Monday, March 19, 2007

நீர் நிலம் தீ நீ...

இல்லாதான் இருப்பவன்
கொடுப்பவன் கெடுப்பவன்
ஞானி மூடன்
அனைவரையும்
ஒன்றாகவே தாங்கும் நிலம்...

பசித்தவனின்
பிச்சை முட்டையையும்
பணக்காரனின்
கோழியையும்
ஒன்றாகவே சமைக்கும் தீ...

பிறந்த சிசுவையும்
பெற்றவன் சவத்தையும்
ஒன்றாகவே கழுவும் நீர்...

பெருந் தவத்தோனாயினும்
கொடுஞ் சினத்தோனாயினும்
குழந்தையாயினும்
கிழவனாயினும்
ஒரே சீராக
உள்சென்று வெளிவந்து
ஓர் நாளில்நின்றுவிடும் மூச்சு...

புல்லாகினும்
புழுவாகினும்
பெரியதொரு விலங்காகினும்
மரமாகினும்
மனிதனாகினும்
அவணியில் ஓர் அணுவாகினும்
அணைத்திலும் அவனையே காண்பது
சார்பகற்றி நேர்நின்ற
சான்றோன் மனது...

No comments: