Tuesday, September 29, 2015

இளைஞர்களே- சிந்திப்பீர் செயல்படுவீர்

காசும் பணமும் கைநிறைய
   கண்ணில் தூக்கம் இழந்தீரே...
பேசும் பழக்கம் குறைந்தே'கை'
  பேசி தன்னில் குறுஞ்செய்தி
பாசம் சொல்லப் பகிர்ந்தீரே
   பெற்றோர் மனத்தை மறந்தீரே
வாசப் பூவின் நுகர்வின்றி
   வண்ணப் படத்தில் மகிழ்ந்திடவோ...

உண்ணும் உணவில் முறைத்தவறி
  உறக்கம் கெட்டு உழைக்கின்றீர்
எண்ணிப் பார்ப்பீர் எதிர்காலம்
   இருண்டே இருக்குத் தெளிவில்லை
கொண்டக் கொள்கை உயர்ந்திடுதல்
  குற்றம் இல்லை உம்மனத்தில்
அன்னி யமோகம் அகன்றிட்டால்
  அடையும் இன்பம் அழகாகும்

மண்ணை முட்டி வெளிவந்தே
  விண்ணைத் தொட்டே வளர்ந்திடுமே
சின்ன விதையின் சிறப்பதனைச்
  சிந்தை தன்னில் கொண்டீரே
தன்ன லமின்றி அத்திறத்தால்
   தாய்நா டுயர முயன்றிட்டால்
திண்ணம் அறிவீர் அந்நாளில்
   நம்நா டுயரும் வல்லரசாய்


மா மா காய்
மா மா காய்

என்ற வாய்ப்பாட்டில் அமைந்த அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்.

6 comments:

ஊமைக்கனவுகள் said...

“எய்த சொற்கள் எழிற்றமிழை
ஏத்திப் பொருளாற் மனக்கனியைக்
கொய்த சொற்கள் விருத்தத்தில்
கொடுத்த நற்பா வென்றிடட்டும்!
பெய்த மழையில் நல்வித்துப்
பெருகித் துடித்து வளர்வதுபோல்
செய்த கவிதைச் சீராலே
செந்தமி ழத்தாய் வளர்ந்திடுக..”

அறுசீர்விருத்தம் அருமை
வென்றிட வாழ்த்துகள்.

நன்றி

உமா said...

மிக்க் நன்றி 'ஊமைக்கனவுகள்' தங்கள் பா அருமை

வலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை said...

படைப்புகள் வந்து சேர இறுதி நாள் இன்றோடு முடிவடைகிறது... விரைந்து செயல்படுவீர்... போட்டியை ஊக்கப்படுத்தும் ஒரு பட்டியல்... காண்க... கருத்துரையிடுக... பகிர்க...

இணைப்பு: →http://bloggersmeet2015.blogspot.com/2015/09/blog-post_30.html

நன்றி...

புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
http://dindiguldhanabalan.blogspot.com

Geetha said...

அருமை மா வெற்றி பெற வாழ்த்துகள்

அருள்மொழிவர்மன் said...

அருமையான வரிகள்....

சிவகுமாரன் said...

தமிழாய்ந்த கவிஞரின் சொற்களில் சொக்கிப் போகிறேன். அருமை.