Thursday, April 09, 2009

காலணியும் கதைச் சொல்லும்

நடந்து வரும் காலணியே நீ
பறந்து வர நேர்ந்ததென்ன?

பேசாத வாய்திறந்தே நீ
சொல்லுகின்ற செய்தி என்ன?

வேடிக்கை இல்லையிது
என் வேதனையைச் சொல்லிடுவேன்.

எத்தனையோ கூட்டத்தில்
காலடியில் நான் கிடந்தேன்..
கட்டுண்டு இருந்ததனால்
கருத்துச் சொல்லாமலே
நானிருந்தேன்...

கரடு முரடு பாதையிலே
காலைக்காத்து நிற்கையிலே
அத்தனை சோகத்தையும்
அறிந்துக் கொண்டு
தானிருந்தேன்...

ஒருவன் செய்த
குற்றத்திற்கு
ஓரினமே அழிவதென்றால்
வீழும் சனநாயகம்
விரக்தியினால் சொல்லுகின்றேன்

பாழும் ஊழல்
பறித்ததன்று ஓருயிரை....
எனின்
வீணே ஓரினமே
சாகத்தூண்டிவிட்டார்
என்றாலும்
ஆகாதிவர் மேல் குற்றமில்லை
என்றே அறிவித்தது
அடுத்த ஊழல்

பட்டது பணக்காரரென்றால்
பத்தி பத்தியாய் எழுதுகின்றார்
பாரையே திரும்பி
பார்க்கச் செய்கின்றார்...

பொல்லாத அரசியலில்
ஓரினத்தையே
ஓட ஓட விரட்டி
தலைப்பாகை தனைக்கண்டால்
தலையையே
வெட்டி வீழ்த்தி,
மொட்டையடித்து
வெறியாட்டம் ஆடியவர்
வெகுளியாய் அறிவிக்கப்படுகிறார்.

பதவியிலிருப்போர்
பதிலளிக்காது
பார்வையைத் திருப்புகிறார்..

பதைப்புடன் நானிருந்தேன்
பதிலளிக்க மாட்டாரா?
பட்டதோர் வேதனை
பாரரிய வேண்டாமா?

ஓட்டு கேட்கும் வேளையிது
விட்டுவிட்டால்
நியாயம் கிடைக்க வாய்ப்பில்லை

தன் இனமே அழிந்தாலும்
உணர்வின்றி ஓய்ந்திருக்க
நானென்ன
தமிழன் காலடிச் செருப்பா?

சீரிப்பாய்ந்து விட்டேன்
சீக்கியர் சிரம் காத்து
சினம் சொல்லி
செயலிழந்தேன்..

என் துணை
நானிழந்தாலும்
எத்துணை
இழந்தாலும்
சொற் துணை இன்றி
நான் சொன்ன சொல்
சீக்கிரமே உணர்ந்திடுவர்..

காலணிகள்
பறக்க ஆரம்பித்தால்
பாரதம்
தலைக்கவிழும்
சிந்திப்பீர்...

14 comments:

சொல்லரசன் said...

//என் துணை
நானிழந்தாலும்
எத்துணை
இழந்தாலும்
சொற் துணை இன்றி
நான் சொன்ன சொல்
சீக்கிரமே உணர்ந்திடுவர்..//

எல்லோரும் இத்துனை தேடினால் இந்தியா தாங்குமா?

சூடான நிகழ்வுகளை கவிதையாக்குவதில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான்.
தொடராட்டும் உங்கள் கவிதை.

ஆ.ஞானசேகரன் said...

//ஒருவன் செய்த
குற்றத்திற்கு
ஓரினமே அழிவதென்றால்
வீழும் சனநாயகம்
விரக்தியினால் சொல்லுகின்றேன்//

ஆகா....

ஆ.ஞானசேகரன் said...

//என் துணை
நானிழந்தாலும்
எத்துணை
இழந்தாலும்
சொற் துணை இன்றி
நான் சொன்ன சொல்
சீக்கிரமே உணர்ந்திடுவர்..

காலணிகள்
பறக்க ஆரம்பித்தால்
பாரதம்
தலைக்கவிழும்
சிந்திப்பீர்...//

உங்களின் ஆதங்கமும் தெரிகின்றது...

நன்றாக இருக்கு

உமா said...

நன்றி சொல்லரசன்.வலைப்பக்கம் காணவில்லையே கொஞ்ச நாளாக?

வருகைக்கு நன்றி ஞானசேகரன்.

தமிழ் said...

உண்மை தான்

உமா said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திகழ்மிளிர்.

ஹேமா said...

உமா,சில உண்மைகள் உடைத்தெறியப்பட்டிருக்கிறது உங்கள் வார்த்தைகளால்.

உமா said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி ஹேமா.

அகரம் அமுதா said...

////தன் இனமே அழிந்தாலும்
உணர்வின்றி ஓய்ந்திருக்க
நானென்ன
தமிழன் காலடிச் செருப்பா?////

சரியான செருப்படி...!

