Tuesday, August 18, 2009

மருந்து வாங்கப் போனேன்.

மருத்துவரைப் பார்த்திடவே
.........மனைவியோடு சென்றிருந்தேன்..
அருந்தவமே நான்புரிந்து
.........அங்குள்ளே சென்றேனே..
ஏறிட்டு முகம்பார்த்து
..........எழுதியதை கொடுத்துவிட்டார்..
ஏதென்று பார்க்குமுன்னே
..........இருநூறு என்றிட்டார்...
எடுத்ததையும் தந்துவிட்டு
...........எழுந்துவந்து விட்டேனே..
மருந்துசீட்டு தன்னோடு
...........மருந்தகந்தான் சென்றேனே...

சீட்டு'பார்த்து சிரித்துவிட்டு
..........எட்டுநூறு ஆகுமென்றான்..
கட்டுபடி ஆகாதே
.........கண்டபடி செலவுசெய்ய!
சின்னதொரு ஜலதோசம்
..........சீக்கிரமாய் மருந்துகொடு..
பட்டென்று என்மனைவி
...........பாய்ந்தங்கே கேட்டிடவே..
சட்டென்று சிலமருந்து
..........எடுத்தவனும் நீட்டிவிட்டான்..
சில்லறையாய் மூனுரூபாய்
............தந்தவளும் வந்துவிட்டாள்...

சோறுதண்ணி இல்லாம
.........சோர்ந்திருப்பாள் என்றெண்ணி
மாலைவந்து பார்க்கையிலே
..........மலைத்துநின்றேன் நானங்கே..
சோர்ந்தமுகம் ஏதுமில்லை
..........சோதிமுகம் காட்டிநின்றாள்..
முல்லைதனைச் சூடியவள்
...........மல்லிகையாய் சிரித்திருந்தாள்
எப்படியோ போகட்டும்
...........இருநூறு வீணாச்சே
இப்படீன்னு தெரிஞ்சிருந்தா
...........அய்யய்யோ வீணாச்சே!!!

Monday, August 17, 2009

அன்பு

என்றொருவர் துன்பென்னால் எள்ளளவும் தீருமென்றால்

அன்றெனது ஆவியையும் ஆர்த்தளிப்பேன்-இன்பவர்க்கு

என்னாலுண் டென்றாலோ எத்துனைதான் துன்பெனக்கு

என்றாலும் ஏற்றிடுவேன் யான்.

மழை

சொந்தமான மண்வெடித்து சோறுதண்ணி இல்லாமல்
பந்தமெல்லாம் வாடினது போதுமய்யா - வந்திங்கே
ஆறெல்லா நீரோட மாமழையாய் பெய்திடய்யா
ஊரெல்லாம் காத்திருக்கே வா.

வாவென்று நானழைத்த மாமழையும் வந்திங்கே
சோவென்று கொட்டுதய்யா பேய்மழையாய் - போவென்று
நான்சொல்ல போயிடுமோ? நாளெல்லாம் பெய்திங்கே
ஏன்கெடுதல் செய்கிறதோ எண்ணு.
[திரு தமிழநம்பி அவர்களின் திருத்தத்துடன்]


மன்றல் - சொல்லுக்கான வெண்பா.

மன்றல் கமழும் மலர்மாலைச் சூடியே
மன்றல் மணக்க மடக்கொடி வந்துற்றாள்
மன்றல்; விரைந்தே மணமகன் தானுமுற்றான்
மன்றல் மகிழ நினைந்து.

மன்றல் கமழும் - மணம் வீசு்ம் மலர்மாலை அணிந்து
மன்றல் மணக்க - தான் நடந்துவரும் தெருவெல்லாம் மணம் வீச
மடக்கொடி வந்துற்றாள் மன்றல் - கொடியைப் போன்ற இடையையுடைய மணப்பெண் திருமணக்கூடம் வந்தாள்.
மன்றல் மகிழ நினைந்து - அவளைக் கூடி மகிழ்வதை எண்ணியவாறே மணமகன்தானும் விரைந்து வந்தான்.
மன்றல் - மணம், நெடுந்தெரு,திருமணக்கூடம், புணர்ச்சி எனப் பல பொருள் தரும்.

படத்திற்கான வெண்பா.


மானம் இழந்தெமது மண்ணை மறந்திங்கு
வானமே கூரையாய் வந்துற்றோ மெம்மை
இரவில்கொல் லும்அரவம், நண்பகலில் நிற்கும்
மரமும் நிழலை மறந்து.
[ ஈழத்தமிழரின்னல் இன்னும் தீர்ந்த பாடில்லை. அவர் மானம் காக்கவும் உயிரைக்காக்கவும் எவரும் இல்லை. இயற்கையும் துணைவரவில்லை. மரம் கூட தன் இலைகளை உதிர்த்து நிழலின்றி காய்க்கிறது.]

Wednesday, August 12, 2009

கண்ணா அருள்வாயா!

கண்ணன் குழலில் ஓர்துளையாய்
..........நானும் ஆக மாட்டேனோ!
மன்னன் அவனிதழ் பட்டூதும்
..........பாஞ்ச சன்னியம் ஆகேனோ!
காலம் சுற்றும் சக்கரமாய்
..........கையில் கிடக்க அருள்வானோ!
ஞாலம் போற்றும் அவனுரையில்
..........நானும் ஒருசொல் ஆகேனோ!

கத்தும் கடலும் காரிருளும்
..........கண்ணன் அழகை காட்டிடுமே
முத்தும், மணியும் அவன்மேனி
..........பட்டு ஒளிரும் நானதுபோல்
நித்தம் கலந்து மெய்ஞானம்
..........பெற்றே சிறக்க வழியுண்டோ!
சித்தம் தெளிய அவனுரைத்தான்
.........."காண்பாய் உன்னுள் எந்தனையே".

Monday, August 10, 2009

'பன்றிக் காய்சல்

பாராய் பரவுமிப் பன்றிக்காய்ச் சல்பாரில்;
தீரா சுரத்தோடு மூச்சடைப்பு - ஆறா
இருமல் சளியென்(று) இவையும் இருந்தால்
மருத்துவ ரைப்பார் விரைந்து.

தொட்டால் பரவுமிது என்பத னால்சற்றே
டெட்டாலிட்(டு) உங்கைக் கழுவு

உன்னால் பரவுதல் வேண்டாயிந் நோய்யிங்கு
என்றால், முகத்தை முகமூடி தன்னால்
கவனமாய் மூடி மருத்து வரைப்பார்
அவரையுங் கொல்லாதே சேர்த்து.

பயந்தால் போகுமோ? பீதி பரப்பும்;
தயவோடு செய்வீர் இதைத்தடுக்க - நோயால்
பாதிக்கப் பட்டிருந்தால் சேராதீர் யாருடனும்
சோதித் தறிவீர் உடன்.


[பயத்தால் பீதியடைந்து மருத்துவமனைக்கு அனைவரும் ஒரே நேரத்தில் செல்வோமானால் அங்கு ஒருவருக்கிருந்தாலும் எல்லோருக்கும் உடனே பரவும். நோயைக் கூட்டிக்கொண்டு வந்துவிடுவோம். எனவே முகமூடியிட்டு அரசு பரிந்துரைத்துள்ள இடங்களில் நோய் இருக்கலாம் என் உங்கள் மருத்துவர் சந்தேகித்து பரிந்துரைத்தால் மட்டும் பரிசோதனைச் செய்து கொள்ள வேண்டும். மருத்துவர் பரிந்துரைக்காமல் மாத்திரையும் எடுத்துக் கொள்ளாதீர்கள்.பக்க விளைவுகள் மிக அதிகமாய் இருக்கும்.]

சர்க்கரை ஆஸ்துமாவோ(டு) இரத்த அழுத்தமென்றால்
அக்கரை வேண்டும் அதிகமாய் எக்கணமும்
சின்னஞ் சிருவர் பெரியோர் தமைசற்றே
கண்ணுங் கருத்துமாய் கா.



Sunday, August 09, 2009

நட்பு

இன்பம் கொடுத்து இரண்டாக்கி, வாழ்வினில்
துன்பம் பகிர்ந்தே துடைத்தெடுத்து -என்றும்
கடிந்துறு சோர்வில் சுடராய், தவறை
இடித்தும் உரைப்பதே நட்பு.

விளக்கம்: வாழ்வின் இனிமைகள் மேலும் மேலும் வளரும் வண்ணம் நட்புடன் கூடி, துன்பத்தை பகிர்வதன் மூலம் அதனை இல்லாததாக்கி , நம் வாழ்வில் என்றும் விரைந்து நம்மை ஆட்கொளளக்கூடியதான சோர்வு நம்மை அடையாவகையில் இருளைநீக்கும் சுடராய் நம் சோர்வை நீக்கி, தவறு செய்யும் போது கண்டித்துக்கூறியும் நம்மை நல்வழிபடுத்துவதே சிறந்த நட்பு.

தன்நலஞ் சற்றே தவிர்.

விண்நோக்கும் வேறுபொருள் காணும் விழியிரண்டின்
கண்மணிகள் தன்னைத்தான் பார்த்ததுண்டோ -மண்மீதில்
என்நலந் தான்பெரி தென்னும் மடநெஞ்சே
தன்நலஞ் சற்றே தவிர்.

விளக்கம்: வானம் போல் உயர்ந்தவற்றை பார்க்கும் கண்மணிகள் தங்களை தானே பார்ப்பதில்லை. அவ்வாறே மனிதனும் பிறர் நலம் காணவேண்டுமேத் தவிர தன்நலம் காணுதல் தவறு.

இன்பமும் துன்பமும்

காலை மலரும் மலர்கள் உலர்ந்தவையே
மாலையில் வீழ்ந்திடும்,வாழ்வெனுஞ் சோலையில்
என்று மதுபோல் இரண்டறச்சேர்ந் தேயிருக்கும்
இன்பமுந் துன்பமு மே.

[பாரசீக கவிஞர். உமர்கய்யாம் பாடல்களை படித்ததின் தாக்கம்]
விளக்கம்: காலையில் மலரும் மலர்கள் மாலையானல் உதிர்ந்து வாடிவிடும்,ஆனாலும் காலையி்ல் மீண்டும் மலர்கள் மலரும். அதுபோல் மனிதன் வாழ்வில் இன்பமும் துன்பமும் மாறிமாறியே தோன்றும். எதுவும் நிலையானதல்ல என்பதால் இன்பத்தில் இறுமாப்படைவதும் துயரில் துவண்டுவிடுதலும் கூடாது. சமமாக பாவித்தால் நிம்மதி இருக்கும்.

Saturday, August 08, 2009

தொடர்வண்டிப் பயணம்

தொட்டிலாய் ஆட்டமிகச் சூடாய்க் குளம்பிவடை;
பெட்டிபல கோர்த்ததொடர் வண்டிப் பயணத்தில்
கூட்டமாய் மக்கள்;கொண் டாடும் குழந்தைகள்
வாட்டமுற செல்லும் பிரிந்து.

[திரு.அமுதா மற்றும் திரு.தமிழ் நம்பி அவர்களின் ஏகப்பட்ட திருத்தல்களுடன்.]

Friday, August 07, 2009

காதல்

இன்னிசை வெண்பாவில்

என்னை உனதாக்கி்க் கொல்லுமது;என்விழியில்
உன்னை விருந்தாக்கிக் கொள்ளுமது;என்னெதிர்நீ
மண்ணில் வரைகோடுங் காட்டுமது உன்னிரு
கண்ணில் வழியு மது.

Wednesday, August 05, 2009

கோமணம்.

கோமணம் என்ற சொல்லுக்காக எழுதியது.

அறுசுவையுண் டிக்கோ மணம்நாவுக் கோமணம்
காற்றுக்கோ மணம்நாசிக் கோமன மாசைத்
துடைத்தொரு கோமணங்கட் டும்ரமண ருக்கோ
மணமுண் டறிவாய் மதி.

ஐம்புலங்களால் நாமுணர்வதெல்லாம் உண்மையானதலல,ரமணர் காட்டும் உண்மை பொருளுக்கே உண்மையான மணமுண்டு.

திரு.அவனடிமையார் இன்னும் அழகாக விளக்கமளித்துள்ளார். அவர் சொல்லிலேயே,' சடலத்துக்கு இல்லாத மணத்தை,உறங்கும் போது உயிர்த்திருந்தும், புலனுறுப்புக்கள் இருந்தும் அறியாத மணத்தை,விழித்ததும் எப்படி அறிகிறோம்? உள்ளே 'நான்' எனும் உணர்வாக ஒளிரும் பகவானுக்கே மணம்'


இன்னல் அகலும் இனி

தன்னந் தனியாய் எனைவிட்டுத் தாய்வீட்டில்
உன்னை யிருத்திய 'ஆடி'போயிற் றேசிறு
மின்னல் இடையாளுன் கன்னல் மொழியால்நம்
இன்னல் அகலும் இனி.

பாவும் தமிழுமினி பாழ்

நலங்குன்றி நாடோறும் தேயும் தமிழை
விலக்கியிங்கு வேறு மொழிபேச-இலக்கின்றி
யாவு மழியும் பிறசொல் புகுந்தாலோ
பாவும் தமிழுமினி பாழ்.

திரு. அறிவுமதியின் கவிதையை வெண்பாவாக்கும் முயற்சி

நெருப்பேற்ற பஞ்சாய் நிலையற் றழிந்துபோகும்
வஞ்சத்தால் வாய்மை யிழந்தான் பெரும்புகழ்
அப்பஞ்சேற் றத்தீயாய் நின்றொளி வீசுமுண்மை
நெஞ்சத்தான் செய்த வினை.

குறள் வடிவில்

நெருப்பிட்ட பஞ்சாய் நிலையற் றழிந்துபோகும்
பொய்யிட்டுச் சேர்த்தான் புகழ்.

பழிக்கும் செயலான் பெரும்புகழ் காலம்
அழிக்கும் விழலாய் விரைந்து.

Wednesday, July 29, 2009

ஈயூர இல்லை இடம்

சாலையெங்கும் வாகனம் சேரும் பெருங்கூட்டம்
காலைமாற்றி வைக்கயிட மின்றிஞாயி[று] மாலையில்
வாயூறும் பஜ்ஜி வகையாய்,-கடற்கரையில்
ஈயூர இல்லை இடம்.
[நம்ம மெரீனா கடற்கரை ஞாயிறு மாலையில் தரும் காட்சி]

Tuesday, July 28, 2009

படம் சொல்லும் பாடல்

[திரு அமுதா கொடுத்த படத்திற்கான வெண்பா]
[கட்டிடக் காடாகிவரும் சென்னையில் இப்பொழுது ஆங்காங்கே சாலையோரப் பூங்காக்கள் அமைக்கிறார்கள். சாலையோரமென்பதால் வாகன சத்தமும்,இடிபடும் அபாயமுமுண்டு. அப்படிப் பட்ட ஒரு பூங்காவிற்குப் பசுமை ஈர்க்க பறந்து வந்துவிடுகிறது ஒரு குருவிக்குஞ்சு. சென்னையின் சகல வித்தைகளையும் அறிந்த பூனை தாயுள்ளத்தோடு சொல்வதாக ஒரு கற்பனை]


கட்டிக் கரும்பே!கேள் வேண்டாம் பிடிவாதம்

எட்டியந்த மின்சாரக் கம்பியிலுன் கூட்டைச்சேர்

பேரபாய முண்டேயிப் பாதையோரப் பூங்காவில்

வேறுபாய மில்லை உணர்.

Monday, July 27, 2009

குறும்பட வெண்பா.

தலைவாரிப் பூச்சூடி கைக்குலுங்க மைதீட்டி
வானவில் லாடை விழிவழியும் எண்ணக்
கனவோடு கண்ணாடி முந்தோன்றக் காராடை
மூடியத வள்மன து.

குறும்படம் காண
http://www.youtube.com/watch?v=O9Ukt5-rXls



மற்றொறு வெண்பா

கட்டுமோ செங்கதிரைச் சின்னதொரு நூற்கயி(று)

எட்டுமோ யென்மனதை யிவ்வாடை -ஒட்ட

எனதுடல் போர்த்தவே யில்லைமறுப் புங்கள்

மனதிலுள்ள் தேகறுப் பு.

Friday, July 24, 2009

"வானம்" அல்லது "மேகங்கள்"

கருத்தமுகில் வாராமல் வெங்கதிரா லிங்கே
வெடித்து நிலமும்பா ழாகக் கரைபடிந்த
மூடமிலேச் சன்போல் கொடுக்க மனமின்றி
வான மிருக்கே வறண்டு.

திரு. இராச குருவின் வானம் அல்லது மேகம் தலைப்பிற்கு எழுதியது.
[சென்னையில் இப்படித்தானே இருக்கு வானம்?]
திரு அமுதாவின் வருத்தம் பாவாக

அழைத்தால் வருமோ அருந்தமிழர்க் குத்தீங்
கிழைத்தல் தகுமோ இழையாய்! -பிழைத்தார்
வடவர் அதனால் மழைவாரா தங்கே!
கிடந்தூர்க அன்றாடங் கெட்டு!

திரு அமுதாவின் வருத்தம் நியாமனதாக் இருந்தாலும்

ஓர்தாலி போனதற்(கு) ஊர்தாலி கொண்டதும்
ஒவ்வாதென் றாயுண்மை; ஆயின் ஒருவரால்
மற்றவர் துன்புறலா மோ'புவியில் நல்லார்
ஒருவர் உளரேல் அவர்பொருட்டெல் லார்க்குமழை'
என்றவோர் கூற்றை மறந்து மனமுடைக்கும்
சொல்லால் சுடுதல் தகுமோ? பிழையிங்கே
ஒருபுறம் பாவம் மறுபுறமோ? தாய்வாட
மைந்தன் மகிழ்வதுவோ? மண்ணுலகில் மாமழை
வேண்டும் மனிதம் செழிக்கமன தாலும்
வசைச்சொற்கள் வேண்டாம் விலக்கு!

என்ற என் ஆதங்கத்திற்கு அமுதாவின் இனிமையான பதில்

பகலில் நிலவினைப் பார்ப்பரி தற்றால்*
வெகுளி* மிடுதியால் மெய்யறிவு கெட்டேன்;
செறிந்த கவிபுனைந்து சேயிழையே!நன்றாய்
அறைந்தீர் இளையோன் அதுகொண்டேன்;வன்சொல்
விலக்கென்றீர் தோழீ! விரைந்தேற்றேன்;இன்சொல்
இலக்கன்றோ யார்க்கும்?! இதனை யுணராது
யாரோ சிலபேர் இழைத்த இடுக்கண்ணுக்(கு)
ஊரே பொருப்பென்(று)உரைத்தேன் இதுதவறே;
'நாயாற் கடியுற்றார் நாடியந் நாயைத்தன்
வாயாற் கடித்த வழக்கில்லை'என்னுங்கால்
எய்தோர் இனித்திருக்க அம்பதனை நோதல்போல்
வைதேன் வசைச்சொல்லால் வையத்து மக்களை;
ஆள்வோர் பிழைத்தால் அருங்குடிகள் என்செய்வார்?
ஆள்வோரை விட்டிங்[கு] அடுத்தவரை நொந்தேனே!
அய்யோ!பிழைசெய்தேன் அம்மா!வெகுளியால்
மெய்யறிவு கெட்டேன்;விரை*தங்கு செய்யமலர்
மீதமர் மாதே! விளம்பக்கேள்! தோழனிவன்
நாத்தழும் பேற்றி நவின்றவுரை தீய்த்தற்கு
மன்னிக்க வேண்டுகிறேன் மாமழையாய்க் கண்ணீரை
அன்புடையுன் தாளுக்[கு] அணிசெய்தேன் அன்றீன்ற
தாயைப் பழிப்பதுவும் தாய்மண்ணைச் சாடுவதும்
தீயிற் கொடியதோர் செய்கை எனத்தேர்ந்தேன்
பெய்கமழை யே!நான் பிறந்தநந் நாடுவளம்
எய்யப் புயலே* எழு.


பார்பரிது அற்றால் -பார்ப்பதற்கு அரிது போல [ஆல்-ஓரசை];வெகுளி-கோபம்;விரை-மணம்;புயல்-முகில்.

அமுதாவின் வேண்டுகோளுக்கிசைந்தாள் அன்னை.

சேய்செய் சிறுபிழை தாய்மறந் தாளிங்கே,
செந்தமிழ்த் தாயின் தவப்புதல்வா, உன்னினிய
நற்றமிழ்ப் பாவால் நலம்கண்டா ளன்னை
வரமாய் பொழிந்தாள் மழை.

[வழக்கம் போல் என் வெண்பாக்களில் பிழைத் திருத்தி, பதிலளித்தும், என்னை இந்த அளவிற்கு வெண்பா எழுதவைத்து,வலைச்சரத்தில் என்னை வெகுவாகப் பாராட்டியும் எனக்கு ஊக்கமளிக்கும் திரு.அமுதாவிற்கு நன்றியுடன்]