Sunday, May 30, 2021

கத்தி யின்றி ரத்த மின்றி

கத்தி யின்றி ரத்த மின்றி
யுத்த மொன்று நடக்குது...
சத்தி யத்தின்  நித்தி யத்தை
சற்ற சைத்துப் பார்க்குது...

குதிரை யில்லை யானை யில்லை 
கொல்வ திங்கோர் கிருமியே... 
எதிரில் நிற்கும் எவரென் றாலும் 
எடுத்துக் கொள்ளு மாவியை...

ஒண்டி யண்டி குண்டு விட்டிங் 
குயிர்ப றித்த லின்றியே 
மண்ணில் வந்து மூச்ச டைத்து 
மாந்தர் தம்மை மாய்க்குதே...  

கண்ட துண்டு கேட்ட துண்டு 
காய்ச்சல் கொல்லு மென்பதை
எண்ணி றந்த உயிர்கள் சாவ
தென்ப திங்கே கொடுமையே...

முகத்தை மூடி கையைக் கழுவி
முயன்று தடுக்க வேண்டுமே!
முடிவில் லாமல் தாக்கு மிந்த
முகமில் லாத பகைவனை...

தள்ளி நின்று தனித்தி ருந்து 
கூட்டங் கும்பல் தவிர்க்கவே! 
மெல்ல மெல்ல மறையு மிந்த 
மனித குலத்தி னெதிரியே!!!  

5 comments:

Anonymous said...

அற்புதம்..வாழ்த்துகள்..

உமா said...

Anonymous,🤔!! நன்றி...

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

உமா said...

வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி திரு தனபாலன்...

Nanjil Siva said...

ஆஹா.. கவிதையை பார்த்தால் சந்தேகமேயில்லாமல் நீங்கள் ஒரு "இளையபாரதி" என சொல்ல வைக்கிறதே!!!...
https://www.scientificjudgment.com