ஈழத்தமிழினம் அழிக்கப் படுவதுகண்டும் இங்கு ஒருவனும் தான் தலைவனாகத் தேர்ந்தெடுத்த அரசியலார்களைச் சட்டையைப் பிடித்துக் கேள்விகேட்கத் துணியமாட்டேன் என்றிருக்கிறான். முதலில் தமிழர்களைச் செருப்பால் அடிக்க வேண்டும்.

உமா said...

வணக்கம் அமுதா. நீண்ட இடைவெளிக்குப்பின் வலைப்பக்கம் வந்திருக்கிறீர்கள். நன்றி. ஆனாலும்
//இங்கு ஒருவனும் தான் தலைவனாகத் தேர்ந்தெடுத்த அரசியலார்களைச் சட்டையைப் பிடித்துக் கேள்விகேட்கத் துணியமாட்டேன் என்றிருக்கிறான். முதலில் தமிழர்களைச் செருப்பால் அடிக்க வேண்டும்//
என நீங்கள் கூறியிருப்பது வருந்தத்தக்கது. சாதாரணத்தமிழனுக்கு சாப்பாடே பிரச்சணை, தனிப்பட்ட மக்களின் உணர்வுகள் வெளிக்காட்டப்பட்டாலும் பாதிப்பு இருக்காது. இப்படிப்பட்டவர்களுக்கு எடுத்துக்கூறி உணர்வுகளைக்கூட்டி ஒன்றுசேர்க்க வேண்டுமேத்தவிர தமிழர்களை தவறாக சொல்லுதல் தவறு.
ஆங்கிலேயர் காலத்தில் கூட அவர்களின் அடிவருடிகள் எங்கும் இருந்தனர். அவர்களின் உணர்வுகளைத்தூண்டி அவர் உரிமைகளை எடுத்துரைத்து அந்நியருக்கு எதிராக போராட வைக்கத்தான் பலத்தலைவர்கள் ஆங்காங்கே தோன்றினர். அப்படிப்பட்ட வழிகாட்டிகள் தான் இன்றயத்தேவை. படித்தவர்கள் ஈழப்பிரச்சனையை அறிந்தவர்கள் மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்கள் பொறுப்பாக இதைச் செய்யவேண்டும்.இதற்காக இழப்புகளையும் சந்திக்க வேண்டும்.

அரசியல் வாதிகளை சொல்லுங்கள் தாராளமாகச் செருப்பால் அடிக்கலாம்.அதிகாரத்தில் இருப்பவர்கள் அவர்கள் நினைத்தால் முடியும் என்றாலும் பதவி வெறிக்காரணமாக மக்களை முட்டாளாக்குகிறார்கள். இவர்கள் எல்லாரும் நாம் போட்ட ஓட்டின் அடிப்படையிலா வெற்றி பெற்றார்கள். கருப்பு பணமும் கூட்டல் கழித்தல் கணக்கும் தான் இவர்களை ஆட்சியில் அமர்த்துகிறது. இவர்களைத்தான் கேள்வி கேட்கவேண்டும். சாதாரண மக்களுக்கு அறிவுறுத்தத்தான் வேண்டும். முடிந்த வரையில் அதைச் செய்வோம்.

Anonymous said...

காலணி கண்ட வீரம் நம் கல் நெஞ்சம் கொள்வதேன்றோ...ஆதிக்க முடிந்தும் சாதிக்க முடிந்தும் ஏனோ அவர் அறிக்கை மட்டுமே விடுகின்றார்... நாம் அறிவிலிகளா இல்லை அடிமைகளா விளங்கவில்லை...புலம்பி புலம்பி புன்னாகிபோறது தமிழ்..எத்தனை ஆதங்கம் எத்தனை அறிவுருத்தல் எத்தனை தீக்குளிப்பு எத்தனை போராட்டம் எதற்குமே மசியவில்லை பதவி ஆசை என்ன செய்ய...செருப்புக்காவது துணிவு வந்தது நமக்கு?

sakthi said...

சீரிப்பாய்ந்து விட்டேன்
சீக்கியர் சிரம் காத்து
சினம் சொல்லி
செயலிழந்தேன்..


superb mam

"உழவன்" "Uzhavan" said...

//எத்தனையோ கூட்டத்தில்
காலடியில் நான் கிடந்தேன்..
கட்டுண்டு இருந்ததனால்
கருத்துச் சொல்லாமலே
நானிருந்தேன்...//

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த காலணி, இப்போது பொறுமை இழந்து விட்டதோ?

//தமிழன் காலடிச் செருப்பா?//

சீக்கியனின் மயிருக்காக (டர்பன் அணியும் உரிமைக்காக) சீறியெழுந்த மன்மோகன் அரசு, தமிழனின் உயிர் காத்திடத் தவறியதே.

மிக அருமை தோழி. வாழ்த்துக்கள்.

உமா said...

வருகைக்கும் வழ்த்துக்கும் நன்றி தமிழரசி.

நன்றி உழவன்
நன்றி sakthi.