Monday, March 19, 2007

பெண்கள் கும்மி


கும்மியடி பெண்ணே கும்மியடி வளை
குலுங்கிட கைக் கொட்டி கும்மியடி
பாரதி கண்ட பெண்ணுலகை நேரில்
பார்த்திட வேணுமென கும்மியடி...

பெண்ணுக்கு பெண்ணே பகை யெனவே
பேசி பேசியே பகை வளர்த்தார்
அத்தனைச் சொல்லையும் தூக்கிலிட்டே நாம்
அனைவரும் ஒன்றாய் கூடிடுவோம்

கற்பனை காவியம் இலக்கியம் நாடகம்
இக்கால கணிணி என்றெதிலும்
எங்களின் கால்தடம் பதித்துவிட்டோம் தூர
தேசத்திலும் கூட பெயரெடுத்தோம்

குடும்ப நலனிலும் குறையுமில்லை கொண்ட
கணவன் மனமும் கசந்ததில்லை
பிள்ளை படிப்பிலும் தேக்கமில்லை கூட
இருப்பவர் யாரும் பகையுமில்லை

உணவு உடைத் தோற்றம் என்றெதிலும்
மாற்றங்கள் ஆயிரம் கண்டதுண்டு தாய்
உள்ளத்தில் மாற்றங்கள் கண்டதில்லை
தமிழ் பண்பையும் நாங்கள் மறந்ததில்லை

நேர்மையுண்டு நெஞ்சில் ஈரமுண்டு
திறமை யுண்டு திட எண்ணமுண்டு
வாய்மை கொண்டு செய்யும் தொழிலெதிலும்
சக்தி துணையுமுண்டு வெற்றி காண்பதுண்டு

கட்டிய இறக்கைகள் கட்ட விழ்ந்தே
விட்டன வானில் பறந்து விட்டோம்
எட்டிப் பிடிப்பவர் யாருமில்லை எங்கள்
பாதையில் தடைகள் ஏதுமில்லை
...............வேறு...............................................................
எத்தனை நன்மைகள் பெற்றாலும் பெண்கள்
ஒடுக்கப் படுவது இன்று முண்டு
எண்ணெய் அடுப்புகள் எரிவதுண்டு இங்கே
பெண்கரு கருவிலே கலைவ துண்டு

என்றைக்கு இந்நிலை மாறிடுமோ சமுதாய
ஏற்றத் தாழ்வுகள் மறைந்திடுமோ
இன்றைக்கே பெண்நிலை உயர்ந்திடவே
ஏற்றுக் கொள்வோம் சபத மொன்று...

No comments: