Monday, March 19, 2007

பிறந்த நாள் பரிசு.

பாலுண்ணும் பிள்ளைக்கு பரிசாக்க வேண்டும்
தோதாக ஏதிருக்கு பரிசாக நான் தர

பச்சை புல்வெளியில்லை
பரந்து நிற்கும் வயலில்லை
சுற்றி தோட்டமிட்டு வற்றாத நதியருகே
எட்டாத உயரத்தில் கட்டாக பரணமைத்து
கட்டாத என் மனக்கோட்டை
காலூன்ற வழியில்லை

பச்சைத் தண்ணீரும்
பகிர்ந்துண்ண வேண்டும் நீ

ஆலும் வேலும் இங்கில்லை
அன்னைப்பாலும் சத்தில்லை

முயன்றே விடவேண்டும் மூச்சிங்கே

நேராக எதுவுமில்லை
தோதாக பரிசுனக்கு
நான் தர பூமியிலே

ஆனாலும் சொல்லிடுவேன் கேளாய் என்மகனே
நீயாக நினைத்தால் மாற்றிடலாம் இஃதையெல்லாம்
கருத்தாக ஓர்மரம் மண்தொட்ட இந்நாளில்
விளையாட்டாய் வைத்திட்டால்
விதையாகும் உன் உழைப்பு
வேங்கையாகும் வெற்றி


சோர்வாக வேண்டாம் சொல்லிடுவேன் மகனே கேள்
ஓசோனின் ஓட்டையையும் ஒட்டிவிடும் அறிவுண்டு
இங்கே
உன்கையில் உலகத்தை கொண்டுவரும் கண்ணி உண்டு
வெண்ணிலாவில் கால்வைத்து
வெட்டவெளி நடை நடந்து
பெண்டீரும் வெல்வதனால்
உண்டாகும் நன்மை பல உன்நாளில்
செவ்வாயில் குடியேறும்
திறம் கொண்டு அந்நாளில்
தேர்ந்ததொரு தொழிற்நுட்ப பயிற்சியாலே
வரலாறு திரும்பிடவே
மும்மாரி பொழிவதனால்
மூன்று போகம் விளைவித்து
முக்கனியின் சாறும் தேனும் பாலும் கற்கண்டும்

கலந்து வரும் காவிரியின்
பொங்கிவரும் புனலருகே
பூத்த ஒருசோலையிலே
அத்தரும் சந்தனமும் ஜவ்வாதும் மணந்திருக்க
ஆங்காங்கே முத்தும் பவளமும் மாணிக்கமும் மலர்ந்திருக்க
அறிவிற் சிறந்த பெண்டீரும்
அவர்க்கேற்ற ஆடவரும்
ஆனந்தமாய் களித்திருக்க
அத்தணையும் டிஜிட்டலில் அழகாக பதிவாக
கம்ப்யூட்டரில் விளையாடி கைக்கடுத்த குழந்தைகள்
காவிரியில் புனலாட கம்ப்யூட்டரில் பதிவாகி
கனடாவில் நண்பர்களும்
கண்டுக்களித்ததனை ஏக்கத்தோடு
'நயாகரா' வும் தோற்றுவிடும்
நலத்தோடு நந்தவனந்தன்னில்
"நடந்தாய் வாழி காவேரி" என
நயமாக மெயில் அனுப்ப

நடக்கும் அத்தனையும் நடந்தே தீரும்
நம்பிக்கை நம்பிக்கை நம்பிக்கை
இஃதே நானுனக்குத் தரும் பரிசாகும்

வளமான வாழ்வுனக்கு வந்துசேரும் நாள்வரையில்
உரைத்திடுவேன் ஓர் சபதம்
மக்காத பிளாஸ்டிக், ரப்பர், கண்ணாடி
மண்ணில் புதையுறவேமாட்டாதொழிப்பேன்
கண்ட இடத்தில் எச்சிலும் குப்பையும் கொட்டி
காற்றையும் வீணாக்க மாட்டேன் உறுதி

தயங்காது செய்வீர் இதனை
பிள்ளையைப் பெற்றோர்
பொறுப்பு நமக்கதிகம் புரிந்தே கொள்வீர்

No comments: