Saturday, July 26, 2025

அந்தி வானம்



அந்தி வானம்…                                

 

நிலா

பெண்ணை

வண்ண

கோலமிட்டு

அழைக்கிறது

அந்தி…

 

இரவு

சீவி முடித்து

சில பூக்களைச்

சொறுகியிருக்கிறதோ!!!


இரவே

எங்கே வைத்தாய்

நட்சத்திர புள்ளிகளை!

வண்ணத்தோடு

கோலமிட காத்துகிடக்கிறது

வானம்...

 

கருப்பும் வெளுப்புமாய்

சில மேகங்கள்

நீலமாய் சிறு வானம்

மஞ்சளாய்

ஆரஞ்சு நிறமாய்

சிவப்பாய்

சிரிக்கும் அந்தி

இங்கென்ன

ஐபிஎல்

மட்டைப்பந்தா

நடக்கிறது….


நிலா பெண்ணின் 

வீட்டை

அலங்காரம்

செய்கிறதோ!

அந்தி...


மிகப் பெரிய

இரங்கோலி

அந்தி வானம்...

 

Thursday, July 24, 2025

தீதும் நன்றும்

இடிக்கின்ற மேகம் மின்னல்

இசையோடு கருவி வானம்

கொடுக்கின்ற மழையின் தூறல்

கொள்கின்ற தன்மை யாலே

குடிக்கின்ற நீரும் ஆகும்

குழம்பியதே சேறும் ஆகும்

பெறுகின்ற இயல்பி னாலே

பெற்றதன் நன்மை மாறும்


வருகின்ற தீதும் நன்றும்

வழிகாட்டும் உணர்ந்து கொள்வாய்

தருகின்ற தீமை தன்னை

தண்ணீரைப் போலே ஏற்பாய்

கிடைக்கின்ற அனுப வந்தான்

கற்கின்ற பாடம் ஆகும்!!

போகின்ற திசைகள் எல்லாம்

புகழோடு வாழ வைக்கும்

Tuesday, March 04, 2025

எனது கவிதைகள் போட்டிக்கானவை அல்ல…

போட்டி

சில சமையம்

ஒரு நல்ல சந்தர்ப்பமாக

அமையலாம்

கவிதை படைக்க…

 

அனால்

எனது கவிதைகள்

போட்டிக்கானவை அல்ல

 

மனத்தில் எழும்

ஒரு நொடி சிந்தனை

கவிதையாய்

வெளிப்படும்…

 

காதலே ஆனாலும்,

கற்பனை மனத்தில்

கருவானால் தான்

கவிதை ஆகும்

 

செந்தமிழ் சொல்லும்

தெளிந்த சிந்தனையும்

சேர்ந்தால் மட்டுமே

கற்பனை சிறகடித்து

வானம் தொடும்

 

கவிதைப்பூ

மலரும்

 

எனது கவிதைகள்

போட்டிக்கானவை அல்ல

 

நெஞ்சில் மலர்ந்த

விதையின்

துளிர்கள்

 

சிந்தனை சிற்பியில்

உருவான

முத்துக்கள்…

 

கற்பனை வானின்

நட்சத்திரங்கள்

 

எனது கவிதைகள்

போட்டிக்கானவை அல்ல…

Tuesday, February 18, 2025

அப்பாடா...!


அன்று

அம்மா மடி விட்டு

ஓட ஆரம்பித்தேன்…

 

இளமையில்

இன்பங்கள் அனைத்தும்

துய்த்தேன்…

 

குடும்பம்  குழந்தைகள்

கடமைகள் கடந்து

வந்தேன்…

 

துன்பங்களும்

எனக்கு

துணையானதைக்

கண்டேன்.

 

திரும்பிப் பார்க்கும் போது

எனது

இரகசியங்கள்

எனைக் கண்டு

சிரிப்பதைப்

பார்க்கிறேன்…

 

நான் வாங்கிய

முதல்  வண்டி…

இனி

எனது

பயணத்திற்கு

உதவாது …

 

எனது

சொத்துக்கள்

கைமாறிப்போகும்…

 

என்னுடன்

துணையாக

என் துணைவியும்

வரயியலாது….

 

இனி

எதற்கு

என்னுடையது என்று ஒன்று

 

எனது

இருப்பை

நியாயப்படுத்த

 

இனி ஈயப் போகிறேன்…

 

சிறுவர்களுக்கு

கல்வி

பெரியவர்களுக்கு

உணவு

முயற்சி செய்பவருக்கு

இயன்ற உதவி

 

எனது

இருப்பை

நியாயப்படுத்த

 

இனி ஈயப் போகிறேன்…

 

அப்பாடா…

இப்பொழுதுதான்

நான் எனக்காக

வாழ்கிறேன்…