- பட்டுத் துகிலெடுத்து
தொட்டிலொன்று கட்டிவைத்தேன்
கட்டிக் கனியமுதே
கண்ணுரங்க வாராயோ!
மலர்மேனி நான்அணைத்து
மடிமீது வைத்திருந்து
தட்டித் தூங்க வைப்பேன்
தளிர்க் கொடியே தூங்காயோ!
வண்ணத்து பூச்சியினம்
வட்டமிட்டே தாவி வரும்
பொன்மேனி தனைக் கண்டு
பூ வெனவே மயங்கிவிடும்..
கண்ணத்து கதுப்பெடுத்து
கொத்தவரும் கிளிக்கூட்டம்
விண்ணத்து மீன்களெல்லாம்
விளையாடத் தேடிவரும்
பாட்டெடுத்து பாடிடுவேன்
பக்கத்தில் துணையிருப்பேன்
இளங்காலைச் சூரியனே
எட்டி நீ பார்க்காதே..
படித்து பட்டம்பெற
பாடுபடும் அண்ணனங்கே
பிரித்த பக்கமெல்லாம்
பேசா உன் சித்திரங்கள்
கண்டு சினங் கொண்டு
உன் எதிர் வந்து நின்ற்வனை
சின்ன இதழ்விரித்து
சிரித்து வலை வீசிவிட்டாய்
தொட்டு உனை தூக்கவைத்தாய்
துள்ளி விளையாடவைத்தாய்
பாடமெல்லாம் போகட்டும் உன்
பட்டு மேனி துவளாதோ?
சிட்டாய் நீ ஓடிவந்து
சீக்கிரமே தூங்கிவிடு
காத்திருக்கு எதிர்காலம்
கண்ணுரங்க நேரமில்லை..
கலைகள் பல கற்றிடனும்
கடமை யெல்லாம் செய்திடனும்
பெரிய பெயர் பெற்றிடனும்
புகழ்வானில் பறந்திடனும்..
அன்புக் கொண்டு பிறரிடத்தில்
அற்புதமாய் வாழ்ந்திடனும்
தாய்தேசம் தழைக்கவைக்க
தன்னலமே மறந்திடனும்..
மயக்கவரும் மாலையிலே
மான்விழியாள் கண்டுவிட்டால்
விழித்திருக்க வேண்டிவரும்
விண்ணுலகம் இறங்கிவரும்..
இப்போதே தூங்கிவிடு
இருவிழிக்கு ஓய்வுகொடு
எப்போதும் காத்திடுவான்
எம்பெருமான் துனையிருப்பான்
Tuesday, September 12, 2006
தாலாட்டு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment