Sunday, May 09, 2010

கொட்டிலை அடையாப் பட்டி மாடுகள்

இத் தலைப்பில் திரு கபீரன்பன் அற்புதமான கட்டுரை எழுதியுள்ளார். அதன் கருத்தை சற்றே மரபு பாவில் அமைக்க நினைத்தேன். [கபீரின் கனிமொழிகள் என்ற கபீரன்பனின் பக்கத்தை அறிமுகப்படுத்திய திரு.அவனடிமையாருக்கு என் நன்றிகள்]
என் முயற்சி
விளம் மா விளம் மா
விளம் விளம் மா

சுமப்பது கரும்பு சுவைப்பதோ வைக்கோல்
சுற்றியே திரிந்திடு மாடாய்
அவனியில் யானும் மனிதனாய்ப் பிறந்த
அருமையை அறிந்திடா தென்றும்
கவலையில் மூழ்கிக் களிப்பிலே திளைத்துக்
கழிக்கிறேன் நாளுமுன் நாமம்
தவமென எண்ணித் தொழுதிட நன்றே
தரணியில் மானிட பிறப்பே!

7 comments:

அகரம் அமுதா said...

சுமப்பது கரும்பு சுவைப்பதோ வைக்கோல்
சுற்றியே திரிந்திடும் மாடாய்
அவனியில் யானும் மனிதனாய்ப் பிறந்த
அருமையை அறிந்திடா தென்றும்
கவலையில் மூழ்கிக் களிப்பிலே திளைத்துக்
கழித்தனை நாளுமுன் நாமம்
தவமென எண்ணித் தொழுதிட நன்றே
தரணியில் மானிட பிறப்பே!



அருமை. அருமை. தங்கள் பாவில் அறிவுச் செரிவும், ஆற்றலும் மிளிர்கின்றன. வாழ்க உமா அவர்களே

உமா said...

அமுதா அவர்களே மிக்க நன்றி. பிழை திருத்தியமைக்கும் சேர்த்து.

KABEER ANBAN said...

//அவனியில் யானும் மனிதனாய்ப் பிறந்த
அருமையை அறிந்திடா தென்றும்

கவலையில் மூழ்கி களிப்பிலே திளைத்து
கழித்தனை ...//

’கழித்தனை’ என்பது படர்க்கை பிரயோகம். அதாவது மூன்றாம் நபருக்கோ அல்லது மனதிற்கோ சொல்வதானால் சரியாக இருக்கும்.
‘யானும்’ என்று தன்மையில் குறிப்பிடப்பட்டுள்ளதால் “திளைத்துக் கழித்தேன்” என்றல்லவா வரவேண்டும்? அப்போது விளம் வாய்பாடு சிதையும்.

யானும் என்பதை நீயும் என்று மாற்றினால் பொருள் சரியாகிவிடும், ஆனால் பிறரில் குற்றம் காணும் உணர்வு வந்து கவிதை நயம் குன்றி விடும்.

கழித்தனை என்பதை ’கழிப்பதோ’ என்ற தன்னிரக்கப் பொருளில் சொன்னால் வாய்பாடும் சிதையாமல் பொருந்தி வரும் என்று தோன்றுகிறது.

தவறு இருந்தால் மன்னிக்கவும்.

உமா said...

திரு. கபீரன்பன் அவர்களுக்கு,
வணக்கம்.
தாங்கள் என் பாக்களைப்படித்து கவனமாக சில குறைகளைச் சுட்டிக் காட்டியமை மிக்க மகிழ்ச்சியே. பா எழுதுவதிலே நான் இன்னும் முழு பயிற்சி பெற்றுவிடவில்லை என்பதால் தங்களின் கருத்துக்கள் எனக்கு மிகுந்த நன்மையளிக்கும்.அருள்கூர்ந்து தொடர்ந்து படித்து பின்னூட்டமிடவும். குறைகளைச் சுட்டிக்காட்டவும். தங்கள் ஐயத்தை என் ஆசான் திரு.அகரம் அமுதா அவர்களிடம் கேட்டிருந்தேன். அவரது கருத்தை இங்கே இடுகிறேன். என் பாவிலும் திருத்திவிட்டேன். மீண்டும் தங்களின் கருத்துரைக்கு என் நன்றி. தொடர்க.

அன்புடன்
உமா.

உமா said...

திரு.அகரம் அமுதா அவர்களின் பதிலை இங்கே இடுகிறேன்.


//////////’கழித்தனை’ என்பது படர்க்கை பிரயோகம். அதாவது மூன்றாம்
நபருக்கோ அல்லது மனதிற்கோ சொல்வதானால் சரியாக இருக்கும்.
‘யானும்’ என்று தன்மையில் குறிப்பிடப்பட்டுள்ளதால் “திளைத்துக்
கழித்தேன்” என்றல்லவா வரவேண்டும்?///////////



இவ்விடத்தில் தாங்கள் சுட்டுவதுபோல திளைத்துக் கழிக்கிறேன் என தளை
தட்டாமல் இட்டுக் கொள்ளலாம். பொதுவாக முதலில் தன்மையை உணர்த்திவிட்டு
அதன் வழியாக படர்க்கையில் முடிக்கலாமா? என்றால் முடிக்கக் கூடாதென்பர்
தற்காலத்தவர். பொருள் சிதையும் அல்லது மாறுபடும். தங்களது 'யானும்
எனத்தொடங்கி கழித்தனை' என முன்னிலையில் முடித்திருப்பதும் அத்தகையதே.


எனக்குக் கூட இதுபோல இலக்கியங்களில் பல ஐயங்கள் உண்டு. அவற்றைப்
பலரிடவும் வினவி விட்டேன். திறம்பட உரைப்பாரில்லை.

உவக்காணெம் காதலர் செல்வார் இவக்காணென்
மேனி பசப்பூர் வது! -இது குறள்.

பாடலில் உள்ளபடியே பொருள் கொள்வோமானால், 'அங்குப் பார். எங்கள் காதலர்
செல்கின்றார், இங்குப் பார் என் மேனி பசலை நோய் பட்டு வாடுவதை' என்பதே.
பாடலையும் பொருளையும் நன்றாக கவனிக்க.

எம் காதலர் எனக்கூறும் பெண், அவன் காரணமாக என் மேனி பசலை நோய்ப்பட்டது
என்கிறாள். முதலில் படர்க்கையாக உரைத்தவள், பின்பேன் தன்மைக்குத்
தாவவேண்டும்? அவன் இவள் ஒருத்திக்கு மட்டும் காதலனா?? அல்லது அவள்
கூறுவது போல் பலருக்கும் காதலனா? பலருக்குக் காதலன் என்றால் ஏன் இவள்
ஒருத்திக்கு மட்டும் பசலை நோய் தொற்றவேண்டும்?

வள்ளுவன் கூற்றுப்படி பலருக்குக் காதலன் எனப்பொருள் கொள்ள முடியாது. ஏனெனில்,

பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு - என்கிறார்.

பலரும் பார்த்து விரும்பும் படியாக அமைந்த காதலன் தோளைத் தழுவ மாட்டேன் -
என ஆணுக்கும் கற்பினை உணர்த்தும் வள்ளுவன் ஏன்

உவக்காண் எம் -என முதலில் இட்டுவிட்டு பிறகு, இவக்காண் என் -எனத்
தன்மைப்படுத்துகிறார்?

ஆக, தோழி நாம் எழுதும் பாக்களில் முடிந்தவரைக் குழப்பங்களைத் தவிர்த்து எழுதுவோமே!

திளைத்துக் கழித்தேன் என இறந்த காலத்தைச் சுட்டினால் தானே தளை தட்டும்.
தாங்கள் இறைவனுடன் பேசும் அந்த நொடி வரை கணக்கில் கொண்டு, 'திளைத்துக்
கழிக்கிறேன்' என எழுதுவீராயின் தளை தட்டாதே!

உமா said...

திரு.அமுதா அவர்களுக்கு.
மிக்க நன்றி. த்ங்களின் பல்வேறு பணிகளுக்கிடையில் பதிலளித்தமை எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.
வள்ளுவன் சொற்படி ஒவ்வொறு சொல்லையும் சிறப்பானதாக அமைக்க எனக்கு தங்களின் வழிகாட்டல் உதவும். மீண்டும் மிக்க நன்றி.
அன்புடன்
உமா.

KABEER ANBAN said...

நன்றி உமா அவர்களே,

//..'திளைத்துக்
கழிக்கிறேன்' என எழுதுவீராயின் தளை தட்டாதே! //

மிகச் சரியாகவே பரிந்துரைத்திருக்கிறார் அகரம் அமுதா அவர்கள்.

நான் இலக்கணம் அறியாதவன்.

//கழித்தனை என்பது படர்க்கை பிரயோகம் //
என்று நான் சொல்லியிருப்பதிலேயே தெரிந்திருக்கும். அது முன்னிலை பிரயோகம். தவறாக படர்க்கை என்று சொல்லிவிட்டேன்.

என் சந்தேகம் பொருளைப் பற்றியது மட்டுமே. தாங்கள் முறையான பா எழுதும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதால் இது சற்று முக்கியமாகப் பட்டிருக்கலாம். ஆனால் கவிதையின் பொருள் நயம் மிகவும் நன்றாக உள்ளது.
பாராட்டுகள். தங்கள் எழுத்துப்பணி செம்பட இறைவன் துணையிருப்பானாக.