Wednesday, December 08, 2010

நலம் வாழ - இசைப்பா

சுத்தம் செய்வோம்

நித்தம் எங்கும்

சத்தம் குறைப்போம் நலம்வாழ -நல்

வித்தே முளைக்கும்

சத்தாய் உண்போம்

வஞ்சம் கோபம் விலக்கிடுவோம்.


இயற்சீர் +இயற்சீர்
இயற்சீர் +இயற்சீர்

இயற்சீர் +இயற்சீர் + காய் =ஓரசைச்சொல்,
இயற்சீர் +இயற்சீர்
இயற்சீர் +இயற்சீர்
இயற்சீர் +இயற்சீர் + காய்!

Thursday, November 25, 2010

வெண்தாழிசை

[1. இது மூன்றடிப் பாடல்

2. கடைசி அடியின் கடைசிச் சீர் தவிர மற்றவை தேமாச் (நேர்நேர்) சீர்களே.
3. மூன்று அடிகளும் ஓர் எதுகை பெற்று வரவேண்டும்.
4. கடைசிச் சீர், ஓரசைச் சீராக நாள் அல்லது காசு என்ற வாய்பாட்டில் வரவேண்டும். ]

காற்றும் நீரும் காணும் யாவும்
தோற்றம் நீயே போற்றி நின்றேன்
ஏற்றம் தாராய் என்று.

என்றும் நின்றாள் ஏத்து கின்றேன்
குன்றில் கோவில் கொண்டாய்க் கந்தா
மண்ணில் அன்பே மாற்று.

மாறும் நெஞ்சில் மையல் உன்மேல்
சேரும் மாறென் சிந்தை மாற்று
காரென் றெம்மைக் காத்து.

விண்ணோர் வாழ்வை வேண்டின் மண்ணில்
பொன்னை ஈதல் போலே பின்னும்
கண்ணைத் தானம் செய்.

நல்லார் அல்லார் எல்லாம் சொல்லும்
சொல்லால் ஆகும் தீச்சொல் தீயாய்க்
கொல்லச் சேரும் தாழ்வு.

Wednesday, November 24, 2010

ஊழல்

கறுப்புப் பணத்தைக் கடிதே பெருக்கும்

இருக்கையை வேண்டியே ஏய்க்கும் - வருத்தி

அடுத்துக் கெடுக்கும் அரையிலோ வெள்ளை

உடுத்தி இருக்குமாம் ஊழல்.

வாழ்த்து

சமீபத்தில் இல்லச் சுமையை இனிதாய் ஏற்றுக் கொண்ட

வெண்பா வலை நண்பர் திரு வசந்த குமாருக்கு!

சொல்வளர் செல்வன் வசந்த குமாருடன்
சொல்லிற் சுவையென சுந்தரி ஹேமலதா
இல்லறந் தன்னில் இணைந்திட்டார் வாழ்த்திடுவோம்
நல்லறங் காப்பீர் நயந்து.


முனைவர். திரு குணசீலன் அவர்களுக்கு

சொல்வளங் கொண்டத் தோழர் குணசீலன்
நல்லிணை யாக நங்கை அருணா
இல்லறம் இனிக்க இணைந்தார்
பல்வளம் பெருக
நல்லுளம் கொண்டோர் வாழ்த்த
நல்லன யாவும் நாளும் நிறைகவே!

Saturday, September 18, 2010

மண்ணிலே மழையென

பொன்னெழில் வெண்ணிலா பெண்ணாய்
என்னெதிர் வந்தனள் நீண்ட
கண்ணிலே காதலைக் கண்டேன்
என்னுயிர்த் தன்னையே தந்தேன்!

கண்வழி உயிரிடம் மாற
அன்பினால் மனங்கலந் திட்ட
பின்னரிவ் வெக்கமேன் பெண்ணே
மண்ணிலே மழையெனச் சேராய்!


விளம் விளம் தேமா =எனும் தளையமைப்பைக் கொண்ட வஞ்சிமண்டிலம். 

மண்ணிலே மார்கழி நாளே!

கண்ணனைப் பாடிடுங் கூட்டம்
கன்னியர் வரைந்திடுங் கோலம்
தண்ணெனக் குளிர்ந்திடும் காலை
மண்ணிலே மார்கழி நாளே!


விளம் விளம் தேமா =எனும் தளையமைப்பைக் கொண்ட வஞ்சிமண்டிலம்.

கோதையின் திருப்பாவை அமுதம்.

பண்ணிலே பக்தியைக் கூட்டி
கண்ணனைப் போற்றியே கோதை
அன்புடன் சாற்றிய பாவை
பொன்னிலே பதித்தநற் முத்தே!


விளம் விளம் தேமா =எனும் தளையமைப்பைக் கொண்ட வஞ்சிமண்டிலம்.

Saturday, September 04, 2010

குறளின் நன்மை.

மெல்லிய மலர்களில் தேனும்
கல்லினுள் சிலையது போலும்
சொல்லிலே தீஞ்சுவை சேர்த்த
வள்ளுவன் குறளினில் நன்மை!
 
விளம் விளம் தேமா எனும் தளையமைப்பைக் கொண்ட வஞ்சிமண்டிலம்.

Saturday, August 28, 2010

சுயநலம்

கல்லாய் மனத்தினை கடிதாக்கி
சொல்லால் தீயெனச் சுட்டெரிக்கும்
பொல்லா நோயது சுயநலம்போல்
கொல்லும் மற்றெதும் அறிவீரோ?


மா + விளம் + காய் = எனும் தளையமைப்பைக் கொண்ட வஞ்சிமண்டிலம்.

தன்னம்பிக்கை

சற்றுன் மனத்திருள் நீயகற்றி
பற்றென் கைகளை பயம்விலக்கி
கற்றுத் தெளிந்திடுன் நம்பிக்கை
உற்ற துணையுனை உயர்த்திடுவேன்!

மா + விளம் + காய் = எனும் தளையமைப்பைக் கொண்ட வஞ்சிமண்டிலம்.

தெரிந்துச் செயல்படு

உரிமையும் கடமையும் உணர்ந்திடுவாய்
அறிவுடன் அன்பையும் கூட்டிடுவாய்
பெரியவர் சிறியவர் செய்கையினால்
தெரிந்துநீ செயல்படு சிறப்படைவாய்.

விளம் + விளம் + காய் என்ற தளையமைப்பைக் கொண்ட வஞ்சி மண்டிலம்.

Wednesday, August 25, 2010

தமிழ் வாழ்க!

 ஓர் மராத்திய பெண் தமிழை தன் இரண்டாவது மொழியாக விரும்பி ஏற்று கற்று [தமிழர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு இரண்டாவது மொழியாகக்கூட தமிழ் கற்பிக்காமல் ஹிந்தி, சமஸ்கிருதம் கற்பிக்கும் இக்கால கட்டத்தில்] அதில் பல பரிசுகளும் சிறப்புகளும்  பெற்றிருப்பது பாராட்டக்கூடியது. முண்டாசு கவிஞன் பாரதியையும் திருக்குறளையும் நன்றாக அறிந்த அவர் பாரதியை பற்றிக்கூறும் கருத்துகள் உண்மை பொதிந்தவை. பல மலிவான சுய முன்னேற்ற நூல்கள் விற்பனையில் சாதிக்கும் இன்று பாரதியின் கவிதைகளை சுய முன்னேற்றத்திற்கு ஒவ்வொரு இளைஞனும் பயன் படுத்துவானேயாயின் எவ்வளவு பலன் கிடைக்கும். அடிமை இந்தியாவில் பிறந்த பாரதி இன்று சுதந்திர நாட்டில் இருந்திருந்தால்?? ஆஹா 2020 என்ன 2000 லேயே நாம் வல்லரசாகியிருப்போம். சிறந்த கருத்துகளும் தெளிவான பேச்சும் கொண்ட
செல்வி ஜெயஸ்ரீயை வாழ்த்துவோம், வாருங்கள்.
திரு.சீனிவாசன் அவர்களின் இப் பதிவை தமிழார்வமுள்ள அனைவரும் கண்டிப்பாக படிக்கவும். ஒலி நாடாவையும் கேட்கவும்.http://vetripadigal.blogspot.com/2008/04/blog-post_03.html

Tuesday, July 27, 2010

பாதை நமதே பயணம் நமதே!

 தரவுக் கொச்சகக் கலிப்பா
காய்+காய்+காய்+காய்

கற்பதுவும் கேட்பதுவும் கருத்தினிலே தெளிவுறவே,

மற்றவரின் சிந்தனையை மறுத்திடவும் அன்றியதே

முற்றெனவும் முடிந்திடாதுன் எண்ணத்தைச் சீராக்கி

உற்றதொரு நல்வழியை உனதாக்கி நடப்பாயே!

உண்மையின்பம்

தரவுக் கொச்சகக் கலிப்பா
[காய் காய் காய் காய்]


நேரல்லார் பெருஞ்செல்வம் நிலைக்காதே உடற்புண்ணில்

கூரான விரல்நகத்தால் குறுதியுறத் தேய்ப்பதற்கே

நேராகும்; நல்வழியின் நீங்காதார் சேர்பொருளோ

ஊரார்க்கும் உதவிடுமே உண்மையின்பம் தாந்தருமே!

Wednesday, July 14, 2010

நெஞ்சில் தைக்குமே முள்.

வெண்தாழிசை

கொஞ்சும் தமிழைக் குறைசொலிப் பேசி
நஞ்செனிப் பிறமொழி நயப்பார் தம்மால்
நெஞ்சில் தைக்குமே முள்.

[1. இது ஒரு மூன்றடிப்பாடல்.

முதல் இரண்டு அடிகளும் நான்குசீர் அடிகள்.
மூன்றாம் அடி மூன்று சீர் அடி.
2. மூன்றடிகளும் ஒரே எதுகை பெற்று வரவேண்டும்.
3. கடைசி சீர் ஓரசைச் சீராக நாள், மலர், காசு, பிறப்பு என்ற வாய்பாட்டில் வரவேண்டும்.
4. கடைசிச்சீர் தவிர மற்ற சீர்கள் ஈரசைச் சீர்கள்.

சிரித்து வாழ வேண்டும்.

வெண்செந்துறை [ ஆறு சீர்கள்]

1.பட்டுச் சிறகை விரித்துப்
பறக்கும் அழகைப் பாரு
சிட்டைப் போலே நீயும்
சிரித்து வாழப் பழகு!.

2. ஓடி யாட வேண்டும்
உண்மை பேச வேண்டும்
கூடி வாழ மற்றோர்
குறைகள் மறக்க வேண்டும்!

3. தேடிப் பெற்ற பொருளை
சேர்த்துக் குவித்தி டாமல்
வாடும் ஏழை மக்கள்
வறுமைப் போக்க ஈவாய்!

நல்லோர் நட்பு.

எண்சீர் வெண்செந்துறை






காசு பணத்தால் விளையும் நன்மை


கையில் உள்ள வரைதான் உண்மை


நேசங் கொண்ட நல்லோர் நட்போ


நிலைத்த யின்பம் நிச்சயந் தருமே!

Wednesday, June 23, 2010

வெண்செந்துறை

1. ஓரடியில் நான்கு அல்லது ஆறு அல்லது எட்டுச் சீர் வரலாம்.
2. ஒவ்வொரு சீரும் இரண்டு அசைச் சீராக இருக்க வேண்டும்.
3. இரண்டு அடிகள் எழுத வேண்டும்; இரண்டு அடிகளும் அளவு ஒத்து ( நான்கு அல்லது ஆறு அல்லது எட்டுச்சீரில் அமைந்து) இருக்க வேண்டும்.
4. இரண்டு அடியும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும்.
5. நாற்சீர் அடியானால், 1, 3ஆம் சீரில் மோனையும்
ஆறு சீர் அடியானால், 1, 4ஆம் சீரில் மோனையும்
எட்டுச் சீர் அடியானால் 1, 5ஆம் சீரில் மோனையும் அமைய வேண்டும்.


அன்புடை இல்லாள் அகத்திடை இருக்க
வண்டதைப் போலே வாழ்வதைத் தவிர்ப்பீர்.

ஒருமுறை தவறி ஒருபொய் சொல்ல
மறைக்கவோ ஆயிரம் மனமழிந் திடுமே!

அஞ்சுதல் பொய்ச்சொலல் அழுதுப் புலம்பல்
கெஞ்சுதல் யாவுமே கீழோர்ச் செயலாம்.

[திரு.தமிழநம்பி அவர்கள் தமிழ்த் தோட்டத்தில் மரபுப் பா பயிலரங்கத்தில் பா எழுத முதலிலிருந்து சொல்லித் தருகிறார். ஆர்வமுள்ளவர்கள் கண்டிப்பாக வந்து பயன் பெறவும்.]

Monday, May 31, 2010

கலிமண்டிலம்

தேமாங்காய் + தேமா + புளிமாங்காய் + தேமா +
புளிமாங்காய் + தேமா + புளிமா

வில்லோடு நாணும் விரைந்தேவும் அம்பும்
இருந்தாக வேண்டும் விடுக்க
சொல்லோடு அன்றி செயலாற்ற, நேர்மை
திறனோடு வேண்டும் சுடுசொல்
இல்லாத பேச்சு இணையான கூட்டு
நலியாத நல்ல இலக்கும்
பொல்லாங்குச் சொல்லும் பகையோரை வென்று
புறம்போகச் செய்யும் துணிவும்
குறிலீற்றுமா + கூவிளம் + குறிலீற்றுமா + கூவிளம்.



சொல்லில் நல்லறம் சூழ தீயதைக்
கொல்லும் நெஞ்சுரம் கூட்டி நேர்வழிச்
செல்ல வாழ்விலே சிறப்பும் செல்வமும்
நல்ல யாவையும் நாடி ஏய்துமே!