Friday, January 30, 2009

கலக்காதே அம்மா!

கலக்காதே அம்மா
கள்ளிப்பாலை..

வயிறு சுமக்காத
பாரத்தை
நெஞ்சு சுமக்க
'தாயாக' தவித்திருப்போர்
தவமிருக்க
தானாக வந்ததனால்
எனதருமை
தெரியாது போய்விட்டதோ
என் தாயே?

கலக்காதே அம்மா
கள்ளிப்பாலை..

ஆணாகப் பிறந்திருந்தால்
அழித்திருக்க மாட்டாய் தான்
என்றாலும்
சேயாக எனையிங்கீன்ற நீ
பெண்தானே? ஆணல்லவே?

நாளை உன் மகனுக்கோர் இணை
பெண்தானே? ஆணல்லவே?

கலக்காதே அம்மா
கள்ளிப்பாலை

தினம்
குடித்து குடித்து
உனை
அடித்து அடித்து
எனைத் தந்த
என் தந்தை
ஆணல்ல அம்மா
அறிந்து கொள்...

உனை பொருளாக்கி
உதைத்து
உணர்வழித்து
என் உயிரழிக்க முற்பட்ட
வஞ்சகன்
ஆணல்ல
அவனுக்கு மகளாக
எனக்கும் ஆசையில்லை

ஆனாலும்
கலக்காதே அம்மா
கள்ளிப்பாலை

எனையோர்
அரசு தொட்டிலில்
விட்டு விடு...
எனைபோல்
அக்னி குஞ்சுகள்
ஓர் நாள் நெருப்பாகும்
வெந்து வீழுமம்மா
வீணர் ஆணாதிக்கம்..
வீட்டில் பெண்ணை
அடிமைப் படுத்தும்
மூடர் பரம்பரை
மண்ணில் சாய
வேர் பொசுக்கி
வெற்றிக் கொள்வோமம்மா...

அதுவரை
கலக்காதே அம்மா
கள்ளிப்பலை

எனையோர்
குப்பைத்தொட்டியிலாவது
எறிந்து விடு

கலக்காதே
அம்
ஆ.........

2 comments:

Nagulan said...

super....

Nagulan said...

super...