Sunday, September 20, 2009

பாரதி தாசன் - [ இணைக்குறள் ஆசிரியப்பா ]



புரட்சி புலவன் பாரதி தாசன்

பரந்த உலகினில்

பொருட்களை எல்லாம்

பொதுவாய் வைத்திடும்

புதுமைச் சொன்னான்..

உழைப்பின் பலனெலாம்

உழைப்பவர் தமக்கே உரிமையாம் என்பதை

உரக்கச் சொன்னான்...

நன்றாம் அவன்நமை நாடச் சொல்லும்

ஒன்றாய் உளஞ்சேர்

காதல் திருமணம்,

கைம்பெண் மறுமணம்,

மண்ணில் மாந்த ரெல்லாம்

ஒன்றெனும் சமத்துவம், சகோத ரத்துவம்..

இன்னும் நம்மிடை இருக்கும்

மூடப் பழக்கம்

மிதிக்கச் சொன்னான்,

பகுத்தறி வாலதைப் போக்கச் சொன்னான்..

பெண்ணைச் சமமாய் மதித்திட

கண்ணாய்த் தமிழைக் காத்திட

கருத்தில் நேர்மை

கருணை கண்ணியம் கலந்தே தந்தான்

விருந்தாய் அருந்தமிழ்..

அறிந்தே நாமதைச்

சுவைப்போம், மகிழ்வோம், நற்றமிழ்

சுவைப்போல் அவன்புகழ் வாழ்க! வளர்கவே!

1 comment:

duraian said...

அன்புச் சகோதரி,

தங்களின் வலைப்பதிவுகளும் , பின்னூட்டமௌம் , அறிவுரையும் எனக்கு புதியதொரு உந்துதலக் கொடுத்துள்ளது .
வெண்பா பற்றி படிக்கத் தொடங்கியுள்ளேன் .

புதிதாக ‘ மரபுக் கனவுகள் ‘ என்ற வலைத்தளம் ஆரம்பித்துள்ளேன்,

http://marabukkanavukal.blogspot.com/

கருத்து அறிய ஆர்வமாய்க் காத்திருக்கிறேன்