Wednesday, August 12, 2009

கண்ணா அருள்வாயா!

கண்ணன் குழலில் ஓர்துளையாய்
..........நானும் ஆக மாட்டேனோ!
மன்னன் அவனிதழ் பட்டூதும்
..........பாஞ்ச சன்னியம் ஆகேனோ!
காலம் சுற்றும் சக்கரமாய்
..........கையில் கிடக்க அருள்வானோ!
ஞாலம் போற்றும் அவனுரையில்
..........நானும் ஒருசொல் ஆகேனோ!

கத்தும் கடலும் காரிருளும்
..........கண்ணன் அழகை காட்டிடுமே
முத்தும், மணியும் அவன்மேனி
..........பட்டு ஒளிரும் நானதுபோல்
நித்தம் கலந்து மெய்ஞானம்
..........பெற்றே சிறக்க வழியுண்டோ!
சித்தம் தெளிய அவனுரைத்தான்
.........."காண்பாய் உன்னுள் எந்தனையே".

18 comments:

சொல்லரசன் said...

கிருஷ்ண ஜெயந்தி கவிதை அருமை,

ஆ.ஞானசேகரன் said...

அருமை உமா

உமா said...

மிக்க நன்றி திரு.சொல்லரசன்.

உமா said...

மிக்க நன்றி திரு.ஞானசேகரன்.

Raghav said...

//மன்னன் அவனிதழ் பட்டூதும்
......பாஞ்ச சன்னியம் ஆகேனோ!//

ம்.. ஆண்டாள் சங்கிடம் அவனின் இதழ் சுவையைத் தான் கேட்டாள்.. நீங்கள் அந்தப் பாஞ்சசன்னியமாகவே ஆக வேண்டுமென்உ கேட்கிறீர்கள்.. கட்டாயம் கண்ணன் அருள்வான்.

நல்லதொரு கவிதை.

Raghav said...

//சித்தம் தெளிய அவனுரைத்தான்
.........."காண்பாய் உன்னுள் எந்தனையே".//

சித்தம் தெளிந்தாலும் அவன்மீதுள்ள பித்தம் தெளியாமல் இருக்கவும் அருளட்டும். :)

அகரம் அமுதா said...

மிக அழகிய அறுசீர் விருத்தம். வாழ்த்துக்கள்.

அவனடிமை said...

உமா அவர்களே: மிக நன்றாக வந்துள்ளது அறுசீர் விருத்தம்.

மோனையும் கூடினால் இன்னும் ஓசை நயம் கூடும் (நீங்களே கொடுத்துள்ள காட்டுகள்: காலம்/கையில், கத்தும்/கண்ணன்);

கவிஞர்களுக்கு ஒரு கேள்வி: விருத்தத்தில் தளை விதிகள் உண்டா ? உ.: /கடலும் காரிருளும்/ தளை தட்டினாலும், பாடுவதற்கு சரியாகத்தானே இருக்கிறது.. ?

வாழ்த்துக்கள் உமா.

கிருஷ்ண ஜெயந்தியை சிறப்பாகக் கொண்டாட, அவன் பாடத்தை நினவு கூர்வோம்:

கண்ணன் குழலோசை கேட்டேநம் உள்ளத்தின்
எண்ணம் களைந்திடு வோம்.

பிறந்ததும் கம்சனைக் கொன்றா னகந்தை
இறந்திட கீதைசொன் னான்.

உமா said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி திரு.Raghav.

உமா said...

அமுதா வணக்கம். வருத்தம் என்றறிந்து நான் எழுதவில்லை. நானே உங்களிடம் கேட்க வேண்டும் என்றிருந்தேன். வாழ்த்துக்கு நன்றி.

மற்றும் திரு.அவனடிமையாரின் கேள்விக்கும்[கவிஞர்களுக்கு ஒரு கேள்வி: விருத்தத்தில் தளை விதிகள் உண்டா ? உ.: /கடலும் காரிருளும்/ தளை தட்டினாலும், பாடுவதற்கு சரியாகத்தானே இருக்கிறது.. ?] தாங்களே பதிலிருக்க வேண்டும்.
அன்புடன் உமா.

உமா said...

திரு.அவனடிமை அய்யா அவர்களுக்கு வணக்கம். தங்கள் வருகை எனக்கு மிக்க மகிழ்ச்சி தருகிறது.

நான்கு அடிகளைக்கொண்டு ஒவ்வொரு அடியிலும் ஆறு சீர்களை பெற்றது ஆசிரிய விருத்தம் என்று மட்டுமே அறிந்திருக்கிறேன். தளைகளைப்பற்றி இன்னும் சரியாக தெரிந்துக்கொள்ளவில்லை, ஆசான் திரு அமுதாவிடம் கேட்டு அறிந்து மோனையும் அமைய சிறப்பாக ஏழுதுகிறேன்.

