இருவர் செய்யும் தவறில் ஆணுக்கு அறிவுரையும் பெண்ணுக்கு பழியையும் மேலும் தண்டணையையும் தருவது இவ்வாணாதிக்க உலகு.பெண்ணொருத்தி தவற ஆண்கள் பலபேர் காரணம்மென்பதை வசதியாக மறந்துவிடும் உலகம்.ஒருபுறம் விண்ணையும் சாடும் பெண்கள் மறுபுறம் விலையாகும் பெண்கள்.இன்னும் பலத்தடைகளைத் தாண்ட வேண்டும் இவர்கள்.
பெண்ணை பொருளாக்கி போதைக் கடிமையாகி
பின்னை அவளைப்பழித் துரைத்து பொல்லாத
கொலைமகள் விலைமகள் வேசியென் றுபேசி
கொல்லும் நெஞ்சையிவ் வாணுலகு.
கட்டிய கணவன் கள்ளைக் குடித்து
எட்டி உதைத்தால் ஏழைப்பெண் ணொருத்தி
இடறி விழுமிடம் வெறிநாய்க் கூட்டம்
கடித்துதறும் கட்டில் காண்.
தவறி பிறந்தாலும் தன்பிள்ளை என்பதனால்
தன்னை விருந்தாக்கி பசியாற்றும் பெண்மைக்காண்
கட்டில்சுக மல்லஅவள் காண்பதுவே பிள்ளை
தட்டில் ஒருபிடிச் சோறு.
படிப்பில்லை பொருளில்லை பசியாற வழியில்லை
வீதியிலுறங் கிடும்வேதனை தாங்காத போது
வெறிநாய்க் கூட்டம் விருந்துக் கழைக்க
வேசி ஆனாள் இவள்.
பிள்ளை பாசியாற பெற்றவர் தனைக்காக்க
கணவன் நோய்தீர கடமை தனதாக்கி
விலையாகும் பெண்ணை விலைபேசும் கயவன்
காண்பது காமம் மட்டுமே...
இப் பாடல்களை வெண்பாவின் இலக்கணத்துள் அடைக்கும் முயற்சி.
பெண்ணைப் பொருளாக்கி போதைக் கடிமையாகி
பின்னை அவளைப் பழித்துரைத்தே அன்னவள்
பொல்லா கொலைமகள் வேசியென்று பேசியேக்
கொல்லுந்நெஞ் சையிவ் உலகு.
கள்ளைக் குடித்து கணவன் தினமுமே
தொல்லைக் கொடுக்க ,படித்திடும் பிள்ளையும்
கல்லை உடைக்க, சில்லாய் சிதறியே
எல்லைக் கடந்தாள் இடிந்து.
படிப்பும் பொருளும் பசிதீர் வழியுமில்லை
வீதியிலு றங்கிடும் வேதனைத் தாங்காத
வேளை வெறிநாய்க் கூட்டம் விருந்தாக்க
வேசியென ஆனாள் இவள்.
தவறிப் பிறந்தாலும் தன்பிள்ளை என்றே
அவன்பசி போக்கும் அல்லல் அவளேற்க
கட்டில் சுகமல்ல காண்பதவள் பிள்ளையின்
தட்டில் ஒருபிடி சோறு.
9 comments:
வணக்கம். உங்கள் கவிதைகள் நல்ல வலிமையாக இருக்கிறது. நீங்கள் எடுத்துக்கொள்ளும் பொருளும், நடையும் பழையனவாக தெரிந்தாலும் அதன் கம்பீரம் உங்கள் கவிதையின் தனித்துவம்.. வாழ்த்துக்கள்....... தொடர்வோம்.
எவரும் தொட தயங்கும் கரு,நீங்கள் அழகிய கவிதையாக தந்துள்ளிர் பாராட்டுகள்.
எழுத்தும் நடையும் அருமை.
வாழ்த்துக்கள்.
நன்றி திரு.வண்ணத்துபூச்சியார்.உங்களுடைய வலைப்பதிவு மிக அருமை.பேரன்ட்ஸ் கிளப் அற்புதம். வாழ்துக்கள்.
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி உமா.
உங்கள் பெயரிலே என் அருமை தோழி உமா என்ற கவிதாயினி உள்ள்ளார்.
அவரது வலை: http://umashakthi.blogspot.com
பார்க்கவும்.
நன்றி. வாழ்த்துக்கள்.
தோழி உமாவின் தளம் மிகச்சிறப்பாக உள்ளது. இனி தொடர்ந்து இரசிக்கலாம்.அறிமுகத்திற்கு மிக்க நன்றி.
நன்றி உமா II
இந்த கவிதையின் பின்னணியில் ஒரு இஸ்ரேல் திரைப்படம் பார்த்தேன்.
இந்த கவிதையை என் பதிவில் இட அனுமதி வேண்டும்.
நன்றி உமா.
வணக்கம் வண்ணத்துப்பூச்சியார்.எனது கவிதையை உங்கள் பதிவில் எடுத்தாள்வது எனக்கு மிக மிக மகிழ்ச்சியே.அதற்கு என் நன்றியும் கூட. தங்கள் பதிவைப் பார்த்தேன் மிக அற்புதமான விமர்சனங்கள்.வாழ்த்துகள்.
Post a Comment