Friday, August 28, 2009

கடி என்ற சொல்லுக்கான வெண்பா

கடிந்தேகு வெள்ளம் கரையைக் கடக்கும்
கடிந்துறு செல்வம் கடுந்தீயாய்க் கொல்லும்
கடிதரு துன்பம் கடிந்துனைச் சேரும்
கடிந்தே மகிழ்வாய்க் கொடுத்து.

விரைவாகவும் அதிகமாகவும் பாயும் வெள்ளம் கரையைக்கடந்து அழிவை ஏற்படுத்தும், அதுபோல் அதிகமான தீயும் அழிவை ஏற்படுத்தும். அதுபோல் மிகுதியாகச் சேர்க்கப்படும் செல்வமும் அழிவை ஏற்படுத்தும்.மேலும் அப்பொருளை பாதுகாக்கும் அச்சமும் அது தரும் துன்பமும் விரைந்து நம்மைச் சேரும். பிறர்க்கு அச் செல்வத்தை கொடுத்து உதவுவதால் நம் அச்சம் தீர்ந்து மகிழலாம்.
கடி என்னும் சொல் விரைவு,மிகுதி,அச்சம்,நீக்கல் என பல பொருள் தரும்.
கடிந்தேகு வெள்ளம்- விரைந்து பாயும் அதிகமான வெள்ளம்
கடிந்துறு செல்வம் - மிகுதியாகச் சேர்க்கப்படும் செல்வம்.
கடிதரு துன்பம் - அச்சம் தரும் துன்பம்
கடிந்தே மகிழ்வாய் - நீக்கியே மகிழ்வாய்.

9 comments:

-தியா- said...

அற்புதமான மரபுக் கவிவரிகளில் புதுமை சொன்ன விதம் தரமாக உள்ளது

-தியா-

ஆ.ஞானசேகரன் said...

நல்ல விளக்கங்கள்.. நல்ல பகிர்வு

அகரம் அமுதா said...

அழகிய பா. வாழ்த்துக்கள். மேலும். எனதாசான் பாத்தென்றலாரைப் பற்றிப் பாத்தீட்டி என்னை மெய்சிலிர்க்கச் செய்துவிட்டீர்கள். வாழ்க. அவரிடம் அப்பாவை வழங்கித் தங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறேன் அவரிடம். வாழ்க.

உமா said...

திரு.அமுதா மிக்க நன்றி. சிறு குழந்தைகளுக்கான அவர் பாடல்கள்[மழலை மருந்து] என்னை மிகவும் கவர்ந்தன. அவரது பதிவிலும் பின்னூட்டமாக எழுதியுள்ளேன்.
மிக்க நன்றி.

[என்னவாயிற்று உங்கள் மழலை மருந்து?]

அவனடிமை said...

உமா அவர்களே: 'கடி'க்காமல் கலக்கிட்டீங்க. இடது பக்கம் பாத்தென்றலைப் பற்றிய பாக்கள் உங்களுடையது என்று முதலில் புரியவில்லை; அவருடையது என்று நினைத்தேன்.
சிறப்பாக உள்ளது.
உங்கள் பாக்கள் தந்த உந்துதலில், நானும் அவரைப் பற்றி ஒரு குட்டிப்-பா அவர் தளத்தில் மறுமொழியாக இட்டுள்ளேன்...
நன்றி..

உமா said...

நன்றி திரு.தியா.வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
நன்றி ஞானசேகரன்.

உமா said...

நன்றி திரு.அவனடியார் அவர்களே. நமது ஆசானின் ஆசானாயிற்றே என்று அவரது பதிவிற்குச் சென்று பார்த்தேன்.எளிமையான அழகான பாடல்கள் இனிமையாய் இருந்தன.அதுதான்.
அன்புடன் உமா.

அகரம் அமுதா said...

/////[என்னவாயிற்று உங்கள் மழலை மருந்து?]////

அது திரு. திரு.நெல்லைகண்ணன் அவர்களின் கையில் இருக்கிறது. அவர் இன்னும் உரை வழங்கவில்லை.

Information said...

நன்று, மிக நன்று