Friday, July 24, 2009

"வானம்" அல்லது "மேகங்கள்"

கருத்தமுகில் வாராமல் வெங்கதிரா லிங்கே
வெடித்து நிலமும்பா ழாகக் கரைபடிந்த
மூடமிலேச் சன்போல் கொடுக்க மனமின்றி
வான மிருக்கே வறண்டு.

திரு. இராச குருவின் வானம் அல்லது மேகம் தலைப்பிற்கு எழுதியது.
[சென்னையில் இப்படித்தானே இருக்கு வானம்?]
திரு அமுதாவின் வருத்தம் பாவாக

அழைத்தால் வருமோ அருந்தமிழர்க் குத்தீங்
கிழைத்தல் தகுமோ இழையாய்! -பிழைத்தார்
வடவர் அதனால் மழைவாரா தங்கே!
கிடந்தூர்க அன்றாடங் கெட்டு!

திரு அமுதாவின் வருத்தம் நியாமனதாக் இருந்தாலும்

ஓர்தாலி போனதற்(கு) ஊர்தாலி கொண்டதும்
ஒவ்வாதென் றாயுண்மை; ஆயின் ஒருவரால்
மற்றவர் துன்புறலா மோ'புவியில் நல்லார்
ஒருவர் உளரேல் அவர்பொருட்டெல் லார்க்குமழை'
என்றவோர் கூற்றை மறந்து மனமுடைக்கும்
சொல்லால் சுடுதல் தகுமோ? பிழையிங்கே
ஒருபுறம் பாவம் மறுபுறமோ? தாய்வாட
மைந்தன் மகிழ்வதுவோ? மண்ணுலகில் மாமழை
வேண்டும் மனிதம் செழிக்கமன தாலும்
வசைச்சொற்கள் வேண்டாம் விலக்கு!

என்ற என் ஆதங்கத்திற்கு அமுதாவின் இனிமையான பதில்

பகலில் நிலவினைப் பார்ப்பரி தற்றால்*
வெகுளி* மிடுதியால் மெய்யறிவு கெட்டேன்;
செறிந்த கவிபுனைந்து சேயிழையே!நன்றாய்
அறைந்தீர் இளையோன் அதுகொண்டேன்;வன்சொல்
விலக்கென்றீர் தோழீ! விரைந்தேற்றேன்;இன்சொல்
இலக்கன்றோ யார்க்கும்?! இதனை யுணராது
யாரோ சிலபேர் இழைத்த இடுக்கண்ணுக்(கு)
ஊரே பொருப்பென்(று)உரைத்தேன் இதுதவறே;
'நாயாற் கடியுற்றார் நாடியந் நாயைத்தன்
வாயாற் கடித்த வழக்கில்லை'என்னுங்கால்
எய்தோர் இனித்திருக்க அம்பதனை நோதல்போல்
வைதேன் வசைச்சொல்லால் வையத்து மக்களை;
ஆள்வோர் பிழைத்தால் அருங்குடிகள் என்செய்வார்?
ஆள்வோரை விட்டிங்[கு] அடுத்தவரை நொந்தேனே!
அய்யோ!பிழைசெய்தேன் அம்மா!வெகுளியால்
மெய்யறிவு கெட்டேன்;விரை*தங்கு செய்யமலர்
மீதமர் மாதே! விளம்பக்கேள்! தோழனிவன்
நாத்தழும் பேற்றி நவின்றவுரை தீய்த்தற்கு
மன்னிக்க வேண்டுகிறேன் மாமழையாய்க் கண்ணீரை
அன்புடையுன் தாளுக்[கு] அணிசெய்தேன் அன்றீன்ற
தாயைப் பழிப்பதுவும் தாய்மண்ணைச் சாடுவதும்
தீயிற் கொடியதோர் செய்கை எனத்தேர்ந்தேன்
பெய்கமழை யே!நான் பிறந்தநந் நாடுவளம்
எய்யப் புயலே* எழு.


பார்பரிது அற்றால் -பார்ப்பதற்கு அரிது போல [ஆல்-ஓரசை];வெகுளி-கோபம்;விரை-மணம்;புயல்-முகில்.

அமுதாவின் வேண்டுகோளுக்கிசைந்தாள் அன்னை.

சேய்செய் சிறுபிழை தாய்மறந் தாளிங்கே,
செந்தமிழ்த் தாயின் தவப்புதல்வா, உன்னினிய
நற்றமிழ்ப் பாவால் நலம்கண்டா ளன்னை
வரமாய் பொழிந்தாள் மழை.

[வழக்கம் போல் என் வெண்பாக்களில் பிழைத் திருத்தி, பதிலளித்தும், என்னை இந்த அளவிற்கு வெண்பா எழுதவைத்து,வலைச்சரத்தில் என்னை வெகுவாகப் பாராட்டியும் எனக்கு ஊக்கமளிக்கும் திரு.அமுதாவிற்கு நன்றியுடன்]
5 comments:

தமிழ் said...

அருமையான வரிகள்

ஆ.ஞானசேகரன் said...

புரிந்துகொள்ள எனக்கு கடினமாக இருக்குங்க.... இருப்பினும் புரிந்தவரை நல்லாயிருக்கு

உமா said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு.திகழ்மிளிர்.

உமா said...

வருகைக்கு நன்றி ஞானசேகரன். சென்னையின் வரண்ட வானிலையைத்தான் பாவாக எழுதியிருந்தேன்.[நீங்க சிங்கையல்லவா அதுதான் புரியவில்லை] இலங்கை தமிழருக்குத் தீங்கிழைத்ததால் மழைவராதங்கே என்று அமுதா பதில் பா எழுத, தாயைப் பழிக்காதே என்று நான் வெண்பாவில் கூற, மன்னிப்பும் பா வடிவில் வர, மன்னித்த தமிழன்னை வரமாய் மழைப் பொழிந்ததாக முடித்தேன். அவ்வளவுதான். மீண்டும் படித்தால் புரியும். நன்றி.

அகரம் அமுதா said...

/////சேய்செய் சிறுபிழை தாய்மறந் தாளிங்கே,
செந்தமிழ்த் தாயின் தவப்புதல்வா, உன்னினிய
நற்றமிழ் பாவால் நலம்கண்டா ளன்னை
வரமாய் பொழிந்தாள் மழை./////


நற்றமிழ்ப் பாவால் நலங்கண்டா ளன்னை
வரமாய்ப் பொழிந்தாள் மழை!

ஒற்றுமிகவேண்டும்.நாம் இருவரும் விளையாடிய இந்த வெண்பா விளையாட்டை மீண்டும் ஓர்முறை அசைபோட்டேன். பாவும், அந்நினைவும் நெஞ்சிற் றேனாய் இனிக்கிறது. வாழ்த்துக்கள்.