கண்ணில் தெரியும் கறுப்பு, சடுதியில் விண்ணிலே பட்டாய் விரிப்பு,இருளிலே வெண்ணிலா வானின் வனப்பு; மலர்களே மண்ணின் வசந்த வெடிப்பு. [இயைபு தொடையில்]
[நம்முன் மெதுவாக தோன்றும் கருமை, கரியப் பட்டு விரித்ததைப் போல் சட்டென்று பரவ அவ்விருளில் வெண்ணிலா தோன்றுவது வானின் அழகு. அதுபோல் பசுமை போர்த்திய வசந்த காலத்தில் பலவண்ண மலர்கள் மலர்வது மண்ணின் அழகு.
நாளை செய்வோம் நல்லது என்றே நாளைக் கடத்திடல் நன்றோ! காலம் வருமுன் காலன் வரலாம் தருவீர் அனைத்தும் தயங்காது இன்றே. [நாளைக்குச் செய்துக்கொள்ளலாம் என எந்த ஒரு நற்செயலையும் தள்ளிப்போடக்கூடாது. நம் வாழ்க்கை நிலையானதில்லை. எனவே நற்காரியங்களை உடனே செய்துவிடவேண்டும். இல்லையென்றால் செய்யமுடியாமலே போய்விடலாம்.]
கடிந்தேகு வெள்ளம் கரையைக் கடக்கும் கடிந்துறு செல்வம் கடுந்தீயாய்க் கொல்லும் கடிதரு துன்பம் கடிந்துனைச் சேரும் கடிந்தே மகிழ்வாய்க் கொடுத்து.
விரைவாகவும் அதிகமாகவும் பாயும் வெள்ளம் கரையைக்கடந்து அழிவை ஏற்படுத்தும், அதுபோல் அதிகமான தீயும் அழிவை ஏற்படுத்தும். அதுபோல் மிகுதியாகச் சேர்க்கப்படும் செல்வமும் அழிவை ஏற்படுத்தும்.மேலும் அப்பொருளை பாதுகாக்கும் அச்சமும் அது தரும் துன்பமும் விரைந்து நம்மைச் சேரும். பிறர்க்கு அச் செல்வத்தை கொடுத்து உதவுவதால் நம் அச்சம் தீர்ந்து மகிழலாம். கடி என்னும் சொல் விரைவு,மிகுதி,அச்சம்,நீக்கல் என பல பொருள் தரும். கடிந்தேகு வெள்ளம்- விரைந்து பாயும் அதிகமான வெள்ளம் கடிந்துறு செல்வம் - மிகுதியாகச் சேர்க்கப்படும் செல்வம். கடிதரு துன்பம் - அச்சம் தரும் துன்பம் கடிந்தே மகிழ்வாய் - நீக்கியே மகிழ்வாய்.
வெக்கம் இதுவெக்கம் வெம்பசியால் புல்தின்னும் மக்கள் ஒருபக்கம், வற்றியுடல் சக்கையாய் கண்ணில் தெரியும் குழந்தை களொருபக்கம்; விண்தொடும் வீடு வசதியாய் வாகனம் மண்ணின் மறுபக்கம் வண்ணமிகு வாழ்க்கையதில் சன்னல் கதவுக்கும் சீலை.
[புகைப்படம் திரு ஞானசேகரனின் 'அம்மா அப்பா' விலிருந்து]
திரு ஞான சேகரன் அவர்கள் இத்தொடர் இடுக்கைக்கு என்னை அழைத்ததன் மூலம் என் சிந்தனைக்கு சற்றே தீனி போட்டிருக்கிறார். அழகு,பணம், காதல், கடவுள் பற்றி சிந்திக்க வைத்துவிட்டார். அவரது பதிவில் தண்ணீர், பசிக்கொடுமை பற்றியெல்லாம் நிறைய அறிந்து எழுதியிருப்பார். அதன் தாக்கத்தால் அவர் எழுதிய சில விடயங்கள் பற்றி பா'எழுத நினைத்ததுண்டு. இப்படி பல விதங்களில் தூண்டுதலாய் அமைந்ததால் அவருக்கு நன்றியுடன். பணம்: அளவாய் இருந்தால் அமுதாய் இனிக்கும் விளக்கின் ஒளியாய் வெளிச்சம் கொடுக்கும் பணமும் சினம்போல் சிந்தை அழிக்கும் கணமும் நெருப்பாய் கனன்று.
[தீயானது அளவோடு அகலில் இருந்தால் வெளிச்சம் கொடுக்கும்.அதுவே அளவுக்கு மீறினால் நெருப்பாய்க் கூரையை எரிக்கும், அதுபோல் பணமும் தேவைக்கு தகுந்தவாறு அளவோடு இருக்க, உதவியாய் இருக்கும், நம் உயிரைக்காக்கும் உணவு போல் நம்மைக்காக்கும். அதுவே மிகுந்தால் நம் சிந்தையை அழித்துவிடும். சிந்தை இழந்தவன் செத்தவன். எனவே நம்மை கொல்லும் பணம். சினமும் அதுபோல் அளவோடு இருக்க வேண்டும்.] இல்லா திருந்தாலோ வாழ்ககையே இல்லையே எல்லாம் அதுவேதான் என்றாலுந் தொல்லை பணமோ பெருகிடும் வெள்ளம் அலையா மனமோ தடுக்கும் அணை.
பணம் இல்லாதிருந்தால் வாழ்கையில்லை. பணம் என்னும் கருவி யில்லை என்றால் பல காரியங்கள் செய்ய இயலாது. அனால் பணம் செய்வதுதான் முதன்மை என்று கொண்டால், நாம் வாழ்வை மறந்துவிடுவோம். நம் வாழ்வை வளமாக்க பணம் சேர்க்கப் போய் வாழ்வையே இழத்தல் சரியோ?[ BPOவில் வேலை செய்யும் எவ்வளவோ பேர் தனது பெயர்,உடை,உணவு முறை, உறக்கம் என எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டு பணம் மட்டுமே சம்பாதிக்கிறார்கள். வாழ்வை அறிவதேயில்லை. ] ஆற்றில் வெள்ளம் அளவோருந்தால் பாசனத்திற்கும், மற்றத்தேவைகளுக்கும் பயன் படும். அதுவே பெருகினால் ஊரே அழியலாம். அதை தடுக்க அணை கட்டுகிறோம். அணை நீரை சேமிக்கவும் இல்லாத போது உபயோகிகவும், மிகுந்தால் சீராய் திறந்து பயன்படுத்தவும் உதவும். அதுபோல் போதும் என்ற மனமே நமக்கு பணத்தை சேமிக்கவும்,தேவைக்கதிகமானால் பிறருக்கு கொடுத்து மகிழவும் செய்யும். காதல்: //காதலும் கடவுளைப் போல அதை உயிரினில் உணரணும் மெல்ல..// எவ்வளவு அழகான வரிகள். உண்மைதான் காதல் உணரப்படவேண்டியது. மனிதராய் இருப்பவர் யாரும் எப்போதும் உணரக்கூடியது. காதல் மென்மையானது. மெல்லச் சொல்லுங்கள் இறகைத்தொடுவதுப் போல் மெல்ல உச்சரியுங்கள். அழுந்தச் சொன்னால் உடைந்துப் போய்விடும். காதல் என்பது அன்பு என்ற அடித்தளத்தின் மேல் கட்டப்பட்ட இறகாலான, பூவிதழ் பரப்பப்பட்ட மணமிக்க வீடு. அதில் வாழ்வது என்பது மிதப்பது ஆகும். காதல் அவளிருப்பு அவனிதயத்திலும் அவனிருப்பு அவளிதயத்திலும் பட்டாம்பூச்சிப் பறக்கச் செய்யும்.. தாழ்ந்த விழி தரைநோக்க தனித்தியங்க்கும் நெஞ்சம் வானவில் பார்க்கும்..
காலம் கடந்து காலன் வென்றாலும் கவிதையாய் உயிர்த்திருக்கும்.
