Friday, July 06, 2007

எங்கள் வீட்டில் கிருஷ்ண ஜெயந்தி

சீக்கிரமாய் விட்டுவிட்டதால்
பள்ளியிலிருந்து குழந்தைகளை கூட்டிக் கொண்டு
வரும் வழியில்ல் 'கிருஷ்ணா ஸ்வீட்ஸ்'
சீடையும் முறுக்கும்
'ஸ்பெஷல் பாக்' வாங்கிக் கொண்டு
அரைலிட்டர் பால் பாக்கெட்டோடு
உள்ளே நுழைந்தது
எங்கள் வீட்டில் கிருஷ்ண ஜெயந்தி...

கண்ணா ஷு வை ஓரமாய் வை..
குளி,யூனிபார்ம் மாற்று என்ற
வழக்கமான அர்ச்சனையோடு
ஆரம்பமானது பண்டிகை...

பிஞ்சு விரல்களால் நெற்றியிலிட்ட விபூதி
கண்ணக்குழிவிலும் மூக்கு நுனியிலும் சிதற
குழந்தைக்கண்ணன் ரெடியாகி விட்டான்...

அவனுக்குத் தெரியும்
இன்று விசேஷமென...

பள்ளியிலிருந்து திரும்பும் சாயங்கால வேளைகளில்
வீட்டில் அம்மாவும் சூடான பாலும் டிபனும்
விசேஷம் அவனுக்கு...

அரைடம்பளர் காபியோடு
அவசரக் கோலமும் குளியலும் முடிந்து
'ஆண்டவா' என நின்றப் போது
கோபந்தான் அவன்மேல் சிறிது

அழித்து விட்ட ஒரு கம்சனைப்போல்
அழிக்காதுவிட்ட ஆயிரம் கம்சன்களுக்காக
எந்த யுகத்தில் தான் நீ சம்பவிக்கப்போகிறாய்
என அரை மனதில் யோசித்தாலுமா

எங்கள் வீடுகளில்
குட்டி குட்டிக் குழந்தைகளாய
என்றும் அவதரித்து
புதிது புதிதாய் குறும்பு செய்யும் அவனை
கோபிக்கவும் முடியாமல்

'நெட்டில்' தேடி பிடித்து
மகாராஜபுரம் சந்தானமும்
உண்ணிக்கிருஷ்ணணும்
உருகி உருகி
'ஆடாது அசங்காது வா...கண்ணா....'
என்றழைக்க

என் மடியில்
எங்கள் வீட்டு குட்டிக்கிருஷ்ணன்
மூடிய கைகளில்
முறுக்கும் சீடையுமாய்..
அம்மா 'ஓவரா சாப்பிடலாமா' என கேட்க
கண்ணனுக்கு நைவேதியமும் ஆனது....




Friday, June 29, 2007

வெயில்

குழந்தைகளின் அதிகப்பிரசங்கித்தனம்
பெரியவர்களின் பொறாமை
அம்மாக்களின் சுயநலம்
அப்பாக்களின் கஞ்சத்தனம்
சான்றோரின் பொய்
தொழிலாளியின் சோம்பல்
பணக்காரனின் நீச்சத்தனம்
ஏழைகளின் சுயவிரக்கம்
ஆண்களின் அதிகாரம்
பெண்களின் புலம்பல்
பிச்சைக்காரர்களின் நச்சரிப்பு
பொதுக்குழாயில் சச்சரவு
இவைப்போன்று எரிச்சலூட்டக்கூடியது
மே மாத கத்தரி வெயில்

கண்ணங்குழிந்த குழந்தை முகம்
பெரியவர்களின் அரவணைப்பு
அம்மாவின் மடி
அப்பாவின் கைப்பிடி
ஆண்களின் நேசம்
பெண்களின் புன்னகை
இப்படி இதம் தரக்கூடியது
தெருவோர ஆலமர நிழல்....

பாட்டிகள் மாறிவிட்டார்கள்

அந்தக் காலம்
அங்கலாய்க்கிறாள் பாட்டி
எதிரில் நின்றிருப்போமா
எதிர்த்து பேசியிருப்போமா?
சொன்னதை செய்து
கொடுத்ததை சாப்பிட்டோம்....

ஆம்
அது அந்தக் காலம்
நடுங்கும் விரல்களால்
அழுந்த எண்ணெய்த்தடவி
பின்னிவிடும் வேளையில்
பலப்பல கதைகள் சொல்லி
சுரம் காண்ட நேரத்தில்
மிளகு ரசம் சுட்ட அப்பளம்
பண்டிகை காலத்தில்
சீடை கைமுருக்கு
அதிரசம் போளி
அத்தனையும் செய்து கொடுத்து
சட்டி சோற்றையும்
கட்டித் தயிர்விட்டு பிசைந்து
கைகளில் குழித்து விட்டு
வத்தல் குழம்புபோடு
வகையாய் உண்ணவைத்து
வெண்டைக்காய் கத்தரிக்காய்
பாவக்காய் ஆனாலும்
பக்குவமாய் சமையல் செய்து
பாசமாக பரிமாறி

விளையாட்டாய் வேலைவாங்கி
வேடிக்கையாய் சொல்லிக்கொடுத்தது
எல்லாம் அந்தக்காலம்

'லேஸ்' சிப்ஸ் வாங்கி தந்து
குழந்தைகளின் வாயடைத்து
'பந்தம்' 'பாசம்''நிம்மதி'
பார்க்கும் பாட்டிகள்
சொன்னால்
எந்த வேலையும் செய்வதில்லை
இந்தக்காலக் குழந்தைகள்.....

Monday, March 19, 2007

பெண்கள் கும்மி


கும்மியடி பெண்ணே கும்மியடி வளை
குலுங்கிட கைக் கொட்டி கும்மியடி
பாரதி கண்ட பெண்ணுலகை நேரில்
பார்த்திட வேணுமென கும்மியடி...

பெண்ணுக்கு பெண்ணே பகை யெனவே
பேசி பேசியே பகை வளர்த்தார்
அத்தனைச் சொல்லையும் தூக்கிலிட்டே நாம்
அனைவரும் ஒன்றாய் கூடிடுவோம்

கற்பனை காவியம் இலக்கியம் நாடகம்
இக்கால கணிணி என்றெதிலும்
எங்களின் கால்தடம் பதித்துவிட்டோம் தூர
தேசத்திலும் கூட பெயரெடுத்தோம்

குடும்ப நலனிலும் குறையுமில்லை கொண்ட
கணவன் மனமும் கசந்ததில்லை
பிள்ளை படிப்பிலும் தேக்கமில்லை கூட
இருப்பவர் யாரும் பகையுமில்லை

உணவு உடைத் தோற்றம் என்றெதிலும்
மாற்றங்கள் ஆயிரம் கண்டதுண்டு தாய்
உள்ளத்தில் மாற்றங்கள் கண்டதில்லை
தமிழ் பண்பையும் நாங்கள் மறந்ததில்லை

நேர்மையுண்டு நெஞ்சில் ஈரமுண்டு
திறமை யுண்டு திட எண்ணமுண்டு
வாய்மை கொண்டு செய்யும் தொழிலெதிலும்
சக்தி துணையுமுண்டு வெற்றி காண்பதுண்டு

கட்டிய இறக்கைகள் கட்ட விழ்ந்தே
விட்டன வானில் பறந்து விட்டோம்
எட்டிப் பிடிப்பவர் யாருமில்லை எங்கள்
பாதையில் தடைகள் ஏதுமில்லை
...............வேறு...............................................................
எத்தனை நன்மைகள் பெற்றாலும் பெண்கள்
ஒடுக்கப் படுவது இன்று முண்டு
எண்ணெய் அடுப்புகள் எரிவதுண்டு இங்கே
பெண்கரு கருவிலே கலைவ துண்டு

என்றைக்கு இந்நிலை மாறிடுமோ சமுதாய
ஏற்றத் தாழ்வுகள் மறைந்திடுமோ
இன்றைக்கே பெண்நிலை உயர்ந்திடவே
ஏற்றுக் கொள்வோம் சபத மொன்று...

பிறந்த நாள் பரிசு.

பாலுண்ணும் பிள்ளைக்கு பரிசாக்க வேண்டும்
தோதாக ஏதிருக்கு பரிசாக நான் தர

பச்சை புல்வெளியில்லை
பரந்து நிற்கும் வயலில்லை
சுற்றி தோட்டமிட்டு வற்றாத நதியருகே
எட்டாத உயரத்தில் கட்டாக பரணமைத்து
கட்டாத என் மனக்கோட்டை
காலூன்ற வழியில்லை

பச்சைத் தண்ணீரும்
பகிர்ந்துண்ண வேண்டும் நீ

ஆலும் வேலும் இங்கில்லை
அன்னைப்பாலும் சத்தில்லை

முயன்றே விடவேண்டும் மூச்சிங்கே

நேராக எதுவுமில்லை
தோதாக பரிசுனக்கு
நான் தர பூமியிலே

ஆனாலும் சொல்லிடுவேன் கேளாய் என்மகனே
நீயாக நினைத்தால் மாற்றிடலாம் இஃதையெல்லாம்
கருத்தாக ஓர்மரம் மண்தொட்ட இந்நாளில்
விளையாட்டாய் வைத்திட்டால்
விதையாகும் உன் உழைப்பு
வேங்கையாகும் வெற்றி


சோர்வாக வேண்டாம் சொல்லிடுவேன் மகனே கேள்
ஓசோனின் ஓட்டையையும் ஒட்டிவிடும் அறிவுண்டு
இங்கே
உன்கையில் உலகத்தை கொண்டுவரும் கண்ணி உண்டு
வெண்ணிலாவில் கால்வைத்து
வெட்டவெளி நடை நடந்து
பெண்டீரும் வெல்வதனால்
உண்டாகும் நன்மை பல உன்நாளில்
செவ்வாயில் குடியேறும்
திறம் கொண்டு அந்நாளில்
தேர்ந்ததொரு தொழிற்நுட்ப பயிற்சியாலே
வரலாறு திரும்பிடவே
மும்மாரி பொழிவதனால்
மூன்று போகம் விளைவித்து
முக்கனியின் சாறும் தேனும் பாலும் கற்கண்டும்

கலந்து வரும் காவிரியின்
பொங்கிவரும் புனலருகே
பூத்த ஒருசோலையிலே
அத்தரும் சந்தனமும் ஜவ்வாதும் மணந்திருக்க
ஆங்காங்கே முத்தும் பவளமும் மாணிக்கமும் மலர்ந்திருக்க
அறிவிற் சிறந்த பெண்டீரும்
அவர்க்கேற்ற ஆடவரும்
ஆனந்தமாய் களித்திருக்க
அத்தணையும் டிஜிட்டலில் அழகாக பதிவாக
கம்ப்யூட்டரில் விளையாடி கைக்கடுத்த குழந்தைகள்
காவிரியில் புனலாட கம்ப்யூட்டரில் பதிவாகி
கனடாவில் நண்பர்களும்
கண்டுக்களித்ததனை ஏக்கத்தோடு
'நயாகரா' வும் தோற்றுவிடும்
நலத்தோடு நந்தவனந்தன்னில்
"நடந்தாய் வாழி காவேரி" என
நயமாக மெயில் அனுப்ப

நடக்கும் அத்தனையும் நடந்தே தீரும்
நம்பிக்கை நம்பிக்கை நம்பிக்கை
இஃதே நானுனக்குத் தரும் பரிசாகும்

வளமான வாழ்வுனக்கு வந்துசேரும் நாள்வரையில்
உரைத்திடுவேன் ஓர் சபதம்
மக்காத பிளாஸ்டிக், ரப்பர், கண்ணாடி
மண்ணில் புதையுறவேமாட்டாதொழிப்பேன்
கண்ட இடத்தில் எச்சிலும் குப்பையும் கொட்டி
காற்றையும் வீணாக்க மாட்டேன் உறுதி

தயங்காது செய்வீர் இதனை
பிள்ளையைப் பெற்றோர்
பொறுப்பு நமக்கதிகம் புரிந்தே கொள்வீர்

நீர் நிலம் தீ நீ...

இல்லாதான் இருப்பவன்
கொடுப்பவன் கெடுப்பவன்
ஞானி மூடன்
அனைவரையும்
ஒன்றாகவே தாங்கும் நிலம்...

பசித்தவனின்
பிச்சை முட்டையையும்
பணக்காரனின்
கோழியையும்
ஒன்றாகவே சமைக்கும் தீ...

பிறந்த சிசுவையும்
பெற்றவன் சவத்தையும்
ஒன்றாகவே கழுவும் நீர்...

பெருந் தவத்தோனாயினும்
கொடுஞ் சினத்தோனாயினும்
குழந்தையாயினும்
கிழவனாயினும்
ஒரே சீராக
உள்சென்று வெளிவந்து
ஓர் நாளில்நின்றுவிடும் மூச்சு...

புல்லாகினும்
புழுவாகினும்
பெரியதொரு விலங்காகினும்
மரமாகினும்
மனிதனாகினும்
அவணியில் ஓர் அணுவாகினும்
அணைத்திலும் அவனையே காண்பது
சார்பகற்றி நேர்நின்ற
சான்றோன் மனது...

Saturday, February 03, 2007

மாலையில்
கெஞ்சலும்
இரவில்
கொங்சலும்
காலையில்
அலுவலில்
மறந்தே போனது..
மறுபடி வந்தது
மாலை
நினைவில் வந்தது
கெஞ்சலும் கொஞ்சலும்..
சிரித்தும்
மகிழ்ந்தும்
கடந்த நாட்களில்
ஒரு நாள் மாலை
வந்தது ஊடல்..
மறுநாள் அலுவலில்
கையும் ஓடலை
காலும் ஓடலை..
மாலைவரை
காத்திருக்க
மனமும் விடவில்லை..
தொலைபேசி
சினுங்கியது
கணவன் காலிங்.... ....
மறுமுனை
அழுதது
மனைவி க்ரையிங்.... ....?
மாலையில்
கெஞ்சலும்
இரவில்
கொஞ்சலும்
காலையில்
அலுவலில்
மறந்தே போனது...

மீண்டும் வேண்டும் ஓர் உயிர்ப்பு

கருவாய் உன்னுள்
நான் காலந்தபோது
அந்த
இருட்டுச் சிறையில்
இருந்த சுதந்திரம்

வெளிச்ச வெளியில்
வெட்டப்பட்ட சிறகுகளாய்...

மடிகிடந்து
மார்பணைத்து
கழுத்து வளைவில்
முகம் புதைத்து
கண்ணங்குழிய
கண்ட என் கனவு

பஞ்சு மெத்தை தலையணையில்
எட்டாகனியாய்
வட்ட மாத்திரைக்குள்...

அறியா பருவத்தில்
உணரா இனிமைகள்

காலம் கடந்து
தூங்கா என்
கண்களில்
எழுதா கவிதைகளாய்...

கனவு மெய்ப்பட
வேண்டும்
ஓர் உயிர்ப்பு
உன்னுள் கருவாய்
மறுபடியும்...

Wednesday, January 31, 2007

TN 22 Z 9326

கையிருப்பைக்
கரைத்து
என் காலுக்கு
ஓய்வளிக்க
கருப்புக்குதிரையாய்
என் வீட்டில் நீ...

கொஞ்சமாய்க்
கொண்டு
அதிகமாய்
கொடுத்தாய் மைலேஜ்...

'சாம்ப்'
உன் பொதுப்பெயர்...
'TN 22 Z 9326'
உன் சொந்த பெயர்...

ஓய்வு பெரும்
தொழிளாளிக்கு
உண்டாகும்
ஓர் ஈர்ப்பு..
தொழிற்சாலைமேல்...

ஆனால்,
உனக்காக
கலங்குவதோ
உன் அதிகாரி...

நீயோ,
வேண்டுதல் வேண்டாமை
இல்லாதவனாய்
அடுத்த
உன் எஜமானிக்கான
உழைப்போடு....


Monday, January 29, 2007

பாரதம்


இரவில் வாங்கிய
விடியல்
எங்கள் விவேகத்தின்
வெளிச்சம்...

எங்கள் கொடியை
உயர்த்தவே
'குமரன்' கள் நாங்கள்
கொலையுண்டோம்...

மாற்றானுடையதை
மிதிக்க அல்ல
மறுக்கவே
ஆசைப்பட்டோம்...

இறக்கப் படாமல் இறங்கிய
கொடியின்
இடத்தை பற்றியது
ஏற்றாத போதும்
எங்கள் உள்ளத்தின்
உச்சியில் பறந்த
எம் கொடி

இன்னா செய்தார்க்கு
நாண
நன்னயம் செய்யும்
நோக்கு அது...

பெற்ற பிள்ளைக்கு
பால் என்ன
பழஞ்சோறும்
புகட்டாதாள் எம்
பாரதத்தாய்...

என்றாலும்
பிச்சை வாழ்க்கை
அச்ச உணர்வை
ஊடட்வில்லை எங்கள்
உதிரத்தில்...

அத்து விட்டது
விலங்கு - ஆக
பெற்றுவிட்டோம்
புதுவாழ்வு...

கட்டிவிட்டோம்
மனக்கோவில்...

அங்கே....

ஜாதி பேய்களை
கொண்று
மத பேதங்கள்ற்ற
ஓர்வாயில்...

காமங்கள் குரோதங்கள்
விட்டு
கடன் தொல்லை
அழித்ததோர் வாயில்...

பட்டப் பகலில்
கொள்ளை மற்றும்
பட்டினிச் சாவுமிங்கில்லை
என
பறைச்சாற்றி
நிக்குதோர் வாயில்...

திறந்து கிடக்குதோர்
வாயிலாங்கே
திறமையுள்ளோர்
எல்லோர்க்கும்
வேலை...

நட்ட நடுவினில்
எம் நாடு
பச்சை பசுமை
போர்த்த பூங்காடு...

பூக்களின் நடுவினில்
புதுநங்கை நல்லாள்
பட்டத்துன்பங்கள்
மறந்துவிட்டாள்
பந்தைபிடித்தே
ஆடுகின்றாள்
பாடுகின்றாள் எங்கள்
பாரதத்தாய்...






Saturday, January 27, 2007

சின்ன சின்னக் கவிதைகள்


.............பிளாட்

மரங்களின் வேர்ப்பிடுங்கி
கட்டப்பட்ட
கூண்டிற்க்குள்
அடைப்பட்ட மனிதன்
புலம்புகிறான்
"காற்றே இல்லை" என

சிறைப்பட்ட காற்றோ
நகரவும் முடியாமல்
கண்ணீர் வடிக்கிறது
'நண்பணின்' கல்லறையில்...

............மரக்கதவு

ஒளி பெற்ற
கண்களை
காணத்துடிக்கும்
இறந்தவனின்
தாய்ப் போல
தென்றல் தவழ்கிறது
மரக்கதவுகளில்....


.............மழை

மேகம் பார்த்த வண்ணமயில்
தோகை விரித்து சிரித்தாட
வானம் பார்த்த விவசாயி
வாடிய நெஞ்சம் மகிழ்ந்தாட
ஊர்தி பார்த்து காத்திருந்த
ஊர்மக்கள் பட்டணத்தில்
ஒரு தொல்லை ஒழிந்ததென
ஒவ்வொரு குடமாய் ஒளித்துவைக்க
வெடித்த நிலமும் வளமைபெற
கருத்த மேகம் தந்ததம்மா
தரணியில் எங்கும் மழை மழை...


Wednesday, January 17, 2007

சுனாமி கவிதை

.................ஐயோ பாரதீ.......
நெரித்த கடலிடை என்ன கண்டிட்டாய்
நீல விசும்பிடை என்ன கண்டிட்டாய்
........ ..... .... .............
...ஈர மணலிடை நின் முகம் கண்டேன்
...உயிரைப் பறித்த கடலிடை
...நின் முகம் கண்டேன்
ஐயோ பாரதீ......
...எங்கும் காணவில்லையே உன்னை
...நீயாக நினைத்து
...ஆயிரம் பேருக்கு காரியம் செய்யும்
...உன் அன்புக்காதலன்....

தலைப் பொங்கல்




மஞ்சள் பூசி நீராடி
...மனதை தூய்மையாக்கி
புத்தாடை உடுத்தி
...புதுமஞ்சள் கட்டிவைத்து
பூவைத்து பூஜித்து
...புதுமனையாள் பொங்கலிட
பூத்துவரும் நன்னாளில்
...தலைப்பொங்கல் திருநாளில்
வாழ்த்திவிட எண்ணுகின்றோம்
..."வாழ்க நீ, பகலவன் போல்
....பார்புகழ பலகாலம்"

பொங்கல் திருநாள்

வாசல் தெளித்து
வண்ணக் கோலமிட்டு
நீராடி, நெஞ்சை
நேராக்கி, நித்தம்
போராடும் உழவர்
பெருவாழ்வு பெற்றிடவே
புத்தாடை உடுத்தி
புதுப்பானை பொங்கலிட்டு
போற்றிடுவோம் ஞாயிற்றை
புவனம் காத்திடவே...

சரஸ்வதி துதி

சிரித்த முகமும் செவ்வரி கண்களும்
செந்தேன் இதழும் வெண்தா மரையும்
வீணையும் ஓலையும் வெண்முத்து மாலையும்
சூடிடும் தேவியை நாடிடு மனமே...
------------
காரிருள் கூந்தல் அலையென ஆகும்
இருவிண் மீன்கள் கண்ணென ஆகும்
கோவைச் செவ்விதழ் தேனென இனிக்கும்
தேவியின் தேகம் தண்ணொளி நிலவு...
...............
நெஞ்சம் தாமரை நினைவுகள் பூமழைத்
தூவிடும் நேரம் பாயிரம் ஆகும்
வேணியை துதித்திட வேண்டும்வரம் கிடைக்கும்
ஆனந்தம் தருமே அவள்திரு நாமம்...
...............
செந்தமிழ் வளர்க்கும் இயலிசை அறியும்
அன்னையின் அருளே அறிவினை அளிக்கும்
தேவரும் போற்றும் அவள் திருப் பாதம்
துதித்துநீ மனமே துயர்களை வாயே...
...............

Saturday, November 18, 2006

கலைந்த கனவு

அழகான மலை
ஆழமான பள்ளத்தாக்கு
அற்புதமான மாலை நேரம்
பசுமையான புல்வெளி
பக்கத்தில்
நீ மட்டும்
ப்பூ....
கட்டிலில் கொசு...

துணுக்குக் கவிதைகள்


அவ்வப்போது தோன்றியப்போது எழுதிய குட்டிக்குட்டிக்கவிதைகள்

"குழந்தை" பருவம்

கரிய வண்டின் வண்ணமோ
கண்ணில் வந்து நின்றதோ...
கோவைப்பழம் நாணுமோ
கொஞ்சும் வாய்ச் சிவப்பிலே
பட்டு மேனி மென்மையில்
பூவைக்கூட மிஞ்சுமோ...
பிஞ்சுக் கால்கள் நடக்கவே
பூமி வரம் பெற்றதோ

சிட்டுக் குருவிக் கூட்டமோ
சின்னப் பூக்கள் பேசுமோ
கோவை யிதழ் ஒலியிலே
குயிலின் ஓசை கேட்குமோ
மழலை கூட்டம் நடக்கையில்
மயிலும் பாடம் கற்குமோ
கொஞ்சி நடம் ஆடுமோ
கூடத் தாளம் போடுமோ...

பள்ளிப் பருவம்

சின்னச் சின்னக் கைகளில்
சிறுமைத் தனம் இல்லையே
வண்ண வண்ணக் கண்களில்
வன்மை என்றும் இல்லையே
பஞ்சுப் போன்ற நெஞ்சிலே
பகைமை தெரிவ தில்லையே
பள்ளிக் கூட நாட்களில்
பார்க்கும் யாவும் நன்மையே...

தாய் வீடு


முகம் துடைத்து பொட்டிட்டு
'பொன்னம்மாள்' வந்து விட்டால்
பூ வாங்கித் தலைச் சூடி
எனக்காக சிறிது நேரம்

சூடாறிப் போனதென்றாலும்
சுவைத்து சாப்பிட
எனக்காக சிறிது நேரம்

வேலை முடிந்து வீடு திரும்புகையில்
அயர்ந்து தூங்க அரைமணி நேரம்
எனக்கே எனக்காக - ஆம்
இரயில் பயணம் எனக்கு
தாய் வீடுதான்.

சென்னை sub urban இரயிலில் வேலைக்காக பயணிக்கும் ஒவ்வொரு பெண்ணும் ஆமோதிக்கும் விஷயமிது.

பட்டணத்தில் மழை


சென்னையில் தண்ணீர் கஷ்டம் தெரியுமா உங்களுக்கு?பத்து வருடாமாய் போதியமழையின்மை, இரண்டு வருடமாய் அதிகபடியான மாமழை,ஆனாலும் சென்னை, சென்னைதான்...

காட்டுப் பக்கம் தண்ணீர் இல்லை
நாட்டுப் பக்கம் வந்த மயில் - தன்
தோகைப் பழக்கம் மறவா திருக்க
விரித்து ஆடிப் பழகு கையில்
பார்த்து விட்ட மழை மேகம்
பட்டணத்து மக்களிடம் பகைமை மறக்க
மண்ணில் உதித்ததோர் உயிர்த்துளி...



பச்சை மஞ்சள் சிவப்பு
வரிசையாய்...
காத்திருக்கிறது
தண்ணீர் லாரி....

உன்னில் நான்



இரு விழிப்பார்த்து
இதய வாசல்
திறந்து வைத்தேன்
இறுக்கமான என் இதயத்தின்
நுணுக்கமான ஓர் இடத்தை
நீ தொட்டுவிட்டாய்
குடிப்புகுந்த வீட்டை
கொள்ளைக் கொண்டே போனாய்
தேடி அலைந்ததில்
கிடைத்தது
என்னில் உன் இதயம்...

Friday, November 17, 2006

சுனாமி கவிதைகள்


ஜெயித்த பூதகி

கடலே !
நீ பாதகி!
ஜெயித்த பூதகி!

ஆயிரமாயிரம் மீனவர்க்கு
அமுதூட்டுவதாய் அணைத்து
அழித்தப் பாதகி...
ஜெயித்த பூதகி...


நிலவே
நீ பொய்
உன் ஒளி பொய்
கடலோடு கலந்த
உன் மோகனம் பொய்
உன்னில் லயித்த எங்கள்
இன்பம் பொய்

உண்மை....
நேற்றய கனவு
இன்றில்லா
வெறுமை...
நேற்றய இன்பம்
இன்றில்லா
துன்பம்...

நன்மை...
புதைந்து போன
சேற்றிலே
புதிதாய் முளைத்த
மனிதநேயச் செடி...

நம்பிக்கை மலர்கள்
பூக்க
நேற்றையச்சோகம்
நாளைய
வரலாறாகும்...

Monday, October 02, 2006

பயணம்

சந்தோஷங்கள்
சிறுகைதட்டல்கள்
இவை
தாமத படுத்தும்
வேகத்தடைகள்..

பாரங்களாகும்
பாராட்டுகள்..

வெற்றிகளோ
பயணம் தடுக்கும்
பெரும் பள்ளங்கள்..

முயற்சியின் வேகத்தில்
சிகரங்கள் கடக்கும்
பயணத்தில்
தோல்விகளே
என்னை
துரிதபடுத்தும்..

காயங்களே
என்னை
கட்டாயப்படுத்தும்
காரியமாற்ற..

கண்ணீரே
தண்ணீராகும்
துவண்ட நெஞ்சம்
தளிர்விட..

தன்னம்பிக்கை
துணைவர
இமயங்கள் தாண்டியும்
பயணிக்கும்
என் மனம்...

Friday, September 22, 2006

நிலாப்பயணம்




கிராமத்து காத்தினிலே


குளித்தெழுந்த முழுநிலா...


பாசும்புல்லின் துண்டெடுத்து


முகம் துடைத்த


வெண்ணிலா...


நீல வான ஆடைதன்னை

கட்டிக்கொண்ட

வான் நிலா...

பாய்ந்து வரும்

ஓடையிலே

அழகு

பார்த்துக்கொண்ட
பெண்நிலா...

ஓர் நாள்

கார் மேகக் கூந்தலிலே
மின்னல் பூவைச்சூடி

பூ வாச "செண்ட்" அடித்து

புறப்பட்டாள் புதுநங்கை...

பயணமோ வெகுதூரம்...


பஞ்சு போன்ற


புல் மெத்தை


வறண்டு போயி


பாழாச்சு...


பயிரிட்ட பாதி நிலம்


வீணாகி நாளாச்சு...


டீ.வி. பொட்டியொன்னு


வந்ததனால்


பாதி ஊரு


கெட்டாச்சு...



அதுவுமில்லை


இதுவுமில்லை


இரண்டும் கெட்டான்


நிலையாச்சு...


ஆளுக்கொரு

கொடியாச்சு


ஆயிரந்தான்


கட்சியாச்சு


கூடியிருந்து பேசுந்திண்ணை


கொலைக்களமாய்


மாறிப்போச்சு...




அத்தனையும் செஞ்சுப்புட்டு


யாரங்கே தூங்கறது!




பட்டணந்தான் போய்வந்தால்


புரிந்திடுமோ ஒருவேளை...




பூ வாச "செண்ட்" அடித்து


புறப்பட்டாள் புதுநங்கை...




எட்டி நடை போட்டு


ஏந்திழையாள் வந்துவிட்டாள்


அலையோசை தனைக்கேட்டு


அங்கேயே நின்றுவிட்டாள்...


குட்டி குட்டி

ஆறுகளும்


கூடுமிந்த கடலோரம்


முன்பு அவள்


கண்ட இன்பம்


நெஞ்சினிலே நினைந்திட்டாள்...


வெளிச்ச கரம் நீட்டி

வீதிவரை வந்துவிட்டாள்...


ஐயோ!


அவள் காண வந்த காட்சி என்ன!


கண்டுவிட்ட கோலமென்ன!




பரந்துநின்ற


மணல்வெளியோ


பாதையோர வீடாச்சு


பகுதிநேர


விடுதியாச்சு...


அலைவீசும் கடலோரம்

மனம் கூசும்


கக்கூசாச்சு...


கொடிகளோடு கூட்டங்களும்


கொள்ளைகளும் கோடியிங்கே


விண்ணைமுட்டும் கட்டிடங்கள்


வீதியில்


வெற்றுடம்பில் இரத்திணங்கள்...


கேளிக்கை கூத்துக்கு


ஹோட்டல்கள் ஒருபக்கம்


கூழுக்குமில்லாத


கூலிகள் தெருபக்கம்...


கட்டிப்போட்ட நாய்குட்டி


கட்டிலோரம் தூங்குறது..


தொட்டில் குழந்தையொன்னு


தெருவோரம் கிடக்கிறது...


மண் பதைக்கும் வித்தியாசம்


மருந்துக்கும் இல்லை


மனிதநேயம்...


தாகம் தீர்க்க


தண்ணியில்லை


காற்றுவாங்க


சோலையில்லை


வீதியோர கொசுவெல்லாம்


விருந்துண்ண ஓடிவர


பட்டணத்து பயங்கரம்


பார்த்துவிட்ட பாவையிவள்


'சிக்குன் குனியா' வருவதற்க்குள்


பறந்துவிட நினைக்கின்றாள்...


ஐயோ!




காலை மணி அடிச்சாச்சு


கரும்புகையே மேகமாச்சு


நீல ஆடை வெளுத்துப்போச்சு


வெள்ளை முகம் கருத்துபோச்சு


தீராத தழும்போடு





தலைதெரிக்க ஓடுகின்றாள்


பாதையெங்கும் வாகனம்


பார்த்து போகநேரமில்லை


ஆராத இரணத்தோடு


பாதியான தேய்நிலா





கால்வலிக்க ஓடிவந்து


கடலினிலே விழுந்துவிட்டாள்


திரும்பி வரும் எண்ணமில்லை


ஆனாலும் வருகின்றாள்


மாதம் ஒருமுறை


முழுநிலவாய்...





நேர்மை தவறாத மனத்தோடு





சோர்ந்திருக்கும் சிலருக்கு


சோதிமுகம் காட்டுகின்றாள்


'கலங்காதீர்' என்றே சொல்லி


காத்திருக்கிறாள்


அவளும்


காலம் மாற...




























































Thursday, September 14, 2006

அனுபவம்


வாழ்க்கையை
அசைபோட நினைத்தால்
குட்டுப்பட்ட
கெட்ட கெட்ட நினைவுகளே
மேலெழும்பி வருகிறது...

மென்று முழுங்கவேண்டியிருக்கிறது...

காலம் அதை ஜீரணிக்க
அறிவுப் பசியாற
அடுத்த மேய்ச்சலுக்கு தயாராகிறது
மனம்
சற்றே கவனமாய்!...

Tuesday, September 12, 2006

தாலாட்டு

  • பட்டுத் துகிலெடுத்து
    தொட்டிலொன்று கட்டிவைத்தேன்
    கட்டிக் கனியமுதே
    கண்ணுரங்க வாராயோ!


    மலர்மேனி நான்அணைத்து
    மடிமீது வைத்திருந்து
    தட்டித் தூங்க வைப்பேன்
    தளிர்க் கொடியே தூங்காயோ!


    வண்ணத்து பூச்சியினம்
    வட்டமிட்டே தாவி வரும்
    பொன்மேனி தனைக் கண்டு
    பூ வெனவே மயங்கிவிடும்..


    கண்ணத்து கதுப்பெடுத்து
    கொத்தவரும் கிளிக்கூட்டம்
    விண்ணத்து மீன்களெல்லாம்
    விளையாடத் தேடிவரும்


    பாட்டெடுத்து பாடிடுவேன்
    பக்கத்தில் துணையிருப்பேன்
    இளங்காலைச் சூரியனே
    எட்டி நீ பார்க்காதே..


    படித்து பட்டம்பெற
    பாடுபடும் அண்ணனங்கே
    பிரித்த பக்கமெல்லாம்
    பேசா உன் சித்திரங்கள்

    கண்டு சினங் கொண்டு
    உன் எதிர் வந்து நின்ற்வனை
    சின்ன இதழ்விரித்து
    சிரித்து வலை வீசிவிட்டாய்

    தொட்டு உனை தூக்கவைத்தாய்
    துள்ளி விளையாடவைத்தாய்
    பாடமெல்லாம் போகட்டும் உன்
    பட்டு மேனி துவளாதோ?


    சிட்டாய் நீ ஓடிவந்து
    சீக்கிரமே தூங்கிவிடு
    காத்திருக்கு எதிர்காலம்
    கண்ணுரங்க நேரமில்லை..


    கலைகள் பல கற்றிடனும்
    கடமை யெல்லாம் செய்திடனும்
    பெரிய பெயர் பெற்றிடனும்
    புகழ்வானில் பறந்திடனும்..


    அன்புக் கொண்டு பிறரிடத்தில்
    அற்புதமாய் வாழ்ந்திடனும்
    தாய்தேசம் தழைக்கவைக்க
    தன்னலமே மறந்திடனும்..


    மயக்கவரும் மாலையிலே
    மான்விழியாள் கண்டுவிட்டால்
    விழித்திருக்க வேண்டிவரும்
    விண்ணுலகம் இறங்கிவரும்..


    இப்போதே தூங்கிவிடு
    இருவிழிக்கு ஓய்வுகொடு
    எப்போதும் காத்திடுவான்
    எம்பெருமான் துனையிருப்பான்




Friday, August 18, 2006

நாளைய இந்தியா


அன்று

சிப்பாய்கள்
கலகத்தில்
சிதைக்கத்தான்
பட்டார்கள்...

எங்கள்
'ஜான்சி ராணி'களும்
'கட்டபொம்மன்'களும்
வீழ்த்தத்தான்
பட்டார்கள்

கொடி காத்த
'குமரன்'களும்
கொல்லத்தான்
பட்டார்கள்
ஆனால்

இன்று

இவர்களின்
முயற்சிகள்
எங்களின்
வெற்றிகளாயின..

வழி காட்டும்
வெளிச்சங்களாயின

இலட்சியப் பாதையில்
சுதந்திரம் சுவாசித்து
வெற்றி நடை
போடுகின்றோம்
நாம்

முடிந்துவிடப்போவதில்லை
எங்கள் முயற்சிகள்

நாளை

புதிய இலக்குகள்
நிர்ணயிக்கப்படும்
இலட்சியங்கள்
எட்டப்படும்
சிகரங்கள்
தொடப்படும்..

சிதைந்து போன
சிப்பாய்களின்
தோள்களில்
கனவுகளைச்
சுமந்து நிற்கும்
எங்களின்
தலைமுறைகள்

நாளைய உலகில்
வெளிச்சம் காட்டும்
வெள்ளியாய்
நிற்கும்

வேற்றுமை
வீண்சண்டை
வெறி கொண்ட அதிகாரம்
வீணர் வாய் பேச்சு
பொய்மை
'களை'
பொசுக்கி
நன்மை வளர்க்கும்
வளம் பெறும்
வல்லரசாகும்...

Friday, August 11, 2006

தமிழமுதம்


கடலோடு காற்று
தோன்றியப் போது
அக் காற்றோடு கலந்தது
எங்கள் மூச்சு
தமிழ் பேச்சு...

கல் கொண்டு மக்கள்
உரசியப் போது
காதல் கொண்டு
கவிதை பேசியது
எங்கள் குடி...
தமிழ் குடி...

காடும் மலையும்
அலையும் கடலும்
வாயலோர் வாழ்வும்
முதற் கொண்டு
கவிதை யாத்தனர்
எம் குடி மூத்தவர்...

பாலையும் கொண்டதிப்பெருமை
பழைமை வாழ்வுக்கோர்
பறைசாற்றும் உரிமை...

எம்மில்,
வீரம் கொண்டு
வாள் பேசிய
வெற்றி வேந்தர்
பலருண்டு..

கல் கொண்டு
காலனை வென்ற
காளையரும்
இங்குண்டு

கடைக் கண் பார்வையால்
காதலை வென்று
கடிமணம் கொண்ட
கற்புடை பெண்டீர்
பொற்புடன் நடத்திய
பாங்கு, எம்
குடும்ப வாழ்விற்க்கோர்
பெரும் சான்று..

பண்புடை நெஞ்சினர்
பரத்தையராயினும்
இவர் பயின்ற கலைகளாயிரம்
இவர் பற்றிய பாக்கள்
பல்லாயிரம்...

இவையணைத்தும்
எம் பாட்டன் சொத்து...

எங்கள் குடியிலோர்
பாட்டி
கோல் கொண்டு நடந்திடும்
மூதாட்டி
'ஔவை'
என்பதவள் பெயர்
அன்பு தன்னில்
வளர்ந்தது
அவளுயிர்...

அறம் செயச் சொல்லி
அவள் அழைத்தது
'ஆத்திச்சூடி'
நாளைய பிள்ளைக்கும்
அது
நல்வழிகாட்டி...

கொன்றை வேந்தன்,
மூதுரை யென்று
அவள் மொழிந்த நூல்
அத்தனையும் முத்து
அள்ளக்குறையாத சொத்து...

வள்ளுவன் என்றொரு முனிவன்
தமிழ் குடியில் பிறந்த
பெருந் தலைவன்
'அறம் பொருளின்பம்' மென்றே
அவன் தந்தது
'தமிழில் ஒரு வேதம்'...

போற்றப் பட வேண்டிய ஒருவன்
தமிழ்த் தாய்க்கு
தவப் புதல்வன்,
அன்னைக்கு
அவன் செய்ததொன்றுண்டு
அரிய சுவடி பலவற்றை
அச்சில் ஆக்கிக்
கொடுத்ததோர் தொண்டு...

அன்பு நெஞ்சில்
மிகக் கொண்டு
நாங்கள் அழைத்த பெயர்
'தமிழ் தாத்தா'
உ.வே.சா. தாத்தா...

'பாரதி' என்னுமோர்
பெயரோ எங்கள்
பரம்பரையில் ஓர்
புதையல்...

அவன்
பாட்டில் வென்றான்
பெரும் பகையை
ஆட்டம் கண்டது
அந்நியராட்சி...
அடைந்துவிட்டோம்
'ஆனந்த சுதந்திரம்'..

அவனுக்குப் பின்னே
அவன் தாசன்
மண்ணில்
மூடப்பழக்கங்கள்
மிதிக்கவாந்தான்.

பெண்ணிண் வாழ்வுக்கு
பெருமை தந்தான்
பொதுவுடைமை பயிருக்கு
நீரைத்தந்தான்.

தீண்டாமை பேதங்கள்
தகர்க்கச் சொன்னான்
அவன்
தூயத் தமிழில்
தீயைச்சுட்டான்.

பாட்டில் சொன்னது
பதச் சோறு
எழுத்தினிடை இருப்போர்
பலநூறு
எங்கள் பரம்பரையின்
வேரு...

இவர்
பாரில் தமிழை
பரப்பிடவே
பலப்பல வடிவங்கள்
புகுத்திவிட்டார்

உரைநடை நாடகம்
நாவல் சிறுகதை
என்றெனவேப்பல
புதிய அணிகலண்
பூணுகிறாள் நாயகி
புதுக்கவிதை யெனும்
கீரீடம் கொண்டாள்...

கணிணி மொழியிலும்
கால் பதித்தாள்
காலத்தை வெல்வாள்
கன்னித்தமிழாள்

இனத்தோடு வளர்ந்தது
தமிழ் மொழி
மொழியோடு வளர்ந்தது
தமிழர் மனம்..

இன்று
ஆக்கம் கொண்டத்துறை
அனைத்திலும்
ஆங்கோர் தமிழன்
அமர்ந்திருப்பபன்

ஏற்றம் கொள்ளும்
தொழில் செய்வான்
ஊக்கம் கொண்ட
உளம் உடையான்..

இனி வீழ்ச்சி
அவனுக்கில்லை,
வீணாண கவலை
மனதுக்குத்தொல்லை

உலகம் உள்ளவரை
வளரும் தமிழ்
வாழ்வான் தமிழன்
வானும் ஆகாது
அவனுக்கோர் எல்லை...












அழகிய வீடு


வந்ததும்
வரவேற்பறை
அந்தப் பக்கமாய்
பெரியதாய்
படுக்கும் அறை...
பாட்டிக்கு-சின்னதாய்,
பக்கத்தில்
பிள்ளைகள்
படிக்கும் அறை...
இங்கிருந்தால்
பணம் கொட்டும்
எங்களுக்கு
என்பதால்
அங்கேயே இருக்கட்டும்
எங்கள்
பண அறை...
சமையலறை
பக்கத்தில்
சாமி அறை...
அக்கரையாய் கட்டியதில்
அம்சமாய் அமைந்தது.
ஆனாலும்
அதிலோர் அம்மணம்
திறந்து கிடப்பதையெல்லாம்
மூடுங்கள்
மரவேலை ஆரம்பம்.
அடுத்தது
'கிரஹப்பிரவேசம்'
வந்தார்
'கட்டிடக்காரர்'
"நன்றாக இருக்கிறது"
சொன்னார்
சுரத்தில்லாமல்
அடடா!
தாயின் கண்களில்
குழந்தையின்
அம்மணம்
தானே அழகு!



Friday, August 04, 2006

எங்கள் வீடு

ஆண் பிரசவித்த
பெண் இவள்.

ஆண்டாண்டு காலமாய்
இவளின் ஆளுமைக்கு
அஸ்த்திவாரமிட்டார்
ஆழமாய்...

ஒவ்வொரு கல்லாய் வைத்து
கொஞ்சம் கொஞ்சமாய்
முன்னேறி
நிமிர்ந்து நிக்க வைத்தார்
கண்டார் கண்படும்
கொள்ளை அழகாய்...

பிறகு
"கட்டிக்கொடுத்துவிட்டார்"
எங்களுக்கு...

எங்கள்
குடும்ப விஷயம்
வெளி கேட்காமலும்
குளிரும் மழையும்
உள் தெரியாமலும்
எங்களை
ஒன்றாக்கி
அணைத்துச் செல்கிறாள்
இவள்

இன்று
எங்கள் கொண்டாட்டங்கள்
துயரங்கள்
எல்லாம்
இவள் மடியில்

எங்கள் பரம்பரைகள்
இவள்
காலடியில்...



Thursday, July 27, 2006

வலி

பிரசவ `வார்ல்` டில்
பேறுக்காக காத்துக்கிடந்தேன்.
பொய் வலிதான்
புறப்பட்டு வந்து விட்டேன்
பாதுகாப்பாய்
பிள்ளைப்பெற...
அந்தோ !
எனக்கு நடந்தது
`அவசர` சிகிச்சை
அறுவை சிகிச்சை
ஆனால்
அவசியமே இல்லாமல்

வலியே இல்லாமல்
குழந்தை
பிறப்பிக்கப்பட்டது.
அழுதது,
சிரித்தது,
வளர்ந்தது...

இன்னமும்
வலித்துக்கொண்டேயிருக்கிறது...
மனம்,
வலிக்காக ஏங்கி...

நிரந்தர வலியை
எனக்களித்தவர்கள்
அங்கே
சிரித்துக் கொண்டேயிருகிறார்கள்
மனங்களை விட்டு
பணங்களை மட்டுமே
`எண்ணி`க் கொண்டு...

Thursday, July 06, 2006

பள்ளிகூடத்தில்
பிள்ளைகள்
படிக்கின்றனர்..

காலை வேளையில்
காதுகினிமையாய்
கேட்கும் ஒலிகளெதுவெனவே!

சிட்டுக் குருவியும்
சின்னக் குயிலும்
மைனாவும் கூவும்
எனவே
மனப்பாடம் செய்கின்றாரவர்..

நன்றேதும் உண்டோ!
என்றேனும் ஓர் நாள்
எவரேனும் கேட்டாரோ?

கட்டிடக் காட்டுக்குள்ளே
கருங்குயிலின் கீதம் தன்னை!

கண்டோரும் உண்டோ!
குருவிகளின் கூட்டம் தன்னை...

மயக்க வரும் மாலையிலே
நீல வான ஓடையிலே
நீந்தி வரும் வெண்ணழகை

கண்டதுண்டோ!
கரும் புகையின்
திரையின்றி...

நின்றதுண்டோ
நெடும் மணற்பரப்பில்
நெத்திலியின் வாசமின்றி...

நிறைந்ததுண்டோ நெஞ்சம்
நீழ் கடலின்
நிசப்தத்தில்...
அலைக்கடலின்
ஆரவாரதில்...

பார்த்ததுண்டோ!
பட்டணத்தில்
படு சுத்தமாய்
ஓர் இடம்...

இளைஞனுக்கு


இளமையின் பாதையில்
முதல் அடி
வாழ்க்கையின்
முதற்படி

புதிதாய் பூத்த மலர் நீ
வாசத்தை வானம்
முழுதும் பரவவிடு..

காலத்தை வீணாக
கழிக்காதே
கடன் வாங்கமுடியாதது அது...

இலட்சியங்களை
கூட்டு
திறமைகளை
பெறுக்கு...

உன் காலடியில்
கிடக்கிறது
எதிர் காலம்
மிதித்துவிடாதே
நீயே அழிவாய்
எடுத்தணைத்துக்கொள்
நீயே வெற்றிபெருவாய்...

மன இருளை
அகற்றி விடு
வெளிச்சமாகும்
உன் இலட்சியப்பாதை...

இளமையை
அசைப்போடுவதே
முதுமை
இளமை மட்டுமே
வாழ்வு...

புரிந்து கொள்
புரிய வை...

பழமைகளை ஜீரணித்து
புதிய விழிப்பு கொள்...

புதிதாய் பார்
புதிதாய் யோசி

உன் பதிலுக்காக
காத்துக்கிடக்கின்றன
பலப் புதிர்கள்...

கட்டிய சோற்றையும்
சொல்லிய சொல்லையும்
மீறி நட...

உணர்வு கொள்
உணர்ச்சி கொள்
இன்பம் கொள்
துன்பம் தேடு...

தோல்விகள்
உன்
முயற்சியின்
உழைப்பின்
வெளிப்பாடுகள்...

சோம்பலின்
முரண்பாடுகள்...
நாளைய உன்
வெற்றிக்கான
ஏணிப்படிகள்.