Friday, April 02, 2021

காத்திருப்பு

தாகூரின் இந்தப் பாடல் ஆழ்வார்களின்/நாயமார்களின் பாடலைப் போல் இறைவனை நாயகன் பாவனையில் பாடுவதாய் அமைந்திருக்கும். இறைவனை அடைவதையே தன் விருப்பமாக ஆண்டாள் திருப்பாவையில் பாடவில்லையா! அது போலவே இறைவனை அடையும் நாளுக்காக காத்திருப்பதையே இப்பாடலில் காட்டுகிறார். அவன் அருளால் தான் அவன் தாள் பற்ற முடியும் என்பதைத்தானே ஆழ்வார்களும்/ நாயன்மார்களும்  காட்டினார்கள். அவன் அருளுக்காகத் தான் காத்திருக்கிறார்.

தாகூரின் இப்பாடலைத் தழுவி ஆசை மட்டுமே காரணமாய் முயன்று எனது கவிதையை ஆக்கியிருக்கிறேன். 

Waiting

The song I came to sing
remains unsung to this day.
I have spent my days in stringing
and in unstringing my instrument.

The time has not come true,
the words have not been rightly set;
only there is the agony
of wishing in my heart…..

I have not seen his face,
nor have I listened to his voice;
only I have heard his gentle footsteps
from the road before my house…..

But the lamp has not been lit
and I cannot ask him into my house;
I live in the hope of meeting with him;
but this meeting is not yet.

காத்திருப்பு

எனது வாழ்வின் பாடல்
இன்னும்
இசைக்கப் படாமலே
இருக்கிறது

எனது
வீணையின் நரம்புகளை
நான் சரிசெய்து கொண்டே
இருக்கிறேன்

எழுகின்ற ஆசையால்
எரிகின்ற நெஞ்சத்தில்
எழுதாத என்கவிக்கு
இசையமைத்துப் பார்க்கின்றேன்…

தேடலின்
சுமைமட்டுமே
துணையாகக்
காத்திருக்கின்றேன்…

நான் அவன்
முகம் கண்டதில்லை
குரல் கேட்டதில்லை
என்றாலும்

என்னருகில் அவன்
காலடி ஓசையைக்
கேட்டுக்கொண்டே
இருக்கின்றேன்…

அழைத்தால்
வருவானோ!!
அகம் நெகிழ
நினைத்தால் வருவான்…

இதய வாசல் திறந்தால்
இருள் விலகினால்
வெளிச்சமாய்
அவன் வருவான்…

அவன் வரும் நாளில்
எனது வாழ்வின் பாடல்
இனிமையாய்
இசைக்கப்படும்…

Sunday, March 21, 2021

நதிக்கரை நாகரிகம்


நாணலே மெத்தையாய்

நாணமே போர்வையாய்

நல்லதொரு தூக்கம்

விடியலை வரவேற்கும்  விழிப்பு

உள்ளத்தில் அமைதி

உண்மையால் உறுதி

ஆற்றை குடித்து

காற்றில் மிதந்து

காய் கனி

கடித்து உண்டு

வேட்டை யாடியும்

விளை யாடியும்

சில மணிகள்

இயற்கையைப் படித்து

இதயத்தால் வாழ்க்கை

கள்ளமில்லா காதல்

கடுப்பில்லா மனம்

களைப்பில்லா குணம்

காட்டாற்று வெள்ளம்

கரைப்புரள

காலம் கரைக்கட்டியது

ஏட்டைக் கிழித்தது

எழுத்தாணி

இன்றைய நாகரீகம்

எழுந்தது…

Monday, March 15, 2021

கம்பன் கவித்தேன்

'கம்பன் கவித்தேன்' என்ற என் இன்னுமொரு வலைத்தளம் கம்பனை அறியும் ஆவலில் துவங்கப்பட்டது.
தொடர்ந்து கம்பன் கவியின் அழகை இங்கு இரசிக்கலாம்

Thursday, May 28, 2020

கொரோனா - கல்விக் கொள்கை

கொல்லும் கொடிய வைரஸாம்,
கொரோனா' என்றே பெயரதற்காம்...
வீட்டில் இருக்கச் சொன்னாங்க, 
விரட்டி அடிப்போம் என்றாங்க...

அதனால்...

பள்ளிக் கூடம் போகல,
பாடத் திட்டம் எதுவுமில்லை...
வீட்டுப் பாடம் கொடுக்கல,
விடிய விடிய படிக்கல...

ஆனால் 

வேடிக்கை யாக தினந்தினமும்
வாழ்க்கைப் பாடம் கற்றோமே!!
ஒழுக்கம் உயர்வு என்பதனை
உணர்ந்தோம் பழகி பார்த்ததனால்...

அடிக்கடி கையை கழுவிக்கொள்!
ஆசாரக் கோவை மனதிற்கொள்!
அடுப்படி உணவே மருந்தென்றே
ஆச்சி சொன்ன பாடந்தான்...

அழகாய் நாங்கள் கற்றோமே!
ஆனால் சிறிய சந்தேகம்...
பள்ளிக் கூடம் திறந்ததுமே
பாழாய் போகும் இப்பாடம்...

மீண்டும் பழைய திட்டம்தான் 
மதிப்பெண் ஒன்றே குறிக்கோளாய்
மனனம் செய்யும் வழிமுறைதான்...
மாற்றம் உணடோ சொல்வீரே!!!

அதனால் 

ஐயா! எங்கள் பெரியோரே!!!
அருமை யான தருணமிது!!!
அறிந்தே கல்வி கொள்கையினை
மாற்றி அமைக்க முயல்வீரே!!!

Thursday, May 21, 2020

என் மனமென்னும் மேடையில்

நடக்காத நாடகம்
முடியாமல் தொடர்கிறது...
பேசாத வார்த்தைகள் 
மௌனத்தில் கரைகிறது...

இல்லாத ஓர் உணர்வை 
உள்நெஞ்சம் உணர்கிறது...
சொல்லாத செய்திகளைச்
சுகமென்றே சுமக்கிறது...

பொல்லாத நிஜங்களையோ
பொய்யென்றே சொல்கிறது...
பொழுதெல்லாம் புதிதான
கற்பனையில் திளைக்கிறது...

புரியாத மொழியெல்லாம்
பூவிழிகள் பேசிடவே...
வாய்பேசும் மொழியெல்லாம் 
வசப்படாமல் போகிறது...

நில்லாத நாடகத்தில் 
நிஜமெல்லாம் கனவாக...
கலைந்திடாத கனவெல்லாம்
கற்பனையில்  நிஜமாகும்...

Sunday, May 10, 2020

குறள் தாழிசை

உடலோடு உள்ளம் உறுதிப் பட்டால்
அடைந்திடும் நன்மை பல...

சொல்லும் செயலும் இணைந்தே  இருந்தால் 
இல்லை உனக்கே இழிவு...

உள்ளத்தால் ஒன்றி உழைப்பவர்கே அன்றி
உலகத்தில் இல்லை உயர்வு...

மனத்திற்கு நல்ல மருந்தாம் சிரிப்பு
உடலுக்கும் அஃதே உரம்...

உள்ளத்தால் உண்மை உரைப்பார்தம் உள்ளத்திற்கு
உண்டோ உடைக்கும் உளி... 

Saturday, May 09, 2020

குறும் பா

எடுத்துக் கொண்டதை
திருப்பித் தந்தது 
மழை...

வெளிச்ச உண்டியல் 
உடைந்து 
இருட்டு தரையில் 
சிதறிய
சில்லரை காசுகள் 
நட்சத்திரங்கள்...

சூரிய மாலையில் இருந்து
உதிர்ந்த
மல்லிகை பூக்கள் 
நட்சத்திரங்கள்...

சினுங்கி சினுங்கி
தூக்கம் கலைத்தது 
அலை பேசி...

திறக்கத் திறக்க
தெளிவு பிறந்தது 
புத்தகம்...

குழைத்து, குதப்பி
கொட்டிவிடும்
குழந்தைக்காக
காத்திருக்கிறது 
தட்டில் உணவு...

வானத் தரையில் 
கொட்டிவிட்ட 
கறுப்புச் சாயம்
இருள்...

அழுகை 

கண்ணம் துடைத்து 
நிமிர்ந்த போது
சுவடுகள் இன்றி 
பளிச்சென்றிருந்தது 
மனம்...

எப்பொழுதும் 
தலைகுனிய 
வேண்டியிருக்கிறது 
இவரிடம்
சவரத்தொழிலாளி

மழையைத் தடுக்கும் 
குட்டி வானம்
குடை...


Wednesday, May 06, 2020

மல்லிகை பூச்சரம்

கொட்டும் அருவி
குழவியர் வாயமுதம்
வீமும் மழைத்துளி 
விண்பரவும் நிலவொளி
நரைத்த முடி
நண்பகல் சூரிய ஒளி
முத்துப் பற்கள் 
முகம் காட்டும்
உன் சின்னச் சிரிப்பு
உருகி வழியும்
வெள்ளி இழை...

இத்தனை அழகாய்
உன் ஒற்றை 
பின்னலில் 
நான் வைத்த
மல்லிகைப் பூச்சரம்...

Sunday, May 03, 2020

அனுபவம்

வியர்வைத் துளிகளில் வழிந்திடும் அனுபவம்...
வெள்ளை இழையென ஒளிர்ந்திடும் அனுபவம்...
கற்றலில் பெறுவதும் கலைகளின் அனுபவம்...
உற்றவர் அற்றவர் உணர்த்திடும் அனுபவம்...
 
புத்தக அறிவினால் புதுப்புது அனுபவம்...
சத்தமே இன்றியுன் தனிமையும் அனுபவம்...
நித்தமுன் செயல்களில் நீபெறும் அனுபவம்...
புத்தியில் விதையென வளர்ந்திடும் அனுபவம்...

Monday, April 27, 2020

தடம்

புல்மேல் பனியின் தடங்கள் பதிவதில்லை
கல்லோ எதையும் பதிப்பதில்லை- காண்பீரோ
சில்லென்ற காற்றில் மணத்தின், செந்தமிழ்ச் 
சொல்லில் சுவையின் தடம்...

Thursday, April 09, 2020

கண்ணனாக வா!!

எப்பொழுதெல்லாம் 
தர்மம் அழிந்து அதர்மம் 
தலைதூக்குகிறதோ...
அப்பொழுதெல்லாம் 
'நான் 'அவதரிப்பேன்...

ஏற்றுக் கொண்டோம் 
இறைவா... நீ
கண்ணனாக வா 
'கொரோனா' வாக வேண்டாம்...

அழிக்கப்படுவது 
அதர்மமாக இருக்கட்டும்...
அகங்காரம், ஆணவம், பேராசை
அழியட்டும்...

காக்கப்படுவது 
கருணையாக ,
காதலாக 
இருக்கட்டும்...

மயக்கத்தைப் போக்கி 
மையலை மாற்று...
மரணத்தைக் காட்டி
வையத்தை அழிக்காதே...

மனிதம் காக்க
மனிதரை விட்டுவை...
மதத்தினைத் தாண்டி
மனிதரை வாழ செய்...

இறைவா 
கெடுப்பதல்ல
கொடுப்பதே உன்செயல்
அழிப்பதல்ல
காப்பதே உன்கடன்...

கண்ணனாக வா!!
‘கொரோனா’வாக வேண்டாம் !!

Tuesday, April 07, 2020

யோசனை பூக்கள்

மனிதனின் 
சிந்தனை தோட்டத்தில் 
மலர்வது
யோசனை பூக்கள்...

வாசனைப் பூக்களில்...
வண்ணங்கள் 
மயக்கும்...
யோசனை பூக்களின்
எண்ணங்கள் 
மயக்கும்... 

எண்ணங்கள் 
விதையாக 
எழுத்துக்கள் 
மலரும் போது...
படைப்புச் சோலையில்
கவிதைகள் 
பூத்துக் குலுங்கும்...

சங்கீதச் சோலையில்
ஸவரங்கள்
சேரும் போது
கற்பனை நீராலே
கீதங்கள்
மலரும்
மெட்டாக...

சிந்தனை சோலையில்
செயல்கள் உரமாக
பூத்துக் குலுங்கட்டும்
பயன்கள்
பொதுவாக...
அனைவருக்கும்  பொதுவாக...


 

Saturday, April 04, 2020

மின்னற் பொழுதுகள்

வாழ்க்கை பயணத்தில் சில
மின்னற் பொழுதுகள்...

நம்மை நமக்கே 
அடையாளம் காட்டும் 
அர்த்தம் நிறைந்த நிமிடங்கள்...

அவனுக்கு!

அரும்பு மீசை
தோன்றிய பொழுது
முதன் முதலாய் ஒரு
ஆண் மகனாய் 
தன்னை உணர்ந்த 
அழகிய தருணம்...
மறக்க முடியா
மின்னற் பொழுது!!

அவளுக்கு

தினமும் சென்ற பாதைதான்
திரும்பி அவன் பார்த்த பொழுது
பெண்மையை உணர்ந்து
வெட்கம் கொண்ட
வெளிச்ச நிமிடம் 
அழகிய மின்னற் பொழுது!!

வெளியுலகில்
முதல்முதலாய்
அவமானப் பட்ட
அந்த நொடி...
தன்மானத்தை 
தட்டி எழுப்பியத் தருணம்...
நம்மைச் செதுக்கிய
நல்லதொரு நிமிடம்...

யாருக்கில்லை அந்த 
அற்புத மின்னற் பொழுது!!

முதல் வெற்றி
வாசல் தட்டிய 
வசந்த நிமிடம்...

காதல் சொன்ன
கணப் பொழுது...

வலியின் உச்சத்திலும்
பிள்ளை ஈன்ற
பாசப் பொழுது

கையேந்திய பிள்ளை
கண்ணோடு கண் நோக்கி
புன்னகைத்த
பொன்னான பொழுது...

தாயின் சிதையில் 
தீயை மூட்டிய
நெஞ்சைப் பிசையும் 
நிமிடங்கள்...

யாருக்கும் உண்டு
இப்படி சில நிமிடங்கள்...
வாழ்வில்
மறக்க முடியா
மின்னற் பொழுதுகள்...

Friday, April 03, 2020

ஒற்றை எதிரி

தெருவோரம்
குப்பை இல்லை
சந்தையிலே 
சண்டை இல்லை ...

சுத்தம் என்பதை
சமூகம் உணர்ந்தது
சத்தம் இன்றி
சாலைகள் இருந்தன...

வண்டியில் சென்ற
மக்களைப் போலீஸ்
வணங்கிச் சொன்னது
வீட்டில் இருக்க...

வீட்டில் இருந்தவர்
உணவை வீணாக்காமல்
சமைத்து உண்டனர்
தருமம் செய்தனர்...

அரசு
'அதிகார' திமிரின்றி
அமைதி காத்தது...
தேக்கம் இன்றி 
செயல்கள் நடந்தது...

சிந்தனை ஒன்றாய்
தேசம் மலர்ந்தது

நச்சுக் கிருமியே!!
ஒற்றை எதிரி நீ

உன்னை வீழ்த்த
ஒற்றுமை கண்டது
இந்தியா
ஒன்றாய் நின்றது...

சற்றே

திரும்பிப் பார்க்கிறேன்
'சுதந்திர இந்தியா'...

ஒற்றை எதிரி
வீழ்த்தப் பட்டதும்
வீழ்ந்து விட்டதே
ஒற்றுமை, அமைதி...

எத்தனை பிரிவுகள்..
எத்தனை சண்டைகள்...

இன்றைய
'ஒற்றை எதிரி' நீ
உன்னை 
விட்டு விடுவதா?
விரட்டி அடிப்பதா?!!!





Tuesday, March 31, 2020

கடல்

அலை கடலின் ஓசை
ஆழ் கடலில் இல்லை...

ஆழ் கடலின் அமைதி
அலை கடலில் இல்லை...

அலைகடல் ஓயாது
ஆழ்கடல் பேசாது...

சிந்தனையில் 
ஆழ்கடல் அமைதி 
அறிவின் துவக்கம்... 

செயலில்
அலைகடல் ஆரவாரம்
இயக்கத்தின் அடையாளம்... 

கடலின் ஆழம் 
அலையில் தெரியாது...
அலைகள் இன்றி
ஆழ்கடல் கிடையாது....

சிந்தனை 
செயலுக்கு அடிப்படை
செயல்கள் இன்றி
சிந்தனை சிறக்காது.... 

நிழல்கள் நகர்ந்த பொழுது...

நிழல்கள் 
நகர்ந்த பொழுதுதான்
'நான் '
நிலைத்து நின்றேன்...

தாயின் நிழல் 
நகர்ந்த பொழுது, 
தானாக எழுந்து 
நடக்கலானேன்...

தந்தையின் நிழல் 
நகர்ந்த பொழுது, 
எனக்கென
தடம் ஒன்று 
இருக்கக் கண்டேன்...

நல்லாசிரியர் நிழல் 
எனைவிட்டு 
நகர்ந்த பொழுது, 
என் அறிவின் ஒளியில் 
இயக்கம் கொண்டேன்...

இணையில்லா
ஈசனருள்
இருக்கும் வரையில் 
வாழ்வில் 
இருள் என்பதே
இல்லை கண்டேன்!!. 

Sunday, March 29, 2020

சிந்தனைகள் சந்தித்தால்

சிதறிய எண்ணங்களை
சீராக்கி சேர்க்கிறது...
செயற்கரிய செய்கைக்கு 
'சிந்தனை' உரமாகிறது...

நல்லவர்கள் சிந்தித்தால் 
சிந்தனைகள் சந்தித்தால்...
நானிலத்தே நன்மைகள் 
நமக்கெல்லாம் விளைகிறது...

மாறாக சிந்திப்போர் 
மனத்தாலும் சந்தித்தால்....
தீராத துன்பங்கள் 
தீயாக சுடுகிறது....

சொல்லோடு சிந்தனை 
மொழிவழி சந்தித்தால்...
பொருளோடு பொருந்தியது 
நற்கவிதை ஆகிறது...

சிறப்பான சிந்தனை 
செயலோடு சந்தித்தால்...
மறுக்காமல் வெற்றிகள்
முன்வந்து நிற்கிறது...

மறக்காதே! சிந்தனையே
மனிதருக்கு வரமாகும்...
தவறாதே உள்ளத்தில் 
சிந்தனையைச் தெளிவாக்கு....

கொரானா

எண்ணங்கள் ஒன்றானால்
எளிதாகும் நம்முயற்சி
கொன்றழிக்கும் கொரானாவை
கெடுத்தழிப்போம், நம்மிடையே
இன்றைக்குத் தேவையெல்லாம்
இடைவெளிதான், சிந்திப்பீர்!
நன்றாகக் 'கை'கழுவி 
நலம்காப்பீர் நல்லோரே!!



Sunday, December 29, 2019

2019 --》2020

2019
இலவு காத்த  கிளியாக 
ஏமாற்றப்பட்ட சில எதிர்பார்ப்புகள்....
இழந்த சில நட்புகள்...
என்று
எப்போதும் போல் 
சில தருணங்கள்... 2019 ல்
என்றாலும்

வேண்டத் தக்க தறிவோய்நீ
வேண்ட முழுதுந் தருவோய்நீ
வேண்டும் அயன்மாற் கரியோய் நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயா தருள்செய்தாய்
யானும் அதுவே வேண்டின்அல்லால்
வேண்டும் பரிசொன் றுண்டென்னில்
அதுவும் உன்றன் விருப்பன்றே

என்பது போல் 
நான் கேட்டது எனக்கு கிடைக்கவில்லை என்றாலும்,
இறைவன் கொடுத்தது மிகச் சிறப்பானதாகவே அமைந்தது...
23 வருடங்களுக்குப் பிறகு என் தந்தையை சந்தித்த அந்த நொடி 
இதயம் நின்று மீண்டும் துடித்தது...
அவருக்கான எனது கடமையைச் செய்ய இறைவன் அருளிய வாய்ப்பு...
இன்னும் சற்றும் எதிர்பார்க்காத நேரம், சாகித்ய அகாதமியில் பேசும் வாய்ப்பு...
மனதிற்கு பிடித்ததாக சில படைப்புகள் எழுதிய தருணங்கள்...
நிறைய பயணம், கோவில், இறைவன் தரிசனம்,
நெஞ்சம் நிறைய மகிழ்வோடு பகிர்ந்த சில இனிமைகள்...
என்றும் மறக்க இயலாத நல்லவர் நட்பு...
இது போதும்  எனக்கு இது போதுமே...

2020

இன்னும் இழந்த 
23 வருடங்களையும்
எண்ணத்தில் வாழ்ந்து பார்க்கும்
ஆவலோடு 2020 ஐ எதிர்பார்த்து...
எனது பயணம் தொடர்கிறது...

இறைவனுக்கு நன்றியோடு...

Saturday, December 14, 2019

நானும் நீயும்

நான் மழை,
நீ மேகம்!
என்னைத் தந்தவன் நீ... 

நான் நிலம், 
நீ மண்!   
என்னுள் நிறைந்தவன் நீ...

நான் சுடர்
நீ திரி!
என் ஆதாரம் நீ...

நான் நட்சத்திரம், 
நீ இருள்!
என்னை அடையாளம் காட்டுபவன் நீ...

நான் சுவாசம், 
நீ காற்று!
உன்னால் தான் என் உயிர்ப்பு...

நான் தமிழ், 
நீ இனிமை!
என் இயல்பான இணை நீ...