கடவுள்: கடவுளும் காதலைப் போல அதை உயிரினில் உணரணும் மெல்ல.. ஆமாம். என்னைப் பொருத்தவரையில் கடவுள் என்பதும் ஓர் உணர்வுதான். ஒவ்வொருவரும் தனித்தனியே அதை உணர வேண்டும். உருவம் கொடுத்து நாம் வழிபடுவதெல்லாம் நம் மனதை நம்ப வைக்கவே.மனம் போகும் வழியிலேயேச்சென்று அதைக்கட்டுப்படுத்த உருவ வழிபாடு உதவுகிறது. எதைச் செய்வதால் அன்பு, அமைதி,உண்மையான நிம்மதி கிடைக்கிறதோ அவையெல்லாம் வழிபாடு. எவையெல்லாம் அதற்குத்துணை ஆகிறதோ அவையெல்லாம் இறைவன். தாய்மை கொடுக்கும் உணர்வுதான் கடவுள். அன்பு என்னும் அருள் தான் கடவுள். உண்மை நேர்மை தூய்மையேக் கடவுள். உண்மையாய் நேர்மையாய் தூய்மையாயிருந்தால் நீயும் கடவுள். நாத்திகம் ஆத்திகத்தின் முடிவு.ஆத்திகம் நாத்திகத்தின் முடிவு. அன்பை போதித்ததால் வள்ளளாரும் கடவுள். பலருக்கு அன்பை நல் வழியைக்காட்டியதால் பெரியாரும் கடவுளே. அழகு: இந்த உண்மையெல்லாம் உணர்ந்தால் அதுதான் அழகு. உண்மைதான் அழகு. கண்ணில் தெரிவதெல்லாம் உண்மையா? இல்லை. கானல் நீர் கண்ணில் தெரியும் ஆனால் இல்லையல்லவா அதுபோல் தான் இவையும். அழகாக தெரிவதெல்லாம் அழகில்லை. உள்ளத்தில் அழகாக உணரப்படுவதே அழகு. தொடர்ந்து எழுத நான் அழைப்பது இனிய நண்பர் திரு. சொல்லரசனை. ஏசு என்னச் சொல்கிறார் என்பதை அவர்மூலம் நாமறியலாமே. அடுத்ததாக திரு. திகழ்மிளிர். இந்த நான்கிற்கும் நல்ல பா' எழுதுங்களேன்.
[ என்னைப் பொருத்தவரையில் கடவுள் என்பது ஒர் உணர்வு. அன்பு, நேர்மை,காதல் போல் கடவுளும் ஒர் உணர்வு.அதை காட்ட இயலாது. தனித்தனியாக ஒவ்வொருவரும் உணர வேண்டும். உருவம் கொடுத்து நாம் வழிபடுவதெல்லாம் நம் மனதை நம்பவைக்கவே. மனம் விசித்திரமானது. அறிவியல் உண்மைகளை சுலபமாக நம்பாதமனம் சில விடயங்களை சிறிதும் அடிப்படையில்லாமல் நம்பும். மனதின் போக்கிலேயேச்சென்று மனதை கட்டுபடுத்தும் செயலுக்கு உருவவழிபாடு அவசியமாகிறது. மனதில் அன்பையூட்டும் கண்ணணும், கந்தனும், கடிகணபதியும் அனைவரும் ஒருவரே.கண்ணனாய் நினைக்கும் போது அன்பு மேலோங்குகிறது. கந்தனாய் வணங்கையில் நேர்மை நெஞ்சில் நிலைக்கிறது, கணபதியைத் தொழுதால் எண்ணியக் காரியம் முடிக்கும் திரன்வளர்கிறது.]
காத்தருள்வாய் கந்தா கருவிழியைக் கண்ணிமைக் காத்தல்போல் காப்பாய்; கடம்பா கதறுகிறேன் காட்டுன் கருணை கதிர்வேலா காகிதக் கப்பல் கடல்கடக் க. காகிதக்கப்பல் கடலைக் கடக்க இயலாது, அதுபோல் இவ் வாழ்க்கை எனும் கடலைக் கடக்கத் தெரியாது தத்தளிக்கிறேன். கந்தனே எனைக்காப்பாயாக! கருவிழிக்கு வரும் தீங்கை கருவிழி தன்னால் தடுக்க இயலாது. விழிக்குக்துணை இமையே. அதுபோல் எனக்குத் துணை நீயே,எனக்குறும் பகையை கந்தனே உன்னால் மட்டுமே அழிக்க இயலும். என்னால் ஆவதிவ்வுலகில் எதுவுமில்லை. என்னை நல்வழி படுத்தி எனைக் காத்தருள்வாய் குகனே. திரு.தமிழநம்பி அவர்கள் திருத்தியதன் பின். காத்தருள்வாய் கந்தா கருவிழியைக் கண்ணிமை சாத்திப் பரிவாய்ச் சலியாது ஓம்புதல்போல் காட்டுன் கனிவருளை! கதிர்வேலா காகிதக் கப்பல் கடல்கடக் க.
[தீயானது விளக்கிலிருக்கும் போது நிதானமாய் எரிந்து வெளிச்சம் கொடுக்கும்,அதுவே சற்றே பெரிதானால் குளிரைத்தடுக்க, உணவு சமைக்க பயன் படும். ஆனால் மிகுதியான நெருப்பாய் எரியும் போது கூரையையே கொளுத்தி விடும். அது போல் சினம் தேவையான இடத்தில் அளவோடு இருந்தால் நன்மை தரும், அதுவே மிகுதியானால் நம் சிந்திக்கும் திறனை அழித்து நம்மையே கொன்றுவிடும்.]
மன்றல் கமழும் - மணம் வீசு்ம் மலர்மாலை அணிந்து மன்றல் மணக்க - தான் நடந்துவரும் தெருவெல்லாம் மணம் வீச மடக்கொடி வந்துற்றாள் மன்றல் - கொடியைப் போன்ற இடையையுடைய மணப்பெண் திருமணக்கூடம் வந்தாள். மன்றல் மகிழ நினைந்து - அவளைக் கூடி மகிழ்வதை எண்ணியவாறே மணமகன்தானும் விரைந்து வந்தான். மன்றல் - மணம், நெடுந்தெரு,திருமணக்கூடம், புணர்ச்சி எனப் பல பொருள் தரும்.
[ ஈழத்தமிழரின்னல் இன்னும் தீர்ந்த பாடில்லை. அவர் மானம் காக்கவும் உயிரைக்காக்கவும் எவரும் இல்லை. இயற்கையும் துணைவரவில்லை. மரம் கூட தன் இலைகளை உதிர்த்து நிழலின்றி காய்க்கிறது.]
[பயத்தால் பீதியடைந்து மருத்துவமனைக்கு அனைவரும் ஒரே நேரத்தில் செல்வோமானால் அங்கு ஒருவருக்கிருந்தாலும் எல்லோருக்கும் உடனே பரவும். நோயைக் கூட்டிக்கொண்டு வந்துவிடுவோம். எனவே முகமூடியிட்டு அரசு பரிந்துரைத்துள்ள இடங்களில் நோய் இருக்கலாம் என் உங்கள் மருத்துவர் சந்தேகித்து பரிந்துரைத்தால் மட்டும்பரிசோதனைச் செய்து கொள்ள வேண்டும். மருத்துவர் பரிந்துரைக்காமல் மாத்திரையும் எடுத்துக் கொள்ளாதீர்கள்.பக்க விளைவுகள் மிக அதிகமாய் இருக்கும்.]
சர்க்கரை ஆஸ்துமாவோ(டு) இரத்த அழுத்தமென்றால் அக்கரை வேண்டும் அதிகமாய் எக்கணமும் சின்னஞ் சிருவர் பெரியோர் தமைசற்றே கண்ணுங் கருத்துமாய் கா.
விளக்கம்: வாழ்வின் இனிமைகள் மேலும் மேலும் வளரும் வண்ணம் நட்புடன் கூடி, துன்பத்தை பகிர்வதன் மூலம் அதனை இல்லாததாக்கி , நம் வாழ்வில் என்றும் விரைந்து நம்மை ஆட்கொளளக்கூடியதான சோர்வு நம்மை அடையாவகையில் இருளைநீக்கும் சுடராய் நம் சோர்வை நீக்கி, தவறு செய்யும் போது கண்டித்துக்கூறியும் நம்மை நல்வழிபடுத்துவதே சிறந்த நட்பு.
காலை மலரும் மலர்கள் உலர்ந்தவையே மாலையில் வீழ்ந்திடும்,வாழ்வெனுஞ் சோலையில் என்று மதுபோல் இரண்டறச்சேர்ந் தேயிருக்கும் இன்பமுந் துன்பமு மே.
[பாரசீக கவிஞர். உமர்கய்யாம் பாடல்களை படித்ததின் தாக்கம்] விளக்கம்: காலையில் மலரும் மலர்கள் மாலையானல் உதிர்ந்து வாடிவிடும்,ஆனாலும் காலையி்ல் மீண்டும் மலர்கள் மலரும். அதுபோல் மனிதன் வாழ்வில் இன்பமும் துன்பமும் மாறிமாறியே தோன்றும். எதுவும் நிலையானதல்ல என்பதால் இன்பத்தில் இறுமாப்படைவதும் துயரில் துவண்டுவிடுதலும் கூடாது. சமமாக பாவித்தால் நிம்மதி இருக்கும்.