற்றங்களுக்கும் இனி காணவிருக்கும் உயர்வுகளுக்கெல்லாம் பாரதியின் பங்கு முக்கியமான அடித்தளமாக அமைந்துள்ளது என்பது உண்மையானது.

அடுத்து கல்வி பற்றிய அவரது சிந்தனைகளைப் பார்ப்போம்

தேசியக் கல்வி என்ற தனது கட்டுரையில் ஆரம்பப் பள்ளிக்கூடம் எவ்வாறு கட்டபடவேண்டும் அதில் என்னவெல்லாம் கற்பிக்கப்பட வேண்டும் என அருமையாக கூறியிருப்பார்.

“ உபாத்யாயர்கள் பி.ஏ, எம்,ஏ., பட்டதாரிகளாக இருக்கவேண்டிய அவசியமில்லை. மெட்டிரிகுலேஷன் பரீட்சை தேறியவர்களாக இருந்தால் போதும். மெட்ரிகுலேஷன் தவறியவர்கள் கிடைத்தால் நல்லது.  இப்படி தமிழ் நாட்டில் ஏற்படும் தேசியப் பாடச் சாலைகளில் உபாத்யாயர்களாக வருபவர்கள் திருக்குறள் , நாலடியார் முதலிய நூல்களிலாவது தகுந்த பழக்கம் உடையவர்களாகவாவது இருக்க வேண்டும். சிறந்த ஸ்வதேசாபிமானமும் ஸ்வதர்மாபிமானமும் எல்லா ஜீவர்களிடத்தும் கருணையும் உடைய உபாத்யாயர்களைத் தெரிந்தெடுத்தல் நல்லது”

என்று கூறியிருப்பார். 

எவ்வளவு உண்மையான கருத்துகள். இன்றய ஆசிரியர்கள் நிலை என்ன?

அதுமட்டுமல்ல இந்த தேசீய பாடச்சாலைகளில் காற்பிக்க வேண்டியன என சிலவற்றை சொல்லியிருப்பார்.

அ. எழுத்து, படிப்பு கணக்கு
ஆ. இலேசான சரித்திரப் பாடல்கள்
இ. பூமி சாஸ்த்திரம்
ஈ. மதப் படிப்பு
உ. ராஜ்ய சாஸ்திரம்
ஊ. பொருள் நூல்
எ. ஸயன்ஸ் அல்லது பௌதீக சாஸ்திரம்
ஏ. கைத் தொழில், விவசாயம்,தோட்டப் பயிற்சி, வியாபாரம்
ஐ. சரீரப் பயிற்சி
ஒ. யாத்திரை (ஏக்ஸ்கர்ஷன்)

என்று பட்டியலிட்டதோடு ஒவ்வொன்றும் எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றியும் மிகத் தெளிவாக விளக்கியிருபார்.

அதுமட்டுமல்லாமல் பொது குறிப்பு என்று தனியாக இப்பள்ளிக்கூடங்கள் அமைக்க எவ்வளவு பொருள் தேவைப்படும் அதை எப்படி பெறுவது. ஒவ்வொன்றிக்கும் எவ்வளவு எப்படிச் செலவு செய்ய வேண்டும், பாடத்திட்டத்திற்கான கருவிகள் எவ்வாறு பெறுவது என மிகத் தெளிவான வரையறையை கூறியிருக்கிறார்.

மிகவும் முக்கியமாக
“ இத்தகைய கல்விகற்பதில் பிள்ளைகளிடம் அரையணாக்கூட சம்பளம் வசூலிக்கக் கூடாது.” என்றும்

“மிகவும் ஏழைகளான பிள்ளைகளுக்குப் பள்ளிக் கூடத்திலிருந்தே இயன்றவரை புஸ்தகங்களும், வஸ்திரங்களும் இயன்றவிடத்தே ஆஹாரச் செலவும் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்”

என்றும் ஒரு முழுமையான திட்டதையே அளித்திருப்பார். 

நினைத்துப் பாருங்கள் அன்றைய காலத்திலேயே விவசாயம், வணிகம், பொருளாதாரம் அறிவியல், அரசியல், உடற்பயிற்சி என எல்லாத் துறைகளிலும் மிகச்சிறந்த பாடத்திட்டத்தை அவர் அளித்திருப்பது வியக்கத் தக்கதே. 

இலவசக் கல்வி பற்றிய அவரது கருத்துகள் எவ்வளவு முக்கியமானது.

இவ்வாறு எத்துறையாயினும் தெளிவான சிந்தனை கொண்ட அம்மகாகவியின் ஆற்றலை என்னவென்பது. 

அவரது சிந்தனைகள் எல்லாம் நடைமுறை படுத்தப் பட வேண்டும் என்ற கருத்தினை அனைவரிடமும்   விதைப்போம். முயல்வோம்.

வாழ்க பாரதி நாமம். வாழ்க பாரத சமுதாயம்.

Thursday, November 22, 2018

பொய்த்துப் போன மழை




கொட்டி வழங்குமென்று
குதூகலமாய் காத்திருக்க
சொட்டிச் சென்றதிங்கே
சென்னைப் பக்கம்
வந்த மழை….

வங்கக் கடலோரம்
வளர்கின்ற காற்றழுத்தம்
தெற்குக் கரைநோக்கி
சீறிப் பாய்ந்தங்கே
தென்னைகள் சாய்த்ததென்ன
சேதங்கள் செய்ததென்ன…

வாராமல் வறட்சியிங்கே!...
வந்தபுயல் வேகத்தால்
வீடுகள் விளைநிலங்கள்
வீதியெங்கும் சோகமங்கே!...

மும்மாரிப் பொழிவதுவும்
முப்போகம் விளைவதுவும்
எப்போது நடக்குமிங்கே
ஏனிந்த மாற்றமிங்கே…

வாக்குறுதி தந்துவிட்டு
வேளை வந்தபோது
போக்குக்காட்டி ஏமாற்றும்
எங்களூர் அரசியலை
எளிதில்நீ கற்றாயோ

மழையே!!!!

லஞ்சம்
கொடுத்துக் கெடுப்பதுவும்
எதுவும்
கொடுக்காமல் வாட்டுவதும்
எங்கள் குணம்
ஏட்டிக்குப் போட்டியாக
ஏனிங்கே நீவந்தாய்…

எதிர்பார்ப்பு அதிகமென்றால்
ஏமாற்றமும் அதிகமென்று
எங்களுக்கே தெரிந்திருக்க
எதைச் சொல்ல நீ வந்தாய்?

“நல்லார் ஒருவர் உளரேல்….”
வள்ளுவரே நில்லும்…..

அந்த ஒரு நல்லவருக்காக
காலமெல்லாம் காத்திருப்போம்….

நாங்கள் மட்டும் மாறமாட்டோம்    

Tuesday, November 20, 2018

மரம்


படைப்பின்
உச்சம்
மனிதமா?
மரமா?

மண்தாங்கும்
மரமே அந்த
மண்ணைக்
காக்கும்

மனிதனுக்குண்டா
பிரதியுபகாரம்
செய்யும்
 இந்த குணம்...

இயற்கையிலிருந்து
எடுத்துக் கொண்டதையெல்லாம்
அவனால்
திருப்பித் தர இயலுமா....

மரத்தின்
உயரம் அதன்
வேரின் ஆழத்தைச்
சொல்லும்..

உயர்ந்த
மனிதர்களாய்
உலாவருபவர்கள்
தங்கள்
உள்ளத்தின்
ஆழத்தை
உலகுக்குக்
காட்டத்தயாரா..

தன்னை
அழிப்பவனுக்கும்
மரம்
நிழலையேத் தருகிறது..

மனிதன்
தான் உயர
எத்தனைச் சவ பெட்டிகளை
படிகட்டுகளாய்
அமைத்துக் கொள்கிறான்...

இயற்கையை
அழித்து ஒன்று...
சக மனிதனின்
கனவுகளை
சிதைத்து  ஒன்று...
சொந்தங்களை
அழித்து ஒன்று
சுய மரியாதையை
அழித்தும்
ஒன்று...

உயரம்
மரத்தின்
கம்பீரம்...

மனிதனுக்கு...
பணமே
உயரத்தை அளக்கும்
கருவி...
உயர உயர
அவன்
தாழ்ந்து போகிறான்....

மரம்
காய் தரும்
கனி தரும்
நிழல் தரும்
மழை தரும்....

மனிதன்
மண்ணழித்து
மரம் அழித்து
மனிதம் அழிந்து
நிற்கிறான்..

மனிதன்
உலகுக்கு
அச்சம்...

மரமோ
உலகின்
ஆச்சரியம்....

படைப்பின்
சிறப்பு
மரமா?
மனிதமா?....

Sunday, November 11, 2018

இரயில் பயணம்


வளைந்துச் செல்லும் பாதையில்
இரயிலின் மொத்த நீளமும்
பார்க்கும் ஆவலில்
எட்டிப் பார்க்கும்
இளமை...

நீண்ட பெட்டிகள்
நொடியில் மறையும்...

வாழ்க்கைப் பாடத்தை
இப்படி எப்பொழுதாவது
காட்டிச் செல்லும்
இரயில் பயணங்கள்...

பட்ட மரம்


பட்ட மரம் சொல்லும்
பக்கத்திருக்கும்
பச்சை மரம் சொல்லும்
இச்சைக் கொள்ளாதே...
இளமை நிலையல்ல...
முதுமை வரும் மெல்ல...

Saturday, October 27, 2018

கருப்பும் வெள்ளையும்...




கருப்பும் வெள்ளையுமாய்
மனிதர்கள்...

சில முகங்கள் சிரிப்புடன்..
சில முகங்கள் வெறுப்புடன்..

கருப்பும் வெள்ளையுமாய்
வாழ்க்கை..
சில நேரம்  இனிமைகள்
சில நேரம்  இயலாமைகள்

கருப்பும் வெள்ளையும்
எதிரானவையல்ல...

இயல்பானவை...

உணர்ந்தால் வாழ்க்கை
வண்ணக் கலவை...

தொலைந்து போனவை



படிக்கப்படாத புத்தகங்கள்
மிதிக்கப்படாத புல்வெளி
கிழிக்கப்படாத காகிதங்கள்
கிறுக்கப்படாத சுவர்கள்
உதைக்கப்படாத பந்து
உணரப்படாத இனிமைகள்
மனிதர்களே!!
எங்கே தொலைத்தீர்கள்
குழந்தைகளை....