Thursday, July 16, 2009

திரு.அகரம் அமுதா அவர்களின் பதிவில் பின்னூட்டங்களாக எழுதிய சில வெண்பாக்கள்.


நம்மை பெற்று வளர்த்து இந்த பூமியை நமக்கு விட்டுத்தந்த நேற்றய சமுதாயமும் நடுத்தெருவில் வீழ்ந்திருக்க நாம் காக்க வேண்டிய நாளய சமுதாயமும் நலிந்திருக்க இன்றய சமுதாயம் சாதித்தது என்ன? இப்படி பலர் நலிந்திருக்க நாம் உண்டு உடுத்தி வாழ்வது வெக்கமாகவும் வேதனையாகவும் உள்ளது. மனித்தன்மை செத்துவிட்டதா? அதன் இலக்கணம் தான் மாறிவிட்டதா?

மெத்தப் படித்தும் பயனில்லை முன்னவர்
எத்தனையோப் பட்டும் புரியவில்லை நித்தமிங்குப்
போரை விரும்பிப் புரிந்திடுவார் பூமியில்
யாரைத்தான் நோவதோ போ.

மண்ணுற்ற சோகம் மனம்சுட்ட துண்மையே;
கண்ணுற்ற போது கவியெழுத சொல்லில்லை
சோர்வுற்ற நெஞ்சின் துயர்களையக் கற்ற
தமிழன்றி இல்லை துணை


வட்டில் உணவில்லை வாடி எலும்புடன்
ஒட்டிய தோலில் உடையில்லை கத்தி
அழுமோசை காதில் விழவில்லை செத்து
விழுந்திடுதே செய்கையிலா நெஞ்சு.

இன்னல் அகன்று இனிதாய் இவர்வாழ
மின்மினிகள் கைக்கோர்த்து கண்ணோ[டு] விளையாட
கற்று உயர்ந்திவர் காதலித்த றம்நாட
கற்பனைச் செய்திடுதே நெஞ்சு
.

வயதொன்றே காரணமாய் வாழ்த்துகின்றேன் நற்றமிழை
நாடகத்தில் நாட்டியே முத்தமிழின் முத்தெடுப்பாய்
நற்கவியாம் உம்பணியை நாமகளும் நாடுகின்றாள்
இல்லை உமக்கே யிடர்.

அமுதாவின் தமிழ் பற்றும், அவரது பணியையும் வாழ்த்தி எழுதியது.


நாணுகின்றேன் நற்றமிழில் நீரெனையே ஓர்கவி
என்றதனால், நாடுகின்றேன் உந்தனையே நற்கவியை
நான்புனைய நல்லிலக்க ணங்கற்பிக் கும்நீர்
எனக்கே இராச குரு.

Add Video
யாப்பிலக்கணத்தோடு சொல்லிலக்கணமும் கற்பிக்கும் திரு.இராச குரு அவர்களுக்கு வணக்கத்துடன்.


எங்குற்றாய் என்றீர் தமிழின் இனிமைப்
பயின்றிட காத்திருக்கி றோமிங்கு நன்றாம்
பிரவா கமென்னு மிலக்கண நண்பர்
குழுப்பக்கம் சற்றே திரும்பு.

[பிரவாகம் குழு பக்கம் அமுதா வராது போனதால்]

Friday, July 10, 2009

கடவுளைக் கொல்லாதீர்

தீயின் வெம்மை -கடவுள்;
நீரின் நீர்மை -கடவுள்;
பெண்ணில் தாய்மை -கடவுள்;
கண்ணில் பார்வை -கடவுள்;
மண்ணின் உயிர்ப்பே -கடவுள்;
விண்ணின் விரிப்பே -கடவுள்;
நெஞ்சில் நேர்மை -கடவுள்;
நினைவில் கருணை -கடவுள்;
எண்ணம் கடவுள்;
எழுத்தும் கடவுள்;
எண்ணிப் பார்த்தால்
நீயும் கடவுள்,
நானும் கடவுள்;
ஆதலால் உலகத்தோரே!
தீயில் நன்மைக் காண்பீர்
நீரின் தன்மைக் கொள்வீர்
நெஞ்சில் தாய்மைக் கொண்டே
மண்ணில் உயிர்கள் காப்பீர்
தன்னில் தெய்வம் கண்டால்
மண்ணில் மனிதம் வாழும்.

Wednesday, July 08, 2009

எழுத்துப் பிழைநீக் கியன்று!

மண்முத லாய்ப்பிறந்து குன்றாப் புகழினோ(டு)
எண்ணிலடங் காரிதயத் தில்காத்தி ருந்து,களை
நீக்க இலக்கணம் கண்டே இலக்கியமும்
பெற்றதாம் சீரிளமைச் செந்தமிழ்த்தன் பண்டைச்
சிறப்போடு கண்ணியு கம்தாண்டி யென்றும்
தழைக்கத் தமிழா! தமிழ்பேசு; முற்றாய்
எழுத்துப் பிழைநீக் கியன்று!

திரு அகரம் அமுதாவின் 'வெண்பா எழுதலாம் வாங்க' பதிவில் எழுதியது. திரு. அமுதாவின் சில திருத்தங்களுடன் இங்கே.

Saturday, June 27, 2009

மனம்மயக்கும் மாயத் தமிழ்

தேனினிக்கும் செந்தமிழால் நாவினிக்கும் ஏடினிக்கும்
இன்தமிழை நாமெழுத, வாழ்ந்திருக்கும் நற்றமிழும்
நாம்படிக்க, காப்பதற்கே தாமதமேன் கற்போம்
மனம்மயக்கும் மாயத் தமிழ்.

திரு.அமுதா அவர்களின் 'வெண்பா எழுதலாம் வாங்க' பகுதியில் எழுதியது.

Wednesday, May 13, 2009

எதிர்பார்க்கிறோம்

திரு அமுதா அவர்கள் குறள் வெண்பாவிலான சிறுவர்களுக்கான 'மழலை மருந்து' என்ற நூல் ஒன்றை வெளியிட இருக்கிறார்.மிகக் குறைந்த கால அவகாசத்தில் எழுதியிருக்கிறார். அவரது நூல் மிகச்சிறப்பான முறையில் வெளிவர வாழ்த்துகளுடன்.....

சீறாய் சிறுவர்தம் சிந்தை சிறந்திட
நேராய் சிலசொல்லை சேர்த்திங்கு என்றுமே
மாறாத பண்பை மனதில் பதித்திட
தாராய் 'மழலை மருந்து'.

தண்ணெண மாறும் தழல்

அங்கமெல்லாம் ஆறாக அக்கினிதான் சுட்டாலும்
தங்கமெல்லாம் தானுருகி ஓருருவம் கொண்டதுபோல்
கண்மணியே என்னெதிரில் சேயுனைக் கணடதுமே
தண்ணெண மாறும் தழல்.

Thursday, May 07, 2009

ஈழத் தமிழா எழு

பொன்னும் பொருளுமே போனால் பெரிதில்லை
கண்ணெதிரே மானம் இழந்திங்கு பெண்மையே
வீழ பயந்தது போதும் வெறியொடு
ஈழத் தமிழா எழு

மெய்யடா மெய்யடா மெய்

இலங்கையில் நடக்கும் அட்டூழியங்கள் கண்டு மனம் கொதிப்பது உண்மை.

போரை நிறுத்துவதாய்ப் பொய்சொல்லிப் பல்லோரின்
கூரை பெயர்த்துதறி பெண்ணைக் குதறும்
நயவஞ் சகமெண்ணி நெஞ்சம் கொதிப்பது
மெய்யடா மெய்யடா மெய்.

[திரு.அமுதா திருத்திய சில மாற்றங்களுடன்]

கூட்டனி யாருடனோ கூறு

அரசியல் இல்லா கூட்டனியிது.

சின்னத்தி ரைசினிமா சீரழிக்கும் சூது
கணமழிக்கும் தீப்பழக்கம் போதை புகையிவை
தன்னில் மனம்துலக்கும் புத்தகத்தோ டன்றிகற்றோர்
கூட்டனி யாருடனோ கூறு.

உழவின்றி உய்யா[து] உலகு

அமுதா அவர்கள் கொடுத்திருந்த ஈற்றடி கொண்டு சில வெண்பாக்கள்

கருவிகலை செய்தொழில் யாவும் புகழ்தரலாம்
மாந்தர் உறுபசி தீர்க்க உடல்வளைத்தே
ஏழை விதைத்தநெல் போலாமோ ஏற்பீர்
உழவின்றி உய்யா துலகு

ஈகலப்பை கொண்டு எழுதியே வந்தாலும்
ஏர்கலப்பை இல்லா தியலுமோ மண்ணில்
பசித்தவுயிர் 'பா'எழுது மோபசி தீர்க்கும்
உழவின்றி உய்யா துலகு.

Tuesday, April 28, 2009

பட்டாம்பூச்சிக்கு bye bye

வண்ண சிறகசைத்து
வட்டமிடும் வண்ணத்துப்பூச்சியே, என்
எண்ண இதழ் விரித்து
மலர்ந்திருந்த
கவிதை பூக்களில் நீ
தேனை மட்டுமா அருந்திச்சென்றாய்
சில மகரந்தங்களையுமல்லவா
தூவிச்சென்றிருக்கிறாய்.

எத்தனை பூக்களை
அறிமுகம் செய்துவைத்திருக்கிறாய்.

என் கவிதைகளில்
வாசம் விட்டுச்செல்லும்

வண்ணப்பூச்சியே
உன்னை வழியனுப்ப
மனதில்லைதான்..
என்றாலும் சென்று வா...
ஆனால்
மறுபடியும் வா
உன் அரும்பசி தீர
சில அரிய மலர்களில்
தேன் நிரப்பி
தருகிறேன்.

இப்போது
அன்புடன் போய்வா...

இந்த பட்டாம் பூச்சியை நான் அனுப்புவது


பூக்களையும், பட்டாம் பூச்சிகளையும், கண்ணாமூச்சி விளையாட்டுகளையும் மறந்து பதுங்கு குழியில் பயந்திருக்கும் பிள்ளைகளின் அவலத்தை தன் கவிதைகளில் கண்முன்னே காட்டும் திரு. தீபச்செல்வன் [
http://deebam.blogspot.com/] அவர்களின் தோட்டத்திற்கு. கவிஞர் தீபச்செல்வன் ஈழத்தின் முக்கிய கவிஞர்களில் ஒருவர். இவரது 'பதுங்குக்குழியில் பிறந்த குழந்தை 'புத்தகத்தை கண்காட்சியில் வாங்கியதன் பின்பே இவரது வலைப்பதிவைப்பார்த்தேன். நெஞ்சை உலுக்கும் இலங்கை தமிழர் படும் அவதிகள் புகைப்படங்களாகவும் கவிதைகளாகவும் இவரது பதிவில். இவருக்கு இவ் விருதை வழங்குவது ஒரு படைப்பாளிக்கு அவர் படைப்பை நேசிக்கும் ஒரு வாசகியின் காணிக்கையாகத்தான். அவர் இதை ஏற்றுக்கொண்டால் பட்டாம்பூச்சி விருது பெருமை பெரும்.

அடுத்ததாக அகரம் அமுதா [http://agaramamutha.blogspot.com/] அவர்களுக்கு
வார்ப்பு இதழில் வெளியான இவரது கவிதைகள் மூலம் எனக்கு அறிமுகமானவர். சிறந்த மரபு கவிதைகள் எழுதக்கூடியவர். இவரது 'வெண்பா எழுதலாம் வாங்க' பகுதியில் எளிமையாக வெண்பா இலக்கணம் கற்றுக்கொடுத்திருப்பார்.மிக அற்புதமான ஆசிரியர். இவரது தமிங்கிலிஷ்.காம்,இலக்கிய இன்பம், அகரம் அமுதா ஆகிய வலைத்தளங்கள் இவரது மற்ற முகங்களை அடையாளம்காட்டும். இவரது ஊதுபத்தி கவிதை மிக இனிமையானது. இவரது கவிதைகளை புத்தகமாக வெளியிட எண்ணியிருக்கிறார். அவர் எண்ணம் நிறைவேற வாழ்த்துக்கள்.ஆவலுடன் காத்திருக்கிறோம். இவருக்கு இந்த விருதை குரு தட்சினையாக வழங்குகிறேன். ஏற்றுக்கொண்டால் மகிழ்ச்சியடைவேன்.

அடுத்ததாக தோழி ஹேமா [
http://kuzhanthainila.blogspot.com/] பின்னூட்டங்கள் வழியாக இவரை அறிந்தேன். யாழ்பாணத்துக்காரர். தன் தேசத்து துயரைத் தன் கவிதைகளில் வழியவிட்டிருப்பார்.ஊடகங்க்கள் மூலம் நாம் காணும் இலங்கை வேறு. தோழி ஹேமா மற்றும் திரு.தீபச்செல்வன் காட்டும் இலங்கை வேறு.இவருக்கு இவ் விருதைத்தருவது இவர் தேசத்து மக்கள் வாழ்வில் மலர்கள் மலரவும், மலர்தோறும் பட்டாம்பூச்சிகள் வட்டமிடவும்,பதுங்க்கு குழிவிட்டு குழந்தைகள் பள்ளிக்கூடம் போகவும் இறைவனை பிரார்த்தித்த படி.
அதுமட்டுமல்ல இவரடு இன்னொறு வலையான உப்பு மடச்சந்தியில் தோஸ்து சென்னைத்தமிழை ஆராய்ந்து தூள் கிளப்பியிருப்பார். அதற்காக டாக்டர் ? பட்டமெல்லாம் பெற்றிருப்பார். நாமும் இந்த விருதை கொடுத்து வைப்போமே.
எனக்கு பட்டாம்பூச்சியை அறிமுகப்படுத்திய திரு.சொல்லரசனின் [
http://sollarasan.blogspot.com/] வலைமூலமாகத்தான் பல வலைப்பக்கங்களை புரட்டும் வாய்ப்பு கிடைத்தது. என் பதிவுகளில் பின்னூட்டமிட்டு எனக்கு உற்சாகமூட்டினார். அவருக்கு நன்றியுடன் பட்டாம்பூச்சிக்கு bye,bye.

















Thursday, April 23, 2009

பட்டாம்பூச்சி விருது

பட்டாம்பூச்சியை என் தோட்டத்தின் பக்கம் பறக்கவிட்ட திரு.சொல்லரசன் அவர்களுக்கு மிக்க நன்றி. எனது வலைப்பக்கம் எனது குறிப்பேடு மாதிரி, நான் மட்டுமே எழுதி படித்து வந்தேன். சமீபகாலமாக பல நண்பர்கள் வருகைத்தருவதும் பின்னூட்டமிடுவதும் எனக்கு ஆச்சரியமானதே. மகிழ்ச்சியும் கூட. இன்னும் நிறைய எழுத வேண்டும் என்ற ஆவலும் மேலோங்குகிறது. ஆனாலும் இந்த பட்டாம்பூச்சி கொஞ்சம் பாவம் தான். பல அரிய [வலைப்] பூக்களைஎல்லாம் பார்த்த பின் என் சின்னச் செடிகளில் சற்றே ஏமாறலாம். இருந்தாலும் சிறிதேனும் என் கருத்துத்தேனை பருகுமாயின் மகிழ்ச்சியடைவேன்.

Thursday, April 09, 2009

காலணியும் கதைச் சொல்லும்

நடந்து வரும் காலணியே நீ
பறந்து வர நேர்ந்ததென்ன?

பேசாத வாய்திறந்தே நீ
சொல்லுகின்ற செய்தி என்ன?

வேடிக்கை இல்லையிது
என் வேதனையைச் சொல்லிடுவேன்.

எத்தனையோ கூட்டத்தில்
காலடியில் நான் கிடந்தேன்..
கட்டுண்டு இருந்ததனால்
கருத்துச் சொல்லாமலே
நானிருந்தேன்...

கரடு முரடு பாதையிலே
காலைக்காத்து நிற்கையிலே
அத்தனை சோகத்தையும்
அறிந்துக் கொண்டு
தானிருந்தேன்...

ஒருவன் செய்த
குற்றத்திற்கு
ஓரினமே அழிவதென்றால்
வீழும் சனநாயகம்
விரக்தியினால் சொல்லுகின்றேன்

பாழும் ஊழல்
பறித்ததன்று ஓருயிரை....
எனின்
வீணே ஓரினமே
சாகத்தூண்டிவிட்டார்
என்றாலும்
ஆகாதிவர் மேல் குற்றமில்லை
என்றே அறிவித்தது
அடுத்த ஊழல்

பட்டது பணக்காரரென்றால்
பத்தி பத்தியாய் எழுதுகின்றார்
பாரையே திரும்பி
பார்க்கச் செய்கின்றார்...

பொல்லாத அரசியலில்
ஓரினத்தையே
ஓட ஓட விரட்டி
தலைப்பாகை தனைக்கண்டால்
தலையையே
வெட்டி வீழ்த்தி,
மொட்டையடித்து
வெறியாட்டம் ஆடியவர்
வெகுளியாய் அறிவிக்கப்படுகிறார்.

பதவியிலிருப்போர்
பதிலளிக்காது
பார்வையைத் திருப்புகிறார்..

பதைப்புடன் நானிருந்தேன்
பதிலளிக்க மாட்டாரா?
பட்டதோர் வேதனை
பாரரிய வேண்டாமா?

ஓட்டு கேட்கும் வேளையிது
விட்டுவிட்டால்
நியாயம் கிடைக்க வாய்ப்பில்லை

தன் இனமே அழிந்தாலும்
உணர்வின்றி ஓய்ந்திருக்க
நானென்ன
தமிழன் காலடிச் செருப்பா?

சீரிப்பாய்ந்து விட்டேன்
சீக்கியர் சிரம் காத்து
சினம் சொல்லி
செயலிழந்தேன்..

என் துணை
நானிழந்தாலும்
எத்துணை
இழந்தாலும்
சொற் துணை இன்றி
நான் சொன்ன சொல்
சீக்கிரமே உணர்ந்திடுவர்..

காலணிகள்
பறக்க ஆரம்பித்தால்
பாரதம்
தலைக்கவிழும்
சிந்திப்பீர்...

Friday, March 27, 2009

அணுவாற்றல் வேண்டும் அறி

அகரம் அமுதா அவர்களின் 'அணுவாற்றல் வேண்டாம் அகற்று' என்ற வெண்பாவிற்கு பின்னூட்டமாக எழுதியது.

*மேற்கின் அடிவீழ்தல் இல்லையிது காண்பாயே

ஏற்கின் கிழக்கும் உயர்ந்திடுமே -மேற்கு

கிழக்கிரண்டும் கைக்கோர்த்தே வையம் சிறக்க

அணுவாற்றல் வேண்டும் அறி.


*நம்பி விழுவதிங்கு நாமல்ல நம்திறமை

கண்டவரே வந்திட்டார், மாறும் உலகிலிவர்

வல்லார் இவரல்லார் என்பதெல்லாம் நன்காம்

அணுவாற்றல் வேண்டும் அறி


*வல்லார் அவரென்று வீணர் நினைத்திருக்க

பொக்ரான் வெடியிட்டே காட்டிட்டோம் நம்திறமை

ஒன்றாய் இணைந்தே உலகம் விளங்க

அணுவாற்றல் வேண்டும் அறி

Sunday, March 22, 2009

கண்ணாடி என்செய்யும் காலணிதான் என் செய்யும்....

கண்ணாடி
என் செய்யும்
காலணிதான்
என்செய்யும்
முன்னாடியவர்
சொன்ன சொல்
மதியிழந்தோர்
மறந்தனரே
காந்தியோடு
போயிற்றே
நேர்மையும் :-உண்மை
அஹிம்சையும்...


கண்ணாடி
என் செய்யும்
காலணிதான்
என்செய்யும்
பைநிறைய
பொருள்வேண்டி
பெரும் புகையை
கிளப்பிவிட்டார்..
போதைப் பொருள் விற்ற
பெரும் பணம்தான்
கையிருக்க
புகழ் போதை
தனை வேண்டி
போயதையும்
வாங்கிவிட்டார்...


கண்ணாடி என்
செய்யும்
காலணிதான்
என்செய்யும்
ஏழை ஒருவன்
புல் தின்று பசியாற
வானம்பார்த்த விவசாயி
கடனேறி தலைவீழ
வரி ஏய்ப்பு செய்தவரோ
ஊழல் பல செய்தவரோ
வெட்கமின்றி
உலாவர
கொலை கொள்ளை
அத்தனைக்கும் வழிவிட்டே
சட்டம் போட்டு
காத்திருக்கும்
சமதர்ம சுயாட்சிச்
சமுதாயம் தன்னில்


கண்ணாடி
என் செய்யும்
காலணிதான்
என்செய்யும்
முன்னாடியவர்
சொன்ன சொல்
மதியிழந்தோர்
மறந்தனரே
காந்தியோடு
போயிற்றே
நேர்மையும் :-உண்மை
அஹிம்சையும்

Friday, March 20, 2009

காதல்

அவளிருப்பு
அவனிதயத்திலும்
அவனிருப்பு
அவளிதயத்திலும்
பட்டாம்பூச்சி
பறக்கச்செய்யும்


தாழ்ந்த விழி
தரை நோக்க
தனித்தியங்கும் நெஞ்சம்
வானவில் பார்க்கும்


பூ விதழ்
புன்னகை வீச
பூகம்பம் வெடிக்கும்
இதயத்தில்


இளமைக்காதல்
இனிமையாயிருக்கும்
உண்மையாயிருந்தால்


மெய்யாயிருந்தால்
மெய்தாண்டி
உயிர்த்தொடும்


கட்டில் தாண்டியும்
கரம் சேரும்


காலம் கடந்து
காலன் வென்றாலும்
கவிதையாய்
உயிர்த்திருக்கும்

Tuesday, March 17, 2009

கோடை விடுமுறை

மாமா வீட்டில்
மாம்பழத்திற்கும் சண்டை
மஞ்சள் பலூனுக்கும் சண்டை..
பொம்மையோ புத்தகமோ
பொழுதுக்கும் ஆரவாரம்..
ஒரு மாதமாய்
கவலையில் அம்மாக்கள்....
கழிந்ததும்
ஒன்பது மாதமாய்
கவலையில் குழந்தைகள்..
அடுத்த கோடைக்காக ஏங்கி....

அக்கரைப் பச்சை

கூலித் தொழில் செய்யக்
கூப்பிட்டார் அதை
நாடி நம்சனங்கள் சென்றனரே!

ஏர் ஓட்டிச்செல்லும்
தொழில் மறந்து
கார் ஓட்டிச் செல்ல
மனம் விழைந்து
காலநேரம் தனை இழந்து
கணிணி முன்னே
கண் இழந்தனரே...

வீட்டை விற்றே
படித்த பிள்ளைகள்
நாட்டை விட்டே
பறந்தனரே...
சோற்றை உண்ட
கையாலே விஷக்
'கோக்'கை குடித்து
களித்தனரே...

கதை கவிதை
கற்பனை களிப்பினை
காசு பணத்தில்
மறந்தனரே...
குடும்பம் கோயில்
கலாச்சாரம்
குதூகலத்தை
இழந்தனரே...

கண்டோம் அவர்நிலை
பரிதாபம் அவர்க்கு
காதல் கூட கட்டாயம்
கண்ணித்திரையில்
'சாட்' செய்தே
காதல் கூட
கைக்கூடலாம்
குடும்பம் நடத்தல்
கூடுமோ?...

பாவம் அவர்தொழில்
படுத்தாச்சு
பாதிபேர் வேலை
போயாச்சு..
ஏறும் ஏற்றம்
பெரிதானால்
வீழும் வீழ்ச்சியும்
பெரிதாமே....

உழைப்பை மறந்து
போனதனால்
உடல் நலங்குன்றிப்
போயினரே...
உணர்வோம் இதனை
இப்போதே
உழைப்பை எள்ளி
நகையாதே

படித்த படிப்பை
நாட்டிற்கே
பயன்படச் செய்வோம்
இந்நாளே..
திறமையுடன் நற்
தொழில் செய்தே
உற்பத்தி திறனைப்
பெருக்கிடுவோம்...

உலகில் தொழில்கள்
எல்லாமே
உழவை நம்பி
உள்ளதனால்
உடலின் உழைப்பை
தள்ளாமல்
ஊக்கம் கொள்வோம்
உறுதியுடன்...

நாட்டின் நிலமை
சீராக
நாடி தொழில் பல
செய்திடுவோம்.
வரப்புயர
நீர் உயரும்
நீ உயர
நாடுயரும்
நாடுயர
நாம் உயர்வோம்...
நன்றாய் இதை
நாம் உணர்வோமே....