//கிருஷ்ண ஜெயந்தியை சிறப்பாகக் கொண்டாட, அவன் பாடத்தை நினவு கூர்வோம்:

கண்ணன் குழலோசை கேட்டேநம் உள்ளத்தின்
எண்ணம் களைந்திடு வோம்.

பிறந்ததும் கம்சனைக் கொன்றா னகந்தை
இறந்திட கீதைசொன் னான்.//
மிகச் சிறப்பு அய்யா.

நெஞ்சினில் நேர்மை நமக்கிருந் தால்சற்றும்
அஞ்சுதல் தேவையில்லை,கண்ணனே - தஞ்சமென்றிம்
மண்ணின் உயிரெல்லாம் அவனெனக் கண்டாலே
மன்னன் அருள்வான் மகிழ்ந்து .

அகரம் அமுதா said...

அவனடியாருக்கு......


விருத்தத்திற்குத் தளைகள் கிடையாது. ஆனால் சீர்களின் அளவுகள் உண்டு. விரிவாகச் சொன்னால் மறுமொழி நீண்டுவிடும். வெண்பாவலையில் இனிவரும் பாடங்களில் (தங்களின் விருப்பப்படியே) பிறபாவகைகளையும் பார்ப்போம். அப்போது முழுவதும் அறிந்துகொள்ளலாம்.

அவனடிமை said...

//நெஞ்சினில் நேர்மை நமக்கிருந் தால்சற்றும்
அஞ்சுதல் தேவையில்லை, கண்ணனே - தஞ்சமென்றிம்
மண்ணின் உயிரெல்லாம் அவனெனக் கண்டாலே
மன்னன் அருள்வான் மகிழ்ந்து .
//

கலக்கிட்டீங்க உமா. நல்ல கருத்து.
நேர்மை=அபயம்
எண்ணுரு யாவும் = இறையுரு
சுருக்கமா சொல்லிட்டீங்க.

/தேவையில்லை/-யில் 'ல்' தேவையில்லை என்று நினைக்கிறேன். அப்போது தே+வையி+லை என்று தளை சரியாக வரும்.

அப்புறம், /ல்லாம் அவனெ/ தளை தட்டுகிறது. தளை மாற்றிய வரிகள் என் மனத்தில் எழுந்தாலும், நீங்களே முதலில் மாற்றிப் புனையுங்கள்.......

வாழ்த்துக்கள் உமா. நல்ல கவிதைத் தளம் இது.

உங்கள் காய்ச்சல் பாக்கள் அருமை. ஒரு கருவை வைத்து அதை பாக்களாக புனைவது (என்னைப் பொறுத்தவரை) மிகவும் கடினம் . அதை சுவை குன்றாமல் செய்திருக்கிறீர்கள். வாழ்க.

உமா said...

திரு.அவனடியார் அவர்களுக்கு மிக்க நன்றி. பாவை மாற்றி புனைய முயல்கிறேன்.

வாழ்த்துக்கு நன்றிகள்.

உமா said...

நெஞ்சினில் நேர்மை நமக்கிருந் தால்சற்றும்
அஞ்சிடத் தேவையிலை; அண்ணலே-தஞ்சமென்றிம்
மண்ணுயிர் எல்லாம் இறையுறு என்றுணர
கண்ணனே காப்பான் கடிந்து.

திரு.அவனடிமையார் அவர்களுக்கு, சற்றே மாற்றியமைத்துவிட்டேன். சரிதானே?

தங்களின் பாவையும் அளித்தால் மகிழ்வேன். நன்றி
அன்புடன் உமா.

Vidhoosh said...

super madam. remove the word verification please.

--vidhya

அவனடிமை said...

//
நெஞ்சினில் நேர்மை நமக்கிருந் தால்சற்றும்
அஞ்சுதல் தேவையில்லை,கண்ணனே - தஞ்சமென்றிம்
மண்ணின் உயிரெல்லாம் அவனெனக் கண்டாலே
மன்னன் அருள்வான் மகிழ்ந்து .

//
//
நெஞ்சினில் நேர்மை நமக்கிருந் தால்சற்றும்
அஞ்சிடத் தேவையிலை; அண்ணலே-தஞ்சமென்றிம்
மண்ணுயிர் எல்லாம் இறையுறு என்றுணர
கண்ணனே காப்பான் கடிந்து.
//

நன்றாக வந்திருக்கிறது உமா அவர்களே.

எனக்கு தோன்றியது உங்கள் முதல் பாவில் சிறிய திருத்தங்கள் தான், இதோ:

நெஞ்சினில் நேர்மை நமக்கிருந் தால்சற்றும்
அஞ்சுதல் தேவையில்லை,கண்ணனே! - தஞ்சமென்றிம்
மண்ணின் உயிர்களில் உன்னுருவைக் கண்டாலே
திண்ணம் அருள்வாய் மகிழ்ந்து .


மாற்றத்தினால் வெண்பாவின் நாலு வரிகளும் கண்ணனை நோக்கியே பாடுவது போல வருகிறது.

உமா said...

அருமை அய்யா. மிக்க நன்றி.