Sunday, August 23, 2009

அழகு,பணம், காதல், கடவுள்.

திரு ஞான சேகரன் அவர்கள் இத்தொடர் இடுக்கைக்கு என்னை அழைத்ததன் மூலம் என் சிந்தனைக்கு சற்றே தீனி போட்டிருக்கிறார். அழகு,பணம், காதல், கடவுள் பற்றி சிந்திக்க வைத்துவிட்டார். அவரது பதிவில் தண்ணீர், பசிக்கொடுமை பற்றியெல்லாம் நிறைய அறிந்து எழுதியிருப்பார். அதன் தாக்கத்தால் அவர் எழுதிய சில விடயங்கள் பற்றி பா'எழுத நினைத்ததுண்டு. இப்படி பல விதங்களில் தூண்டுதலாய் அமைந்ததால் அவருக்கு நன்றியுடன்.

பணம்:
அளவாய் இருந்தால் அமுதாய் இனிக்கும்
விளக்கின் ஒளியாய் வெளிச்சம் கொடுக்கும்
பணமும் சினம்போல் சிந்தை அழிக்கும்
கணமும் நெருப்பாய் கனன்று.

[தீயானது அளவோடு அகலில் இருந்தால் வெளிச்சம் கொடுக்கும்.அதுவே அளவுக்கு மீறினால் நெருப்பாய்க் கூரையை எரிக்கும், அதுபோல் பணமும் தேவைக்கு தகுந்தவாறு அளவோடு இருக்க, உதவியாய் இருக்கும், நம் உயிரைக்காக்கும் உணவு போல் நம்மைக்காக்கும். அதுவே மிகுந்தால் நம் சிந்தையை அழித்துவிடும். சிந்தை இழந்தவன் செத்தவன். எனவே நம்மை கொல்லும் பணம். சினமும் அதுபோல் அளவோடு இருக்க வேண்டும்.]

இல்லா திருந்தாலோ வாழ்ககையே இல்லையே
எல்லாம் அதுவேதான் என்றாலுந் தொல்லை
பணமோ பெருகிடும் வெள்ளம் அலையா
மனமோ தடுக்கும் அணை.

பணம் இல்லாதிருந்தால் வாழ்கையில்லை. பணம் என்னும் கருவி யில்லை என்றால் பல காரியங்கள் செய்ய இயலாது. அனால் பணம் செய்வதுதான் முதன்மை என்று கொண்டால், நாம் வாழ்வை மறந்துவிடுவோம். நம் வாழ்வை வளமாக்க பணம் சேர்க்கப் போய் வாழ்வையே இழத்தல் சரியோ?[ BPOவில் வேலை செய்யும் எவ்வளவோ பேர் தனது பெயர்,உடை,உணவு முறை, உறக்கம் என எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டு பணம் மட்டுமே சம்பாதிக்கிறார்கள். வாழ்வை அறிவதேயில்லை. ] ஆற்றில் வெள்ளம் அளவோருந்தால் பாசனத்திற்கும், மற்றத்தேவைகளுக்கும் பயன் படும். அதுவே பெருகினால் ஊரே அழியலாம். அதை தடுக்க அணை கட்டுகிறோம். அணை நீரை சேமிக்கவும் இல்லாத போது உபயோகிகவும், மிகுந்தால் சீராய் திறந்து பயன்படுத்தவும் உதவும். அதுபோல் போதும் என்ற மனமே நமக்கு பணத்தை சேமிக்கவும்,தேவைக்கதிகமானால் பிறருக்கு கொடுத்து மகிழவும் செய்யும்.

காதல்:
//காதலும் கடவுளைப் போல அதை உயிரினில் உணரணும் மெல்ல..//
எவ்வளவு அழகான வரிகள்.
உண்மைதான் காதல் உணரப்படவேண்டியது. மனிதராய் இருப்பவர் யாரும் எப்போதும் உணரக்கூடியது.
காதல் மென்மையானது. மெல்லச் சொல்லுங்கள் இறகைத்தொடுவதுப் போல் மெல்ல உச்சரியுங்கள். அழுந்தச் சொன்னால் உடைந்துப் போய்விடும்.
காதல் என்பது அன்பு என்ற அடித்தளத்தின் மேல் கட்டப்பட்ட இறகாலான, பூவிதழ் பரப்பப்பட்ட மணமிக்க வீடு. அதில் வாழ்வது என்பது மிதப்பது ஆகும்.
காதல்
அவளிருப்பு
அவனிதயத்திலும்
அவனிருப்பு
அவளிதயத்திலும்
பட்டாம்பூச்சிப்
பறக்கச் செய்யும்..
தாழ்ந்த விழி
தரைநோக்க
தனித்தியங்க்கும் நெஞ்சம்
வானவில் பார்க்கும்..

பூவிதழ்
புன்னகை வீச
புகம்பம் வெடிக்கும்
இதயத்தில்

இளமைக்காதல்
இனிமையாயிருக்கும்
உண்மையாயிருந்தால்

மெய்யாயிருந்தால்
மெய்தாண்டி
உயிர்த்தொடும்
கட்டில் தாண்டியும்
கரம் சேரும்..

காலம் கடந்து
காலன் வென்றாலும்
கவிதையாய்
உயிர்த்திருக்கும்.

கடவுள்:
கடவுளும் காதலைப் போல அதை உயிரினில் உணரணும் மெல்ல..

ஆமாம். என்னைப் பொருத்தவரையில் கடவுள் என்பதும் ஓர் உணர்வுதான். ஒவ்வொருவரும் தனித்தனியே அதை உணர வேண்டும். உருவம் கொடுத்து நாம் வழிபடுவதெல்லாம் நம் மனதை நம்ப வைக்கவே.மனம் போகும் வழியிலேயேச்சென்று அதைக்கட்டுப்படுத்த உருவ வழிபாடு உதவுகிறது. எதைச் செய்வதால் அன்பு, அமைதி,உண்மையான நிம்மதி கிடைக்கிறதோ அவையெல்லாம் வழிபாடு. எவையெல்லாம் அதற்குத்துணை ஆகிறதோ அவையெல்லாம் இறைவன். தாய்மை கொடுக்கும் உணர்வுதான் கடவுள். அன்பு என்னும் அருள் தான் கடவுள். உண்மை நேர்மை தூய்மையேக் கடவுள். உண்மையாய் நேர்மையாய் தூய்மையாயிருந்தால் நீயும் கடவுள்.
நாத்திகம் ஆத்திகத்தின் முடிவு.ஆத்திகம் நாத்திகத்தின் முடிவு. அன்பை போதித்ததால் வள்ளளாரும் கடவுள். பலருக்கு அன்பை நல் வழியைக்காட்டியதால் பெரியாரும் கடவுளே.

அழகு:
இந்த உண்மையெல்லாம் உணர்ந்தால் அதுதான் அழகு. உண்மைதான் அழகு. கண்ணில் தெரிவதெல்லாம் உண்மையா? இல்லை. கானல் நீர் கண்ணில் தெரியும் ஆனால் இல்லையல்லவா அதுபோல் தான் இவையும். அழகாக தெரிவதெல்லாம் அழகில்லை. உள்ளத்தில் அழகாக உணரப்படுவதே அழகு.

தொடர்ந்து எழுத நான் அழைப்பது இனிய நண்பர் திரு. சொல்லரசனை. ஏசு என்னச் சொல்கிறார் என்பதை அவர்மூலம் நாமறியலாமே.

அடுத்ததாக திரு. திகழ்மிளிர்.
இந்த நான்கிற்கும் நல்ல பா' எழுதுங்களேன்.

அன்புடன் உமா


6 comments:

தமிழ் said...

அருமையாக சொல்லியுள்ளீர்கள்

அழைப்பு எனக்காக‌

நேரம் கிடைக்கும்போது
கண்டிப்பாக எழுதுகின்றேன்.


(இதுமாதிரி எழுத வேண்டிய
இரண்டு இடுகைகள் இன்னும்
கணக்கில் உள்ளன.)

ஆ.ஞானசேகரன் said...

தனேக்கே உரிய மென்மையில் படைத்துள்ளீர்கள் பாராட்டுகள் உமா.
அதே போல் நன்றியும்..

Anonymous said...

அருமை

தேவன் மாயம் said...

அருமை !

அழைக்கப்பட்டோருக்கு வாழ்த்துக்கள்!!

அகரம் அமுதா said...

/////பணம்:
அளவாய் இருந்தால் அமுதாய் இனிக்கும்
விளக்கின் ஒளியாய் வெளிச்சம் கொடுக்கும்
பணமும் சினம்போல் சிந்தை அழிக்கும்
கணமும் நெருப்பாய் மிகுந்து.////

ஈற்றடியை...

கணமும் நெருப்பாய்க் கனன்று! -என்றெழுதலாம். பொருளும் மாறா. பொழிப்புமோனையும் பொருந்திச் சிறக்கும்.


/////இல்லா திருந்தாலோ வாழ்வே இல்லை
எல்லாம் அதுவேதான் என்றாலுந் தொல்லை
பணமோ பெருகிடும் வெள்ளம் அலையா
மனமோ தடுக்கும் அணை./////


மிகச்சிறப்பு. வாழ்க.


அழகு, பணம், காதல் மற்றும் கடவுளைப்பற்றி அழகிய கட்டுரை மற்றும் பாக்கள் சிறப்பாக அமைத்துக்கொடுத்துள்ளீர்கள் வாழ்க.

அவனடிமை said...

கவிதைகள், உரை பிரமாதம்