Thursday, August 20, 2009

காத்திடுவாய் கந்தா.

காத்தருள்வாய் கந்தா கருவிழியைக் கண்ணிமைக்
காத்தல்போல் காப்பாய்; கடம்பா கதறுகிறேன்
காட்டுன் கருணை கதிர்வேலா காகிதக்
கப்பல் கடல்கடக் க.

காகிதக்கப்பல் கடலைக் கடக்க இயலாது, அதுபோல் இவ் வாழ்க்கை எனும் கடலைக் கடக்கத் தெரியாது தத்தளிக்கிறேன். கந்தனே எனைக்காப்பாயாக!
கருவிழிக்கு வரும் தீங்கை கருவிழி தன்னால் தடுக்க இயலாது. விழிக்குக்துணை இமையே. அதுபோல் எனக்குத் துணை நீயே,எனக்குறும் பகையை கந்தனே உன்னால் மட்டுமே அழிக்க இயலும். என்னால் ஆவதிவ்வுலகில் எதுவுமில்லை. என்னை நல்வழி படுத்தி எனைக் காத்தருள்வாய் குகனே.

திரு.தமிழநம்பி அவர்கள் திருத்தியதன் பின்.
காத்தருள்வாய் கந்தா கருவிழியைக் கண்ணிமை
சாத்திப் பரிவாய்ச் சலியாது ஓம்புதல்போல்
காட்டுன் கனிவருளை! கதிர்வேலா காகிதக்
கப்பல் கடல்கடக் க.

8 comments:

தமிழ் said...

அருமை

அனைவரையும் காத்திட‌
கந்தனை வேண்டுவோம்.

அதிலும் "க" என்று அத்தனை சொற்களும் தொடங்குவது அற்புதம்

ஆ.ஞானசேகரன் said...

ஓஒ... கடவுள் பாவாக இருக்கின்றது...

அவனடிமை said...

உமா அவர்களே, 'க' வில் இன்னிசை அருமை.

இதோ அதே 'க' வில் ஒரு நேரிசை, அதே கடவுளை கூப்பிட்டு:

காத்திருந்தாள் கன்னி கனிந்துறங் காதவளைக்
காத்தணைத்தக் கள்வா! குருபரனே! - கூத்தனே
கண்ணுங் கருத்துமாய்க் கேட்டக் கருத்தினால்
கின்னம் களைந்தென்னைக் கா.


'கின்னம் களையும் கிருபை சூழ் சுடரே' என்று பாடிய அருணகிரியாரின் தாக்கம்....

'உறங்காது' என்ற சொல்லை ('காத்திருந்தாள் கன்னி கனிந்து உறங்காது') என்று பக்தை வள்ளிக்கும் கொள்ளலாம், இல்லை (உறங்காது அவளைக் காத்து அணைத்த') என்று கந்தனுக்கும் கொள்ளலாம் ;

பக்தன் கனிந்து அழைக்கும்போது கடவுளுக்கு உறங்க முடியாமல் போய், ஓடோடி வருவானாம்....

உமா said...

அவனடிமையார் அவர்களே மிக்க அருமை. கின்னம் என்பது கீழ்மை என்றுதானே பொருள்?
அற்புதம்.

அவனடிமை said...

ஆமாம், 'கின்னம்' என்றால் 'Affliction, sorrow, distress; துன்பம்' என்றும் கொள்ளலாம், 'Lowness; கீழ்மை' என்றும் கொள்ளலாம்.
(பார்க்க: http://tinyurl.com/ma5w3b - Univ. of Madras - Digital Dictionary of South Asia தளம்)

அவனடிமை said...

இன்னொரு கந்தன் பாட்டு:

காதல் கசிந்துள்ளங் கண்ணீராய்க் கொட்டிட
நாதன் நினைவை நிறைத்திடுவான் - பேதம்
அறுத்தே அகந்தையைக் கொள்ளை யடிக்குந்
திருடன் குஹரம ணன்.


உங்கள் இஷ்ட தெய்வம் முருகனோ ?

உமா said...

ஞானசேகரன், தொடருக்கு என்னை அழைத்து சில நல்ல விடயங்களைப் பற்றி சிந்திக்க செய்தீர்கள். மிக்க நன்றி. மிக அற்புதமான பதிவிற்கு மீண்டும் பாராட்டுக்கள். தொடர்கிறேன்.
அன்புடன் உமா.

உமா said...

உங்கள் இஷ்ட தெய்வம் முருகனோ ?

திரு.அவனடியார் அவர்களே, எனக்கு குழந்தைக் கண்ணணும்,பாலகன் முருகனும், தொந்திகணபதியும் மிக மிக மிக இஷ்ட தெய்வங்கள்.