Saturday, February 03, 2007

மாலையில்
கெஞ்சலும்
இரவில்
கொங்சலும்
காலையில்
அலுவலில்
மறந்தே போனது..
மறுபடி வந்தது
மாலை
நினைவில் வந்தது
கெஞ்சலும் கொஞ்சலும்..
சிரித்தும்
மகிழ்ந்தும்
கடந்த நாட்களில்
ஒரு நாள் மாலை
வந்தது ஊடல்..
மறுநாள் அலுவலில்
கையும் ஓடலை
காலும் ஓடலை..
மாலைவரை
காத்திருக்க
மனமும் விடவில்லை..
தொலைபேசி
சினுங்கியது
கணவன் காலிங்.... ....
மறுமுனை
அழுதது
மனைவி க்ரையிங்.... ....?
மாலையில்
கெஞ்சலும்
இரவில்
கொஞ்சலும்
காலையில்
அலுவலில்
மறந்தே போனது...

மீண்டும் வேண்டும் ஓர் உயிர்ப்பு

கருவாய் உன்னுள்
நான் காலந்தபோது
அந்த
இருட்டுச் சிறையில்
இருந்த சுதந்திரம்

வெளிச்ச வெளியில்
வெட்டப்பட்ட சிறகுகளாய்...

மடிகிடந்து
மார்பணைத்து
கழுத்து வளைவில்
முகம் புதைத்து
கண்ணங்குழிய
கண்ட என் கனவு

பஞ்சு மெத்தை தலையணையில்
எட்டாகனியாய்
வட்ட மாத்திரைக்குள்...

அறியா பருவத்தில்
உணரா இனிமைகள்

காலம் கடந்து
தூங்கா என்
கண்களில்
எழுதா கவிதைகளாய்...

கனவு மெய்ப்பட
வேண்டும்
ஓர் உயிர்ப்பு
உன்னுள் கருவாய்
மறுபடியும்...

Wednesday, January 31, 2007

TN 22 Z 9326

கையிருப்பைக்
கரைத்து
என் காலுக்கு
ஓய்வளிக்க
கருப்புக்குதிரையாய்
என் வீட்டில் நீ...

கொஞ்சமாய்க்
கொண்டு
அதிகமாய்
கொடுத்தாய் மைலேஜ்...

'சாம்ப்'
உன் பொதுப்பெயர்...
'TN 22 Z 9326'
உன் சொந்த பெயர்...

ஓய்வு பெரும்
தொழிளாளிக்கு
உண்டாகும்
ஓர் ஈர்ப்பு..
தொழிற்சாலைமேல்...

ஆனால்,
உனக்காக
கலங்குவதோ
உன் அதிகாரி...

நீயோ,
வேண்டுதல் வேண்டாமை
இல்லாதவனாய்
அடுத்த
உன் எஜமானிக்கான
உழைப்போடு....


Monday, January 29, 2007

பாரதம்


இரவில் வாங்கிய
விடியல்
எங்கள் விவேகத்தின்
வெளிச்சம்...

எங்கள் கொடியை
உயர்த்தவே
'குமரன்' கள் நாங்கள்
கொலையுண்டோம்...

மாற்றானுடையதை
மிதிக்க அல்ல
மறுக்கவே
ஆசைப்பட்டோம்...

இறக்கப் படாமல் இறங்கிய
கொடியின்
இடத்தை பற்றியது
ஏற்றாத போதும்
எங்கள் உள்ளத்தின்
உச்சியில் பறந்த
எம் கொடி

இன்னா செய்தார்க்கு
நாண
நன்னயம் செய்யும்
நோக்கு அது...

பெற்ற பிள்ளைக்கு
பால் என்ன
பழஞ்சோறும்
புகட்டாதாள் எம்
பாரதத்தாய்...

என்றாலும்
பிச்சை வாழ்க்கை
அச்ச உணர்வை
ஊடட்வில்லை எங்கள்
உதிரத்தில்...

அத்து விட்டது
விலங்கு - ஆக
பெற்றுவிட்டோம்
புதுவாழ்வு...

கட்டிவிட்டோம்
மனக்கோவில்...

அங்கே....

ஜாதி பேய்களை
கொண்று
மத பேதங்கள்ற்ற
ஓர்வாயில்...

காமங்கள் குரோதங்கள்
விட்டு
கடன் தொல்லை
அழித்ததோர் வாயில்...

பட்டப் பகலில்
கொள்ளை மற்றும்
பட்டினிச் சாவுமிங்கில்லை
என
பறைச்சாற்றி
நிக்குதோர் வாயில்...

திறந்து கிடக்குதோர்
வாயிலாங்கே
திறமையுள்ளோர்
எல்லோர்க்கும்
வேலை...

நட்ட நடுவினில்
எம் நாடு
பச்சை பசுமை
போர்த்த பூங்காடு...

பூக்களின் நடுவினில்
புதுநங்கை நல்லாள்
பட்டத்துன்பங்கள்
மறந்துவிட்டாள்
பந்தைபிடித்தே
ஆடுகின்றாள்
பாடுகின்றாள் எங்கள்
பாரதத்தாய்...






Saturday, January 27, 2007

சின்ன சின்னக் கவிதைகள்


.............பிளாட்

மரங்களின் வேர்ப்பிடுங்கி
கட்டப்பட்ட
கூண்டிற்க்குள்
அடைப்பட்ட மனிதன்
புலம்புகிறான்
"காற்றே இல்லை" என

சிறைப்பட்ட காற்றோ
நகரவும் முடியாமல்
கண்ணீர் வடிக்கிறது
'நண்பணின்' கல்லறையில்...

............மரக்கதவு

ஒளி பெற்ற
கண்களை
காணத்துடிக்கும்
இறந்தவனின்
தாய்ப் போல
தென்றல் தவழ்கிறது
மரக்கதவுகளில்....


.............மழை

மேகம் பார்த்த வண்ணமயில்
தோகை விரித்து சிரித்தாட
வானம் பார்த்த விவசாயி
வாடிய நெஞ்சம் மகிழ்ந்தாட
ஊர்தி பார்த்து காத்திருந்த
ஊர்மக்கள் பட்டணத்தில்
ஒரு தொல்லை ஒழிந்ததென
ஒவ்வொரு குடமாய் ஒளித்துவைக்க
வெடித்த நிலமும் வளமைபெற
கருத்த மேகம் தந்ததம்மா
தரணியில் எங்கும் மழை மழை...


Wednesday, January 17, 2007

சுனாமி கவிதை

.................ஐயோ பாரதீ.......
நெரித்த கடலிடை என்ன கண்டிட்டாய்
நீல விசும்பிடை என்ன கண்டிட்டாய்
........ ..... .... .............
...ஈர மணலிடை நின் முகம் கண்டேன்
...உயிரைப் பறித்த கடலிடை
...நின் முகம் கண்டேன்
ஐயோ பாரதீ......
...எங்கும் காணவில்லையே உன்னை
...நீயாக நினைத்து
...ஆயிரம் பேருக்கு காரியம் செய்யும்
...உன் அன்புக்காதலன்....

தலைப் பொங்கல்




மஞ்சள் பூசி நீராடி
...மனதை தூய்மையாக்கி
புத்தாடை உடுத்தி
...புதுமஞ்சள் கட்டிவைத்து
பூவைத்து பூஜித்து
...புதுமனையாள் பொங்கலிட
பூத்துவரும் நன்னாளில்
...தலைப்பொங்கல் திருநாளில்
வாழ்த்திவிட எண்ணுகின்றோம்
..."வாழ்க நீ, பகலவன் போல்
....பார்புகழ பலகாலம்"

பொங்கல் திருநாள்

வாசல் தெளித்து
வண்ணக் கோலமிட்டு
நீராடி, நெஞ்சை
நேராக்கி, நித்தம்
போராடும் உழவர்
பெருவாழ்வு பெற்றிடவே
புத்தாடை உடுத்தி
புதுப்பானை பொங்கலிட்டு
போற்றிடுவோம் ஞாயிற்றை
புவனம் காத்திடவே...

சரஸ்வதி துதி

சிரித்த முகமும் செவ்வரி கண்களும்
செந்தேன் இதழும் வெண்தா மரையும்
வீணையும் ஓலையும் வெண்முத்து மாலையும்
சூடிடும் தேவியை நாடிடு மனமே...
------------
காரிருள் கூந்தல் அலையென ஆகும்
இருவிண் மீன்கள் கண்ணென ஆகும்
கோவைச் செவ்விதழ் தேனென இனிக்கும்
தேவியின் தேகம் தண்ணொளி நிலவு...
...............
நெஞ்சம் தாமரை நினைவுகள் பூமழைத்
தூவிடும் நேரம் பாயிரம் ஆகும்
வேணியை துதித்திட வேண்டும்வரம் கிடைக்கும்
ஆனந்தம் தருமே அவள்திரு நாமம்...
...............
செந்தமிழ் வளர்க்கும் இயலிசை அறியும்
அன்னையின் அருளே அறிவினை அளிக்கும்
தேவரும் போற்றும் அவள் திருப் பாதம்
துதித்துநீ மனமே துயர்களை வாயே...
...............

Saturday, November 18, 2006

கலைந்த கனவு

அழகான மலை
ஆழமான பள்ளத்தாக்கு
அற்புதமான மாலை நேரம்
பசுமையான புல்வெளி
பக்கத்தில்
நீ மட்டும்
ப்பூ....
கட்டிலில் கொசு...

துணுக்குக் கவிதைகள்


அவ்வப்போது தோன்றியப்போது எழுதிய குட்டிக்குட்டிக்கவிதைகள்

"குழந்தை" பருவம்

கரிய வண்டின் வண்ணமோ
கண்ணில் வந்து நின்றதோ...
கோவைப்பழம் நாணுமோ
கொஞ்சும் வாய்ச் சிவப்பிலே
பட்டு மேனி மென்மையில்
பூவைக்கூட மிஞ்சுமோ...
பிஞ்சுக் கால்கள் நடக்கவே
பூமி வரம் பெற்றதோ

சிட்டுக் குருவிக் கூட்டமோ
சின்னப் பூக்கள் பேசுமோ
கோவை யிதழ் ஒலியிலே
குயிலின் ஓசை கேட்குமோ
மழலை கூட்டம் நடக்கையில்
மயிலும் பாடம் கற்குமோ
கொஞ்சி நடம் ஆடுமோ
கூடத் தாளம் போடுமோ...

பள்ளிப் பருவம்

சின்னச் சின்னக் கைகளில்
சிறுமைத் தனம் இல்லையே
வண்ண வண்ணக் கண்களில்
வன்மை என்றும் இல்லையே
பஞ்சுப் போன்ற நெஞ்சிலே
பகைமை தெரிவ தில்லையே
பள்ளிக் கூட நாட்களில்
பார்க்கும் யாவும் நன்மையே...

தாய் வீடு


முகம் துடைத்து பொட்டிட்டு
'பொன்னம்மாள்' வந்து விட்டால்
பூ வாங்கித் தலைச் சூடி
எனக்காக சிறிது நேரம்

சூடாறிப் போனதென்றாலும்
சுவைத்து சாப்பிட
எனக்காக சிறிது நேரம்

வேலை முடிந்து வீடு திரும்புகையில்
அயர்ந்து தூங்க அரைமணி நேரம்
எனக்கே எனக்காக - ஆம்
இரயில் பயணம் எனக்கு
தாய் வீடுதான்.

சென்னை sub urban இரயிலில் வேலைக்காக பயணிக்கும் ஒவ்வொரு பெண்ணும் ஆமோதிக்கும் விஷயமிது.

பட்டணத்தில் மழை


சென்னையில் தண்ணீர் கஷ்டம் தெரியுமா உங்களுக்கு?பத்து வருடாமாய் போதியமழையின்மை, இரண்டு வருடமாய் அதிகபடியான மாமழை,ஆனாலும் சென்னை, சென்னைதான்...

காட்டுப் பக்கம் தண்ணீர் இல்லை
நாட்டுப் பக்கம் வந்த மயில் - தன்
தோகைப் பழக்கம் மறவா திருக்க
விரித்து ஆடிப் பழகு கையில்
பார்த்து விட்ட மழை மேகம்
பட்டணத்து மக்களிடம் பகைமை மறக்க
மண்ணில் உதித்ததோர் உயிர்த்துளி...



பச்சை மஞ்சள் சிவப்பு
வரிசையாய்...
காத்திருக்கிறது
தண்ணீர் லாரி....

உன்னில் நான்



இரு விழிப்பார்த்து
இதய வாசல்
திறந்து வைத்தேன்
இறுக்கமான என் இதயத்தின்
நுணுக்கமான ஓர் இடத்தை
நீ தொட்டுவிட்டாய்
குடிப்புகுந்த வீட்டை
கொள்ளைக் கொண்டே போனாய்
தேடி அலைந்ததில்
கிடைத்தது
என்னில் உன் இதயம்...

Friday, November 17, 2006

சுனாமி கவிதைகள்


ஜெயித்த பூதகி

கடலே !
நீ பாதகி!
ஜெயித்த பூதகி!

ஆயிரமாயிரம் மீனவர்க்கு
அமுதூட்டுவதாய் அணைத்து
அழித்தப் பாதகி...
ஜெயித்த பூதகி...


நிலவே
நீ பொய்
உன் ஒளி பொய்
கடலோடு கலந்த
உன் மோகனம் பொய்
உன்னில் லயித்த எங்கள்
இன்பம் பொய்

உண்மை....
நேற்றய கனவு
இன்றில்லா
வெறுமை...
நேற்றய இன்பம்
இன்றில்லா
துன்பம்...

நன்மை...
புதைந்து போன
சேற்றிலே
புதிதாய் முளைத்த
மனிதநேயச் செடி...

நம்பிக்கை மலர்கள்
பூக்க
நேற்றையச்சோகம்
நாளைய
வரலாறாகும்...

Monday, October 02, 2006

பயணம்

சந்தோஷங்கள்
சிறுகைதட்டல்கள்
இவை
தாமத படுத்தும்
வேகத்தடைகள்..

பாரங்களாகும்
பாராட்டுகள்..

வெற்றிகளோ
பயணம் தடுக்கும்
பெரும் பள்ளங்கள்..

முயற்சியின் வேகத்தில்
சிகரங்கள் கடக்கும்
பயணத்தில்
தோல்விகளே
என்னை
துரிதபடுத்தும்..

காயங்களே
என்னை
கட்டாயப்படுத்தும்
காரியமாற்ற..

கண்ணீரே
தண்ணீராகும்
துவண்ட நெஞ்சம்
தளிர்விட..

தன்னம்பிக்கை
துணைவர
இமயங்கள் தாண்டியும்
பயணிக்கும்
என் மனம்...

Friday, September 22, 2006

நிலாப்பயணம்




கிராமத்து காத்தினிலே


குளித்தெழுந்த முழுநிலா...


பாசும்புல்லின் துண்டெடுத்து


முகம் துடைத்த


வெண்ணிலா...


நீல வான ஆடைதன்னை

கட்டிக்கொண்ட

வான் நிலா...

பாய்ந்து வரும்

ஓடையிலே

அழகு

பார்த்துக்கொண்ட
பெண்நிலா...

ஓர் நாள்

கார் மேகக் கூந்தலிலே
மின்னல் பூவைச்சூடி

பூ வாச "செண்ட்" அடித்து

புறப்பட்டாள் புதுநங்கை...

பயணமோ வெகுதூரம்...


பஞ்சு போன்ற


புல் மெத்தை


வறண்டு போயி


பாழாச்சு...


பயிரிட்ட பாதி நிலம்


வீணாகி நாளாச்சு...


டீ.வி. பொட்டியொன்னு


வந்ததனால்


பாதி ஊரு


கெட்டாச்சு...



அதுவுமில்லை


இதுவுமில்லை


இரண்டும் கெட்டான்


நிலையாச்சு...


ஆளுக்கொரு

கொடியாச்சு


ஆயிரந்தான்


கட்சியாச்சு


கூடியிருந்து பேசுந்திண்ணை


கொலைக்களமாய்


மாறிப்போச்சு...




அத்தனையும் செஞ்சுப்புட்டு


யாரங்கே தூங்கறது!




பட்டணந்தான் போய்வந்தால்


புரிந்திடுமோ ஒருவேளை...




பூ வாச "செண்ட்" அடித்து


புறப்பட்டாள் புதுநங்கை...




எட்டி நடை போட்டு


ஏந்திழையாள் வந்துவிட்டாள்


அலையோசை தனைக்கேட்டு


அங்கேயே நின்றுவிட்டாள்...


குட்டி குட்டி

ஆறுகளும்


கூடுமிந்த கடலோரம்


முன்பு அவள்


கண்ட இன்பம்


நெஞ்சினிலே நினைந்திட்டாள்...


வெளிச்ச கரம் நீட்டி

வீதிவரை வந்துவிட்டாள்...


ஐயோ!


அவள் காண வந்த காட்சி என்ன!


கண்டுவிட்ட கோலமென்ன!




பரந்துநின்ற


மணல்வெளியோ


பாதையோர வீடாச்சு


பகுதிநேர


விடுதியாச்சு...


அலைவீசும் கடலோரம்

மனம் கூசும்


கக்கூசாச்சு...


கொடிகளோடு கூட்டங்களும்


கொள்ளைகளும் கோடியிங்கே


விண்ணைமுட்டும் கட்டிடங்கள்


வீதியில்


வெற்றுடம்பில் இரத்திணங்கள்...


கேளிக்கை கூத்துக்கு


ஹோட்டல்கள் ஒருபக்கம்


கூழுக்குமில்லாத


கூலிகள் தெருபக்கம்...


கட்டிப்போட்ட நாய்குட்டி


கட்டிலோரம் தூங்குறது..


தொட்டில் குழந்தையொன்னு


தெருவோரம் கிடக்கிறது...


மண் பதைக்கும் வித்தியாசம்


மருந்துக்கும் இல்லை


மனிதநேயம்...


தாகம் தீர்க்க


தண்ணியில்லை


காற்றுவாங்க


சோலையில்லை


வீதியோர கொசுவெல்லாம்


விருந்துண்ண ஓடிவர


பட்டணத்து பயங்கரம்


பார்த்துவிட்ட பாவையிவள்


'சிக்குன் குனியா' வருவதற்க்குள்


பறந்துவிட நினைக்கின்றாள்...


ஐயோ!




காலை மணி அடிச்சாச்சு


கரும்புகையே மேகமாச்சு


நீல ஆடை வெளுத்துப்போச்சு


வெள்ளை முகம் கருத்துபோச்சு


தீராத தழும்போடு





தலைதெரிக்க ஓடுகின்றாள்


பாதையெங்கும் வாகனம்


பார்த்து போகநேரமில்லை


ஆராத இரணத்தோடு


பாதியான தேய்நிலா





கால்வலிக்க ஓடிவந்து


கடலினிலே விழுந்துவிட்டாள்


திரும்பி வரும் எண்ணமில்லை


ஆனாலும் வருகின்றாள்


மாதம் ஒருமுறை


முழுநிலவாய்...





நேர்மை தவறாத மனத்தோடு





சோர்ந்திருக்கும் சிலருக்கு


சோதிமுகம் காட்டுகின்றாள்


'கலங்காதீர்' என்றே சொல்லி


காத்திருக்கிறாள்


அவளும்


காலம் மாற...




























































Thursday, September 14, 2006

அனுபவம்


வாழ்க்கையை
அசைபோட நினைத்தால்
குட்டுப்பட்ட
கெட்ட கெட்ட நினைவுகளே
மேலெழும்பி வருகிறது...

மென்று முழுங்கவேண்டியிருக்கிறது...

காலம் அதை ஜீரணிக்க
அறிவுப் பசியாற
அடுத்த மேய்ச்சலுக்கு தயாராகிறது
மனம்
சற்றே கவனமாய்!...